தஞ்சை-நாகை சாலையில் மாரியம்மன் கோயில் சமுத்திரம் ஏரியில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரைகள்: ஜெசிபி மூலம் அகற்றம்


தஞ்சாவூர்: மாரியம்மன் கோவில் பகுதியில் உள்ள சமுத்திரம் ஏரியில் ஆகாயத்தாமரை படர்ந்து இருப்பதை பொக்லின் இயந்திரம் மூலம் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. தஞ்சை-நாகை சாலையில் மாரியம்மன் கோவில் பகுதியில் சமுத்திரம் ஏரி உள்ளது. அந்த காலத்தில் 800 ஏக்கர் பரப்பளவில் காணப்பட்ட இந்த ஏரி இன்றைக்கு 242 ஏக்கர் பரப்பளவாக குறைந்துவிட்டது. இந்த ஏரி மூலம் சுமார் 1,186 ஏக்கர் பரப்பளவு சாகுபடியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஏரிக்கு கல்லணை கால்வாயில் இருந்து தண்ணீர் வரும். இந்த ஏரி நாயக்கர் காலத்தில் வெட்டப்பட்டது. பின்னர் வந்த மராட்டியர்களின் ஆட்சிக்காலத்தில் ஏரி புனரமைக்கப்பட்டது. இந்த ஏரி குறித்த ஓவியம் லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்தில் இடம் பெற்றுள்ளது. இதனை பார்க்கும் போது தஞ்சை நகரில் தொடங்கி மாரியம்மன்கோவில் வரை பரந்து விரிந்து இருந்தது.

மராட்டிய அரச குடும்பத்தினர் இந்த ஏரியில் படகில் பயணம் செய்து மாரியம்மன் கோவிலுக்கு சென்று வந்ததாகவும் கூறப்படுவது உண்டு. இந்த ஏரியில் கடல் போல தண்ணீர் இருந்ததால் சமுத்திரம் ஏரி என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஏரியை சுற்றுலாதலமாக மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்துவந்தனர். கல்லணை கால்வாய் கோட்ட பொதுப்பணித்துறை சார்பில் இதுதொடர்பாக விரிவான அறிக்கை தயார் செய்யப்பட்டது. ரூ.9 கோடி மதிப்பீட்டில் இதற்காக திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது. ரூ.9 கோடி மதிப்பீட்டில் இதற்காக திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு சமுத்திர எரி தற்போது மக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. அங்கு படகுசவாரி, சிறுவர் பூங்கா, பொழுதுபோக்கு மீன்பிடி தளம்,பறவைகள் வந்து தங்கும் வகையில் 3 தீவுகள், குடிநீர், கழிவறை வசதி, வாகனங்கள் நிறுத்துமிடம் போன்றவைய அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது அங்கு தண்ணீர் குறைந்த அளவில் இருப்பதால் படகு சவாரி இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. ஆனால் இந்த ஏரி முழுவதும் ஆகாயத்தாமரைகள் படர்ந்து ஏரியில் தண்ணீர் இருப்பதே தெரியாத அளவுக்கு காணப்படுகின்றன. இந்த ஆகாயத் தாமரைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் அந்த சமுத்திர ஏரியில் படர்ந்து இருக்கும் ஆகாய தாமரையை பொக்லைன் இயந்திரம் மூலம் பணியாளர்கள் அகற்றி வருகின்றனர். அந்த சமுத்திர ஏரியில் தினமும் மாலை நேரத்தில் பொதுமக்கள் அதிகமானோர் தனது குடும்பத்துடன் வந்து செல்கின்றனர். எனவே சமுத்திர ஏரியில் விரைவில் தண்ணீர் நிரப்பப்பட்டு படகு சவாரி ஏற்படுத்தி தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு
சமுத்திர ஏரிக்கு பொதுமக்கள் அதிகளவில் வருகை தருவதால் இந்த பகுதியில் பேருந்து நிறுத்தம் ஏற்படுத்தி தர வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன்

மாநில சுயாட்சி கொள்கையை வென்றெடுக்க உறுதி ஏற்போம்

திருச்சூரில் இருந்து வந்த ஏடிஎம் கொள்ளையர்கள் வெப்படை அருகே பிடிபட்ட பரபரப்பு காட்சி வெளியானது!