டெல்டா மாவட்ட திடீர் விசிட்டின்போது முக்கிய நிர்வாகிகளுக்கு சேலத்துக்காரர் விட்ட டோஸ் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘தனி காக்கியோட டீலிங் இல்லாம எதுவுமே நடக்குறதில்லையாமே..’’ என முதல் கேள்வியை கேட்டார் பீட்டர் மாமா. ‘‘வெயிலூர் மாவட்டம் காட்டுப்பாடி தாலுகாவுல மேல் என தொடங்கி பாடியில முடியற காக்கிகள் நிலையம் இருக்குது.. இங்க தனியா இருக்குற பிரிவுல காக்கி ஒருத்தரு பணிபுரிஞ்சு வர்றாரு… இவரு இந்த காக்கிகள் நிலைய லிமிட்ல 9 வருஷமா இருக்குறாராம்.. எத்தனையோ ஸ்டார் காக்கிகளை இவர் பார்த்துட்டாராம்.. இவர் என்ன சொல்றாரோ அதுதான் ஸ்டேஷன்ல நடக்குமாம்…

இந்த லிமிட்ல பர்மிஷன் இல்லாம 5 பார் நடக்குதாம், அதுவும் இவர் கண்ட்ரோல் தானாம்.. அதுல ப வைட்டமின் கொட்டோ கொட்டுன்னு கொட்டுதாம்.. அதோட, மணல் கடத்தல், சரக்கு விற்பனைனு காக்கிகள் நிலையத்துக்கு தகவல் யாராவது சொன்னா, அவங்க தகவல் யாரை பத்தி சொல்றாங்களோ அவங்க கிட்டயே போட்டு கொடுத்து பெரிய தொகையை பார்த்துடுவாராம்.. இதுல பக்கத்து ஸ்டேட் ஆந்திராவுல இருந்து போற கடத்தல் வாகனங்கள் எல்லாத்துக்கும் இவரு டீலிங் இல்லாம எதுவும் நடக்குறதில்லையாம்…

9 வருஷமா பழம் சாப்பிட்டு கொட்டை போட்டதால, எல்லா விஷயமும் இவருக்கு அத்துபடியாம்.. இதனால தனி காட்டு ராஜாவா செயல்பட்டு வர்றாராம்… உயர் காக்கிகள் நிலவரத்தை விசாரிச்சு நடவடிக்கை எடுக்கணுங்கிற கோரிக்கையை குறையாக சொல்றாங்க..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கடலோர மாவட்டத்தில் நடந்த ரகசிய மீட்டிங்கில் முக்கிய நிர்வாகிகளுக்கு சேலத்துக்காரர் டோஸ் விட்டாராமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.

‘‘டெல்டா மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சேலத்துக்காரர் நேற்று முன்தினம் வந்திருக்கிறாரு.. தொடர்ந்து, கடலோர மாவட்டத்தில் திடீரென விசிட் அடித்த சேலத்துக்காரர், மாஜி அமைச்சர் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் ரகசிய மீட்டிங் நடத்தினாராம்… இந்த மீட்டிங் 10 நிமிடங்களுக்கு மேல் நீடித்ததாம்… முக்கிய நிர்வாகிகள் தவிர, மற்றவர்கள் யாரும் அனுமதிக்கப்பட வில்லையாம்.. அந்த அளவுக்கு ரொம்பவும் சீக்ரெட்டாக மீட்டிங் நடத்தப்பட்டதாம்…

இதில், மாஜி அமைச்சர் மற்றும் முக்கிய நிர்வாகிகளை சேலத்துக்காரர் கடிந்து கொண்டாராம்.. நிர்வாகிகளுக்குள் இருந்து வரும் கோஷ்டி பூசலை கைவிட்டு விட்டு அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றணும்.. இல்லை என்றால் பொறுப்பில் இருந்து நிர்வாகிகள் மாற்றப்படலாம்னு எச்சரிக்கை விடுத்திருக்கிறாரு.. ஆனால், சேலத்துக்காரரின் இந்த எச்சரிக்கையை முக்கிய நிர்வாகிகள் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையென தொண்டர்களுக்குள் பேசிக்கிட்டாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘வீட்டுமனைக்கு ஒரு ரேட், ஏக்கர் கணக்குன்னா ஒரு ரேட் என பிக்சட் செய்து பத்திரப்பதிவு ஆபீசுல லஞ்ச வசூல் ஜோரா நடக்கிறது தெரியுமா?..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘சென்னைக்கு அருகே சத்திரம் என முடியும் ஊர்ல உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருது.. இது, கடந்த 2020ல் தான் தொடங்கப்பட்டது. தற்போது, ஏராளமான பன்னாட்டு தனியார் தொழிற்சாலைகள் கட்டப்பட்டு வருவதால சுற்று வட்டார பகுதிகளில் நாளுக்கு நாள் நிலத்தின் மதிப்பு அதிகரிச்சிட்டு வருது..

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்தும்கூட சத்திரம் சார் பதிவாளர் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள கிராமங்களில் நில விற்பனை படுஜோராக நடக்கிறதாம்.. இதனால் இந்த அலுவலகத்தில் நாள் ஒன்றுக்கு 100க்கும் மேற்பட்ட நில பத்திரப்பதிவு செய்யப்படுகிறதாம். இதை காரணம் காட்டி அதிகாரிகளும் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை கறாராக லஞ்சம் கேட்பதா புகார் எழுந்துருக்கு… அதுவும் அரசால் நிர்ணயிக்கப்பட்ட நிலத்தின் வழிகாட்டி மதிப்பீட்டு தொகையில் பத்திரம் வாங்கணும்.

அந்த வகையில், வீட்டுமனை பத்திரப்பதிவுக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம், ஏக்கர் கணக்கில் பத்திரப்பதிவு செய்யணும்னா ஊழியர்களுக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம், அலுவலக அதிகாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம்னு தனித்தனியா தொகையை நிர்ணயித்து இருக்காங்களாம்.. பணம் கொடுக்க மறுத்தா ஆவணங்கள் பதிவு செய்யப்படாம இழுத்தடிக்கிறாங்களாம்.. அதோடு இல்லாம அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்யும் முன்னே பணத்தை கொடுக்கணும்னு எழுதப்படாத சட்டமும் இருக்கிறதாம்…

இதனால கையூட்டு பெரும் அதிகாரிகளை கண்டறியணும், லஞ்ச ஒழிப்பு ரெய்டு நடத்தணும்னு பாதிக்கப்பட்டவங்க குரல் ஒலிக்க தொடங்கியிருக்காம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ஆய்வு என்கிற பெயரில் ஒரே ஓட்டலில் ஐந்து லகரம் ஆட்டய போட்ட மாநகராட்சி அதிகாரி பற்றி தெரியுமா…’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கோவை மாநகராட்சியில் தமிழ் கடவுளின் மற்றொரு பெயர் கொண்ட ஒரு உதவி கமிஷனர் பணிபுரிகிறாரு..

இவர், அலுவலக பணிகளில் படு ஸ்டிரிக்ட்டாக இருப்பதுபோல் காட்டிக்கொண்டு, வசூலில் மட்டும் உச்சம் தொடுகிறாராம்.. தனது டேபிளுக்கு வரும் பைல்களை அக்கு வேர், ஆணி வேராக அலசி ஆராய்ந்து பார்த்து எவ்வளவு தேறும்னு வெயிட் போடுகிறாராம்.. ‘‘ஒன்றும் தேறாது” என கணித்து விட்டால் அந்த பைல் அந்த இடத்தை விட்டு நகர்வதே இல்லையாம்.. குடிநீர் இணைப்பு, சொத்து வரி விதிப்பு, குடிநீர் மற்றும் சொத்து வரி பெயர் மாற்றம் என சாதாரண பணிகளைக்கூட செய்து கொடுப்பது இல்லையாம்..

கவுன்சிலர்கள் ஏதேனும் பணிகளுக்கு பரிந்துரை செய்தால், அதை வேண்டுமென்றே கிடப்பில் போட்டு விடுகிறாராம்.. சமீபத்தில் நேரு ஸ்டேடியம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் ஆய்வு என்ற பெயரில் அது சரியில்லை… இது சரியில்லைன்னு குற்றம் கண்டுபிடித்து ரூ.5 லட்சம் வரை ஆட்டையை போட்டு விட்டாராம்..

இதே பகுதியில், மாநகராட்சி முதியோர் பூங்காவின் ஒரு பகுதியை சில தனியார் ஆக்கிரமித்து மாட்டுப்பண்ணை நடத்தி வருகிறார்களாம்.. ஆனால், அதுதொடர்பா நடவடிக்கை எடுக்க மறுக்கிறாராம்.. அந்த ஆக்கிரமிப்பை அகற்ற மறுத்து ஒதுங்கிக்கொள்கிறாராம்.. இது ஏன் என தெரியவில்லை.. இதில் உள்ள மர்மமும் புரியவில்லை.. என ஆதங்கப்படுகின்றனர் சில நியாயமான மாநகராட்சி ஊழியர்கள்..’’ என முடித்தார் விக்கியானந்தா.

Related posts

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!