சனாதனம் குறித்து பேசிய விவகாரம் என் தலை சீவ ரூ.10 கோடி எதற்கு? பத்து ரூபாய் சீப்பு போதும்… அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி

தூத்துக்குடி: சனாதனம் குறித்து பேசிய விவகாரத்தில் என் தலைக்கு ரூ.10 கோடி என சாமியார் ஒருவர் தெரிவித்து உள்ளார். ‘என் தலையை சீவ ரூ.10 கோடி வேண்டாம். பத்து ரூபாய் சீப்பு போதும்’ என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்து உள்ளார். சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை திரித்து, இந்துக்களுக்கு எதிராக பேசியதாக பாஜவினர் அவதூறு பரப்பி வருகின்றனர். இதற்கு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இதற்கிடையே, சனாதனம் குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி என அயோத்தியைச் சேர்ந்த பரகாம்ச ஆச்சாரியா என்ற சாமியார் அறிவித்துள்ளார்.

இதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்து உள்ளார். தூத்துக்குடியில் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக சார்பில் திமுக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு திமுக முன்னோடிகளுக்கு தலா பத்தாயிரம் வீதம் பொற்கிழிகளை வழங்கி பேசியதாவது: சென்னையில் சனாதன எதிர்ப்பு மாநாடு நடந்தது. இதில் வாழ்த்தியா பேச முடியும். எதிர்ப்பாக தான் பேச முடியும். அதே போல கடந்த 2 நாட்களாக எங்கு பார்த்தாலும் சனாதனம் என்ற வார்த்தை தான் கேட்கிறது. ஒட்டு மொத்த இந்தியாவும் என்னுடைய பேச்சை பற்றித்தான் பேசிக்கொண்டு இருக்கிறது. உத்தரபிரதேசத்தில் ஒரு சாமியார் எனது தலைக்கு விலை வைத்துள்ளார். யார் எனது தலையை சீவிக்கொடுக்கிறார்களோ அவர்களுக்கு ரூ.10 கோடி ரூபாய் பரிசுதொகை பேசியுள்ளார். எனக்கு எதற்கு 10 கோடி. பத்து ரூபாய் சீப்பு கொடுத்தால் நானே என் தலையை சீவிக்கொண்டு போய்விடுவேன்.

கலைஞரையும் இவ்வாறு தான் மிரட்டினார்கள். அவரது தலைக்கும் விலை வைத்தார்கள். அவரது தலையை சீவிக்கொண்டு வந்தால் ஒரு கோடி தருவதாக கூறினார்கள். ஆனால் தலைவர் கலைஞர் சொன்னார் என் தலையையே என்னால் சீவ முடியாது. இன்னொருத்தனா வந்து சீவப்போகிறான் என்றார். நான் கலைஞரின் வழியில் வந்தவன். இதற்கெல்லாம் பயப்பட மாட்டேன். சனாதனம் என்றால் பெண்கள் வெளியில் செல்ல முடியாது. மேலாடை அணிவதற்கு அனுமதி கிடையாது என்பது போன்ற அடக்குமுறைகள் இருந்தன. இந்த சனாதன கொள்கையை ஒழிக்க வேண்டும் என்று கூறினேன். ஆனால் பா.ஜனதா பொய்யை பரப்புகிறார்கள். இனப்படுகொலையை தூண்டுவதாக பரப்புகிறார்கள். குஜராத், மணிப்பூரில் இனப்படுகொலையை செய்தது பாஜ தான். பல மாநிலங்களில் என் மீது புகார்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.

Related posts

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

கனமழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 980 கன அடியாக உயர்வு

மின்கம்பி அறுந்து விழுந்து 8 செம்மறி ஆடுகள் பலி