குளித்தலை காவிரி ஆற்றில் மணல் திட்டுகள்; புதைகுழிகள் இருப்பதால் பாதுகாப்பாக குளிக்க வேண்டும்: ெபாதுமக்களுக்கு வேண்டுகோள்


குளித்தலை: குளித்தலை காவிரி ஆற்றில் மணல் திட்டுகள் புதைகுழிகள் அதிகம் இருப்பதால் பாதுகாப்பாக குளிக்க வேண்டும் என்று ெபாதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மேட்டூர் அணையில் ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு போதிய மழை இல்லாததால் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடியாத சூழ்நிலை இருந்து வந்தது. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்தனர். தற்போது மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடி தாண்டி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இரு தினங்களுக்கு முன் குறைந்த அளவே உபரி நீர் திறக்கப்பட்டு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. தொடர்ந்து மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் கூடுதல் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் காவிரி ஆறு கரை புரண்டு ஓடுகிறது.

குளித்தலை, முசிறி பாலத்தின் வழியாக காவிரியில் தண்ணீர் கடந்து கடம்பந்துறையை தொட்டுச் சென்றது. ஆடி 18 விழாவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் நில நிர்வாக ஆணையரும், கரூர் மாவட்ட கண்காணிப்பு குழு அலுவலருமான பழனிச்சாமி குளித்தலை கடம்பன் துறை காவிரி ஆற்றில் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு பணி மேற்கொண்டார். தொடர்ந்து வருவாய்த் துறையினர் காவல்துறையுடன் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதனால் வருவாய்த்துறையின காவல்துறையினர் இணைந்து கடம்பன் துறை பெரியபாலம் பரிசல் துறை ராஜேந்திரம் தண்ணீர் பள்ளி மருதூர் ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில் மேட்டூர் அணையில் திறந்து விடப்படும் உபரி நீர் அளவு குறைக்கப்பட்டதால் படிப்படியாக காவிரி ஆற்றில் தண்ணீர் குறைந்து வருகிறது.

இருந்தாலும் ஆங்காங்கே மணல் திட்டுகள், புதை குழிகள் இருப்பதால் பொதுமக்கள் பாதுகாப்பாக குளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாக்ஸ்…தேங்கிய செடி, கொடிகளாலும் ஆபத்து குளித்தலை பெரிய பாலம் பரிசல் துறையில் காவிரி ஆற்றில் குடிநீருக்காக செல்லும் குழாய் தூண்களில் அதிகப்படியான தண்ணீர் வரும் போது செடி, கொடிகள் அடித்து வரப்பட்டு தூண்களில் தேங்கியது. இதனால் அதிக வேகமாக வரும் தண்ணீர் போக்குக்கு வழியில்லாமல் அப்பகுதியிலேயே சுழன்று வருவதால் புதை மணல் குழி நிறைய உருவாக வாய்ப்பு இருக்கிறது. எனவே எவ்வித அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க குடிநீர் குழாய் அடி பகுதியில் தேங்கியிருக்கும் செடி, கொடிகளை அகற்றி சீரான தண்ணீர் செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related posts

தமிழ்நாட்டில் ரூ.2,000 கோடி முதலீடு செய்கிறது ஜேபில் நிறுவனம்

கோவை மேட்டுப்பாளையம் அருகே சாலை விபத்தில் சிக்கிய கார், பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்தது

செப் 10: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை