சம்பா பட்டத்திற்கேற்ற வாடன் சம்பா!

சம்பா பட்டத்திற்கான காலம் நெருங்கிவிட்டது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் சம்பா பட்டம் பயிரிடப்படுகிறது. இந்தப் பட்டத்திற்கு நமது பாரம்பரிய நெல் ரகமான வாடன் சம்பா மிகவும் ஏற்றது. நேரடி விதைப்பு மற்றும் நாற்றங்கால் வைத்து நடவு செய்தல் என இரண்டு முறைகளுக்கும் இது உகந்தது. பயிரிடுவதற்கு முன்பு நிலத்தை நன்றாக வளப்படுத்த வேண்டும். கோடை உழவு போல இரண்டு முறை நிலத்தை நன்கு உழுது பசுந்தாள் உரம் அல்லது நன்கு மட்கிய தொழுவுரம் இட வேண்டும். சுமார் பதினைந்து நாட்களில் பசுந்தாள் தளிர்கள் பூவெடுத்த பிறகு நன்கு மடக்கி உழ வேண்டும். பிறகு இதில் நீர்ப் பாய்ச்சினால் நான்கைந்து நாட்களில் மட்கிப்போகும். இதன்பிறகு ஒருமுறை உழவு ஓட்டி நடவு செய்யலாம். வாடன் சம்பாவுக்கு காய்ச்சலும் பாய்ச்சலுமான பாசன வசதியே போதுமானது. வாடன் சம்பா வறட்சியையும் தாங்கி வளரும். மழை பெய்தாலும் வளரும். சுமார் 4 அடி உயரம் வரை வளரும் தன்மை கொண்டது. இதனால் மழைநீர் தேங்கினாலும் சமாளித்து நிற்கும்.

பயிர் நன்கு வளர்ந்து வரும்போது ஒரே ஒருமுறை மூலிகைப் பூச்சி விரட்டி வைக்கலாம். பிறகு ஒருமுறை பஞ்சகவ்யம் கொடுத்தால் விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும். வாடன் சம்பா பொதுவாக பூச்சி, நோய்த் தாக்குதலுக்கு எதிரான தன்மை கொண்டது. இதனால் பெரிய அளவில் நோய் மேலாண்மை இருக்காது. இது 140 நாள் கொண்ட பயிர். இருப்பினும் இதன் நெல் மணிகள் கொட்டும் தன்மை கொண்டவை என்பதால் இவற்றை 10 நாட்களுக்கு முன்பாகவே அறுவடை செய்ய வேண்டியது அவசியம். சிறப்பான முறையில் வயலை சமன்படுத்தி, வளமாக்கி, களை நீக்கி, பஞ்சகவ்யம், மூலிகைப் பூச்சிவிரட்டி ஆகியவற்றைப் பயன்படுத்தி பயிரைக் பாதுகாத்து வந்தால் வாடன் சம்பாவில் ஏக்கருக்கு இருபத்தைந்து மூட்டைகள் வரை விளைச்சல் கிடைக்கும். வாடன் சம்பாவுக்கு தற்போது சந்தை மதிப்பு மெல்ல அதிகரித்து வருகிறது. தற்போது பொதுவாகவே பாரம்பரிய நெல் ரகங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. மருத்துவக்குணம் கொண்ட வாடன் சம்பாவுக்கு கூடுதலாகவே மதிப்பு இருக்கிறது. வாடன் சம்பாவில் சமைக்கப்படும் சோறு நன்றாக ஜீரணம் ஆகும் என்பதால் குழந்தைகளுக்கு ஊட்டப்படும் முதல் சோறு வாடன் சம்பா சோறாக இருக்க வேண்டும் என தொன்று தொட்ட நம்பிக்கை இருந்துவருகிறது. இத்தனை சிறப்பம்சம் கொண்ட வாடன் சம்பா நெல்லை இந்த சம்பா பட்டத்தில் விவசாயிகள் பயிரிட்டு நல்ல லாபம் பார்க்கலாம்.

Related posts

இஸ்லாமியர்கள் பற்றி அவதூறாக பதிவிட்ட பாஜக பிரமுகருக்கு நிபந்தனை முன்ஜாமீன்

முண்டந்துறை வனப்பகுதியில் சாலை அமைக்காதது ஏன்? : ஐகோர்ட்

இளைஞர்களை தாக்கிய வழக்கில் பாடகர் மனோவின் மகன்கள் 2 பேருக்கு நிபந்தனை முன்ஜாமின்!