சேலம் அருகே அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் புழுக்கள்!: புகார் கூறிய மாணவிகளை முட்டி போட வைத்த தலைமை ஆசிரியை.. மாணவிகள் எதிர்ப்பு..!!

சேலம்: சேலம் மாவட்டம் கோட்டை மாநகராட்சி அரசு மேல்நிலைப் பள்ளி குடிநீர் தொட்டியில் புழுக்கள் இருப்பதாக மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சேலம் கோட்டை பகுதியில் மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் மாணவிகளுக்காக தனியாக கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. அதேபோல பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்காக மேல்நிலைத்தொட்டி அமைக்கப்பட்டு அந்த தொட்டியில் இருந்து பைப்புகள் மூலமாக தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, குடிநீர் தொட்டியில் புழுக்கள் இருப்பது குறித்து கடந்த 2 நாட்களாக மாணவிகள் புகார் அளித்து வந்துள்ளனர். பள்ளி கழிவறை சுகாதாரமற்ற முறையில் இருப்பதாகவும், பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டி மூடப்படாமல் குப்பை கூளங்களாக இருப்பதாகவும் மாணவிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பான வீடியோக்களையும் மாணவிகள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இந்த நிலையில், புகார் கூறிய மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர் கண்டித்ததுடன் மட்டுமின்றி, முட்டி போட வைத்து தண்டித்துள்ளார். இதற்கு மாணவிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தலைமை ஆசிரியை தமிழ்வாணியை கண்டித்து 200க்கும் மேற்பட்ட மாணவிகள் வகுப்பறையை புறக்கணித்து பள்ளி வளாகத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சுகாதாரமற்ற முறையில் இருக்கும் கழிவறையை சுத்தப்படுத்த வேண்டும். பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும். மாணவிகளை கண்டிக்கக்கூடாது என கோரிக்கை விடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது தலைமை ஆசிரியர் தமிழ்வாணி, மாவட்ட கல்வி அதிகாரி ஆகியோர் மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து மாணவிகள் சமாதானம் அடைந்துள்ளனர்.

Related posts

அரசியல் ஆதாயத்துக்காக கொலை நடந்ததற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை: கூடுதல் கமிஷனர் அஸ்ரா கார்க் பேட்டி

சைக்கிளில் சென்று மக்களிடம் குறைகளை கேட்ட திமுக எம்பி

நேற்று 4 தீவிரவாதிகள் பலியான நிலையில் ராணுவ முகாம் மீது இன்று தாக்குதல்: 2 வீரர்கள் வீரமரணம்