சேலம்காரரை பற்றி எதுவும் பேசாத சின்ன மம்மி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘சின்ன மம்மியின் தென் மாவட்ட சுற்றுப்பயணத்தின் பரபரப்பு பற்றி சொல்லுங்க…’’ என ரொம்பவே ஆர்வமாக கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘தென் மாவட்ட சுற்றுப்பயணம் அறிவித்த சின்ன மம்மி தென்காசியில் இருந்து இலைக்கட்சி தொண்டர்களை சந்திக்கும் பயணத்தை தொடங்கிட்டாரு.. அவரது சுற்றுப்பயணம் என்றதுமே தென் மாவட்டங்களில் பெரும் பரபரப்பு காணப்பட்டது. அவர் என்ன பேசப் போகிறார்னு இலைக்கட்சியினர் மத்தியிலும் பெரிய எதிர்பார்ப்பு இருந்துச்சு..

சிதறு தேங்காய் போல் நொறுங்கிப்போன கட்சியை ஒவ்வொரு துண்டாக ஒன்று சேர்த்து விடுவாரோ என்ற ஆவலும் ஏற்பட்டது. ஆனால் அவரது சுற்றுப்பயணத்திற்கு பிறகு அனைத்து எதிர்பார்ப்புகளும் காற்றுப்போன பலூன்போல புஸ்சுன்னு போயிட்டாம்.. காரணம், சுற்றுப்பயணத்தின்போது இலைக்கட்சியின் சேலம்காரரை பற்றி அவர் வாயே திறக்கவில்லையாம்.. அதுமட்டுமல்ல, நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் இலைகட்சி படுதோல்வியை சந்தித்திச்சிருக்கு..

அந்த தேர்தலை பற்றியோ, இலைக்கட்சியின் தோல்வி பற்றியோ சின்ன மம்மி எதுவும் பேசவே இல்லையாம்.. 8 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தவர் இப்போது திடீரென சுற்றுப்பயணம் செய்தால் அரசியல்பற்றி என்ன பேச முடியும்.. யார் தான் ரசிப்பார் என்கின்றனர் இலைக்கட்சியினர். போதாக்குறைக்கு அவரது பேச்சை கேட்க வந்தவர்கள் பலர் பிக்பாக்கெட் திருடர்களிடம் பணத்தையும், செல்போன், நகைகளையும் பறிகொடுத்ததுதான் மிச்சமாம்.. இதுதான் சின்ன மம்மி சுற்றுப்பயணத்தோட தென் மாவட்ட பரபரப்பு…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘டியூட்டி போடுறதுல பாரபட்சம் காட்டுறதா ஊர்க்காவல் படையில் குமுறல் ஒலிக்க தொடங்கி உள்ளதாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘குயின்பேட்டை மாவட்டத்துல நூற்றுக்கு மேற்பட்ட ஊர்க்காவல் படையினர் பணியாற்றி வர்றாங்க.. இவங்களுக்கு மாதத்துல 5 நாள் மட்டும் பணி வழங்குறாங்க.. இதுல தொடர்ந்து பணிக்கு வராத ஊர்க்காவல் படையினர்கிட்ட, அங்க இருக்குற 3 எழுத்து ரைட்டர் ஒருத்தரு சம்திங் வாங்கிட்டு, 5 மாதம் கழித்து பணிக்கு வந்தாலும் டியூட்டி கொடுக்குறாராம்..

இதனால தொடர்ச்சியாக பணிக்கு வர்றவங்களுக்கும், சம்திங் கொடுத்து பணிக்கு வர்றவங்களுக்கும் வித்தியாசம் இல்லாம போகுது, பாரபட்சம் காட்டுறாங்கன்னு புலம்புறாங்க. அதுமட்டுமில்லையாம், ஏதாவது நிகழ்ச்சிக்கு போகணும்னா முன்கூட்டியே சொல்றதில்லையாம்.. திடீர்னு வரசொல்லி கட்டாயப்படுத்துறாங்களாம்.. ஊர்க்காவல் படையினருக்கு மாசத்துல 5 நாள் பணி வழங்குறாங்க, அதையும் தொடர்ச்சியாக வழங்குறதால தொழிற்சாலைகள்ல வேலைக்கு போய்கிட்டே, ஊர்க்காவல் படையில பணிபுரியுறவங்க மிகுந்த மன உளைச்சல்ல இருக்குறாங்களாம்..

இதனால சம்பந்தப்பட்ட மாவட்ட உயர்காக்கி விசாரிச்சு, நடவடிக்கை எடுக்கணும்னு குரல் ஒலிக்க தொடங்கியிருக்கிறது..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ஒரே இடத்தில் ஆண்டுக்கணக்கில் உட்கார்ந்துக்கிட்டு ஏட்டம்மா போடும் ஆட்டம் எப்படின்னு தெரியாம குழப்பத்தில் தவிக்கிறாங்களாமே சக பெண் காக்கிகள்..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘திருப்பூர் மாநகர காவல்துறையில், காவல் கட்டுப்பாட்டு அறையில் திரையுலகில் பிரபல டுவின் சிஸ்டர்ஸ் அக்கா நடிகை பெயர் கொண்ட பெண் தலைமை காவலர் ஒருவர் பணியாற்றி வர்றாரு..

இவர், உயர் அதிகாரிகளின் துணையோடு பல ஆண்டுகளாக இங்கேயே இருக்கிறாராம்.. திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனரகம் தொடங்கப்பட்ட நாளில் இருந்தே இங்குதான் பணியாற்றி வருகிறாராம்.. இவரை வேறு இடத்துக்கு இடமாறுதல் செய்தாலும், ஏதாவது ஒரு காரணத்தை கூறி, மீண்டும் இங்கேயே வந்து அமர்ந்து கொள்கிறாராம்.. அப்படி என்னதான் இந்த இடத்தில் கிடைக்கிறதுன்னு தெரியவில்லை என்கிறார்கள் மற்ற பெண் காக்கிகள்.

இவர், வாக்கி டாக்கியில் பேசும்போது, சக போலீசாரை தரக்குறைவாக பேசி வருகிறாராம்.. இது, காவல்துறை வட்டாரத்தில் பெரும் புகைச்சலை கிளப்பி இருக்கிறது.. இவர், ரகசிய வழியில் கரன்சி குவிப்பதிலும் கில்லாடியாம்.. ‘அது எப்படி…ம்மா….? எங்களுக்கும் கொஞ்சம் சொல்லிக்கொடு தாயே.?’ என சக பெண் காக்கிகளே கிண்டல் அடிக்கின்றனராம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘டெல்டா மாவட்ட இலைக்கட்சி நிர்வாகிகள் மீது அதிருப்தியால அதிரடி மாற்றத்தை ஏற்படுத்த சேலத்துக்காரர் முடிவு செய்துள்ளாராமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘நெற்களஞ்சியம், மனுநீதி சோழன், கடலோரம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இலைக்கட்சியில் உள்ள மூத்த நிர்வாகிகள் மற்றும் முக்கிய நிர்வாகிகள், சின்ன மம்மியை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என மறைமுகமாக குரல் கொடுத்து வருகிறார்கள். இந்த தகவலை சேலத்துக்காரர் கவனத்துக்கு அவரது டீம் கொண்டு சென்றதாம்.. இதை கேட்டு அதிருப்திக்குள்ளான சேலத்துக்காரர், அந்த நிர்வாகிகள் யார் யார் என்பது குறித்து லிஸ்ட் எடுக்கும்படியும், அவர்களது நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணிக்கவும் தனது டீமுக்கு உத்தரவு போட்டுள்ளாராம்.

இதனை தொடர்ந்து அந்த டீம் அதற்கான திரைமறைவு வேலையில் இறங்கியுள்ளதாம்… இந்த டீம் கொடுக்கும் அறிக்கையின்படி, டெல்டா மாவட்டத்தில் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்த சேலத்துக்காரர் முடிவு செய்து இருக்கிறாராம்.. எந்த மாதிரியான மாற்றதை ஏற்படுத்தலாம் என்பது குறித்து நெருங்கிய முக்கிய நிர்வாகிகளுடன் சேலத்துக்காரர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு இருக்கிறராம்… இந்த விவகாரம் வெளியில் கசிந்ததால் டெல்டா மாவட்ட நிர்வாகிகள் கலக்கத்தில் இருந்து வருகிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

Related posts

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்

மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த காகம்: முதல் உதவி செய்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர் – குவிந்து வரும் பாராட்டு