திருமயம் கோயில்களில் அமித்ஷா மனைவியுடன் சாமி தரிசனம்

திருமயம்: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள், சத்தியகிரீஸ்வரர், ராஜராஜேஸ்வரி, காலபைரவர், கோட்டை பைரவர் கோயில்களை தரிசிக்க ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கடந்த மாதம் வருவதாக இருந்தது. ஆனால், மதுரையில் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்கு வந்தபோது, வானிலை காரணமாக திருமயம் கோயில் சாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் மீண்டும் திருமயத்தில் உள்ள கோயில்களில் வழிபாடு செய்ய வருகிறார் என கடந்த 2 நாட்களாக ஏற்பாடுகள் நடந்து வந்தன. திருமயம் அருகே லெனாவிலக்கு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் ஹெலிபேடும் அமைக்கப்பட்டது. ஆனால், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் அமித்ஷா நேற்று மதியம் திருச்சி வந்தார். தொடர்ந்து, ஹெலிகாப்டர் மூலம் சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தான் பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த ஹெலிபேட்டில் தரையிறங்கிய அமித்ஷா, கார் மூலம் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருமயம் கோயிலை வந்தடைந்தார்.

முதலாவதாக சத்தியமூர்த்தி பெருமாள் கோயிலுக்கு மாலை 3.30 மணியளவில் அமித்ஷா மனைவியுடன் வந்தார். அங்கு சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து சத்தியகிரீஸ்வரர், ராஜராஜேஸ்வரி மற்றும் காலபைரவர் கோயிலில் நடைபெற்ற அபிஷேகத்தில் கலந்துகொண்டார். அங்கிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள கோட்டை பைரவர் கோயிலுக்கு காரில் சென்றார். அங்கு அமித்ஷா தனது பெயர், ராசி, நட்சத்திரம் கூறி அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினார். பின்னர் நடுரோட்டில் சிதறு தேங்காய் உடைத்து கோட்டை பைரவரை மீண்டும் வழிபட்டார். தரிசனத்தை முடித்து விட்டு ஹெலிகாப்டரில் திருச்சி விமான நிலையம் சென்றார். மாலை 5.25 மணியளவில் திருப்பதிக்கு சிறப்பு விமானம் மூலம் சென்றார். அமித்ஷா வருகையையொட்டி திருமயம் கோட்டை பைரவர் கோயிலில் பக்தர்களுக்கு வழிபாடு செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. அப்பகுதியில் இருந்த கடைகளும் மூடப்பட்டது.

 

Related posts

குனோ தேசிய பூங்காவில் சிவிங்கி புலிகளை காக்க தென்ஆப்பிரிக்காவில் இருந்து தைலம் இறக்குமதி

பாஜவை நாட்டை விட்டு வெளியேற்றுவோம்: ஹேமந்த் சோரன் சூளுரை

பனி லிங்கத்தை தரிசிக்க 6,619 பக்தர்கள் அடங்கிய 3வது குழு அமர்நாத் பயணம்