மண் அரிமானத்தை தடுக்கும் முறைகள்!

விவசாய நிலங்களில் உழவு செய்யும்போது சரிவிற்கு குறுக்கே உழவு செய்தல் சாலச் சிறந்தது. இதனால் மழைநீர் ஆங்காங்கே சால்களில் தேங்கி நின்று மண்ணின் அடிப்பகுதிக்கு சென்றடையும். இம்முறையில் கூடுதல் செலவு இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பல இடங்களில் உழவர்கள் நிலச்சரிவுக்கு இணையாக உழவு செய்து அதிக மண்ணரிப்பு மற்றும் மழைநீர் அடித்து செல்லுதல் ஆகியவற்றிற்கு ஆளாகி மண்வளத்தை இழக்கின்றனர். இதை தவிர்ப்பதால் உறுதியான பயிர் வளர்ச்சிக்கு வழி ஏற்படுவதோடு விளைச்சலும் அதிகரிக்கிறது.

சாலிற்கு குறுக்கே சிறு வரப்புகள் அமைத்தல் மற்றும் பகுதி பார்ட்டிகள் அமைத்தலும் மண் அரிமானத்தை தடுக்கும். சாலுக்கு குறுக்கே ஆங்காங்கே அரை அடி முதல் முக்கால் அடி பருமன் உள்ள வகையில் சிறு சிறு வரப்புகள் அமைப்பதன் மூலம் நிலத்திலிருந்து மண் மற்றும் மழைநீர் அடித்துச் செல்வது தடுக்கப்படுவதுடன் நிலத்தின் ஈரப்பதம் அதிகரிக்கவும் வழிவகுக்கிறது. மேலும் நிலச்சரிவு 0.5 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் நிலங்களில் வரிசை விதைப்பு செய்திருந்தால், பயிர் விதைத்த 35-30 நாட்களில் வரிசைகளுக்கு இடையே கலப்பையைக் கொண்டு சால்கள் அமைப்பதன் மூலம் மழைநீரை தேங்கச்செய்து மண்ணின் ஈரத்தன்மையை அதிகரிக்கலாம்.

அதேபோல, சம மட்ட வரப்புகள் அமைத்தலும் மண் அரிமானத்தை தடுக்கும். நிலச்சரிவு 2 சதவீதத்திற்கு மேல் 10 சதவீதத்திற்குள் உள்ள இடங்களில் சத்தான மேல் மண் மற்றும் மழைநீரை பாதுகாத்து சேமிக்க சமமட்ட வரப்புகள் இடுவது மிகச்சிறந்தது. இந்த வரப்புகளின் அடிமட்ட அகலம் 130 செமீ அளவில் உள்ளதாக அமைக்க வேண்டும். இதுபோன்ற வரப்புகள் நிலத்தின் நீர்வளம் மற்றும் மண்வளம் காக்க பெரிதும் உதவி புரிகின்றன. பயிர்க்கழிவு நிலைப்போர்வை அமைத்தலும் மண் அரிமானத்தை தடுக்கும். விவசாய நிலங்களில் பயிர்களுக்கு இடையே உள்ளநிலப்பரப்பில் கழிவுப்பொருட்களை (உதாரணமாக ராகிதாள், வாழை மட்டைகள், கரும்புத்தோகை, வைக்கோல் போன்றவை) மண் போர்வையாக இடுவதன் மூலம் நிலத்தில் பெய்த மழை நீரானது அடித்துச் செல்வது தடுக்கப்படுகிறது. நிலத்திலிருந்து நீர் ஆவியாவது தடுக்கப்பட்டு பயிர்களுக்கு நல்ல விளைச்சல் அளிக்கிறது.பயிர்க் கழிவுகளை நிலத்தில் அப்படியே விட்டுவிடுவதால் பயிர்களின் மேற்பரப்பில் நுண்ணுயிரிகள் அதிகமாக வளர்வதுடன் மண்ணின் தன்மையையும், வளத்தையும் மேம்படுத்தும். இதுபோன்ற முறைகளைத் தொடர்ந்து கடைட்பிடித்து வரும்போது பயிர்க் கழிவுகள் மக்கி மண்ணில் உள்ள கரிமத்தன்மையானது அதிகரிக்கும்.

தடுப்பணை அமைத்தலும் மண் அரிமானத்தை தடுக்கும். ஓடைகளில் சிறிய தடுப்பணைகள் கட்டப்படுவதன் மூலம் நீரின் வேகம் குறைக்கப்பட்டு, அடித்துச் செல்லப்படும் மண் மண் துகள்கள் தடுப்பணைகளில் படியும். மேலும் தடுப்பணையின் மேல் பகுதிகளில் மழை நீர் தேக்கப்படுவதால் ஓடையின் இரு புறங்களிலும் தாவரங்கள் வளர வழி ஏற்படுகிறது. இதனால் ஓடை நிலைப்படுத்தப்படுவதுடன் மண் அரிமானம் குறைக்கப்படுகிறது. இதன் மூலம் நிலத்தடி நீரின் வளமும் பெருகும். பண்ணை குட்டைகள் அமைத்தலும் மண் அரிமானத்தை தடுக்கும். மானாவாரி நிலங்களில் பெய்கின்ற மழைநீர் நிலங்களில் இருந்து வழிந்து வீணாக வெளியேறி விடுகின்றன. அதனால் மானாவாரி நிலங்களில் இருந்து வெளியேறும் அதிகப்படியான நீரை பண்ணை நிலங்களில் தாழ்வான பகுதியில் பண்ணைக் குட்டைகள் அமைத்து சேமிக்கலாம். பண்ணைக் குட்டையில் நீரைக் சேமிப்பதற்கு ஏற்ப நமது நிலங்களில் வடிகால்களை அமைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

மழை இல்லாத இக்கட்டான நேரங்களில் பண்ணைக் குட்டைகளில் சேமிக்கப்பட்ட நீரை எடுத்து பயிரை காப்பாற்றலாம். மேலும் பண்ணைக் குட்டையினால் அது அருகே உள்ள கிணறுகள் நீர் ஊற்று பெறுவதுடன் மண் ஈரமும் அதிகரிக்கும். இதில் உள்ள நீரை கால்நடைகளுக்கு நீராகவும் பயன்படுத்தலாம். கசிவுநீர்க் குட்டைகள் அமைத்தலும் மண் அரிமானத்தை தடுக்கும். விளைநிலங்களில் இருந்து வெளியேறி ஓடையின் மூலம் ஓடும் அதிகப்படியான நீரை சேமிக்க ஓடையின் குறுக்கே நீர்த்தேக்கக் குட்டைகள் அமைக்கப்படுவதனால் குட்டையின் கீழ்க் புறத்தில் சுமார் 900 மீட்டர் ஆழத்திற்கு அமைந்துள்ள ஆழ்துளைக் கிணறுகளில் நீர் ஊற்று அதிகரிப்பதுடன், சுற்றிலும் வயல்களில் உள்ள மண்ணின் ஈரமும் பாதுகாக்கப்படுகிறது. இந்த குட்டைகளின் மூலம் கிணறுகளின் பாசனப்பரப்பும் அதிகப்படுத்தப்படுகிறது.

 

Related posts

ஜிஎஸ்டி ரசீதுகளின் அடிப்படையில் 15 நிமிடங்களில் கடன்!.. குறு, சிறு நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் கடன் வழங்கும் எஸ்பிஐ..!!

அரசின் நலத்திட்டங்கள் குறித்து பயனாளிகளிடம் வீடியோ காலில் கேட்டறிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னையில் அதிகரிக்கும் தெருநாய் தொல்லை.. ஆண்டுக்கு 28,000 நாய்களுக்கு இனவிருத்தி கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய மாநகராட்சி நடவடிக்கை!!