சேலம் பெரியார் பல்கலையில் உள்ள தனி அறையில் ஜெகநாதனுடன் 25 நிமிடம் ரகசிய ஆலோசனை ஊழல் வழக்கில் சிக்கி கைதான துணை வேந்தருக்கு ஆதரவு திரட்டிய ஆளுநர்: ‘அனைவரும் துணை நிற்க வேண்டும்’ என்று துறைத்தலைவர்களிடம் பேச்சு; பிரச்னைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை என மிரட்டல்

சேலம்: எங்களை போல நீங்களும் துணைவேந்தருக்கு ஆதரவாக இருங்கள் என்று சேலம் பெரியார் பல்கலைக்கழக துறைத்தலைவர்களிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தினார். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பூட்டர் பவுண்டேசன் என்ற தனியார் நிறுவனம் தொடங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். இதனிடையே, துணைவேந்தர் ஜெகநாதனை சந்தித்து பேசுவதற்காக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று பெரியார் பல்கலைக்கழகத்திற்கு வந்தார். பகல் 12.50 மணிக்கு பல்கலைக்கழகம் வந்த அவருக்கு துணைவேந்தர் ஜெகநாதன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

பின்னர் துணைவேந்தரின் அறைக்குச் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, அவருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது துணைவேந்தர் மீது தற்போது போடப்பட்டுள்ள வழக்கின் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்த ஆளுநர், இந்த விவகாரத்தில் தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாகவும், தைரியமாக வழக்கை எதிர்கொள்ள அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. சுமார் 25 நிமிடத்திற்கு நடந்த இந்த சந்திப்பின்போது, ஆளுநர் மற்றும் துணைவேந்தர் ஆகியோர் மட்டுமே அறையினுள் இருந்துள்ளனர். தொடர்ந்து சிண்டிகேட் கூட்ட அரங்கில் பல்கலைக்கழகத்தின் துறைத் தலைவர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது துணைவேந்தர் மீதான வழக்கு தொடர்பாக ஆளுநர் பேசியுள்ளார்.

இதுகுறித்து பேராசிரியர்கள் கூறுகையில், ‘‘துணைவேந்தருக்கு தனது முழு ஆதரவையும் தெரிவிக்கும் வகையிலேயே ஆளுநரின் வருகை மற்றும் ஆலோசனை கூட்டம் இருந்தது. குறிப்பாக ஆளுநர் பேசும்போது, ‘துணைவேந்தரின் கைது நடவடிக்கைகளை பார்த்திருப்பீர்கள். இவை ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை. அதேசமயம், அவரை கைவிட மாட்டோம். ஆதரவாக இருப்போம். தேவை ஏற்பட்டால் சட்ட போராட்டம் நடத்துவோம். இந்த விவகாரத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நீங்கள் துணைவேந்தருக்கு துணை நிற்க வேண்டும். எங்களைப் போல, நீங்களும் அவருக்கு ஆதரவாக இருக்க வேண்டும்,’’ என்று ஆளுநர் தெரிவித்தார். சுமார் 4 நிமிடங்கள் மட்டுமே இந்த கூட்டம் நடந்தது,’’ என்றனர்.

பெரியார் பல்கலைக்கழக அலுவலர்கள் சந்திப்பு என்ற பெயரில், துணைவேந்தருக்கு அரை மணிநேரம் ஆதரவு தெரிவித்துவிட்டு, பெயரளவில் துறைத் தலைவர்களிடம் ஓரிரு நிமிடங்கள் மட்டும் ஆளுநர் பேசிவிட்டு சென்றதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. ஊழல் சிக்கி கைதான துணைவேந்தருடன் ரகசிய ஆலோசனை நடத்தியது மட்டுமில்லாமல், அவருக்கு அனைவரும் துணை நிற்க வேண்டும் என்று துறை தலைவர்களிடம் ஆதரவு திரட்டி உள்ளது, துணைவேந்தர் ஜெகநாதனை காப்பாற்ற ஆளுநர் துடிக்கிறாரா என்று பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்கள், கல்வியாளர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

* ஆளுநரின் அமோக ஆதரவு பட்டியலினத்தவர் அதிர்ச்சி
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீது மோசடி உள்ளிட்ட சில பிரிவுகளுடன், பட்டியலினத்தனவர்களை அவதூறாக பேசியதாக வன்கொடுமை வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. துணைவேந்தர் ஜெகநாதனின் ஜாமீன் தொடர்பான விசாரணையும் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று பல்கலைக்கழகத்திற்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, துணைவேந்தர் ஜெகநாதனுக்கு தனது முழு ஆதரவையும் தெரிவித்துள்ளதுடன், அவருக்கு உதவி புரிவதாகவும் உறுதியளித்துள்ளார். சாதி ரீதியிலான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டும் துணைவேந்தருக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி ஆதரவு தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, வன்கொடுமை வழக்குப்பதிவு செய்திருப்பவருக்கு ஆளுநர் ஆதரவாக செயல்பட்டு வருவது பட்டியலின ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

* ஒரு பக்கம் ஆளுநர் ஆலோசனை இன்னொரு பக்கம் போலீஸ் ரெய்டு
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தராக இருப்பவர் ஜெகநாதன், பதிவாளர் (பொ) தங்கவேல் ஆகியோர் கணினி அறிவியல்துறை இணை பேராசிரியர் சதீஷ், பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் ராம்கணேஷ் ஆகியோருடன் சேர்ந்து கோவையில் பூட்டர் பவுண்டேசன் என்ற தனியார் நிறுவனத்தை விதிகளை மீறி பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் அலுவலக அறை ஒதுக்கி, லாப நோக்கில் செயல்பட்டு ஊழல் செய்ததாக பெரியார் பல்கலைக் கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோவன் சேலம் கருப்பூர் போலீசில் ஒரு புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, துணைவேந்தர் ஜெகநாதன் உள்பட 5 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதில் துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டு, உடனடியாக ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்நிலையில் கடந்த 27ம்தேதி பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல் ஆகியோரது வீடு, அலுவலகங்கள், பூட்டர் நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட அலுவலகம் என 7 இடங்களில் சேலம் மாநகர போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 5 பேருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினர்.

இந்த முறைகேடு வழக்கில் பதிவாளர் (பொ) தங்கவேல், இணைபேராசிரியர் சதீஷ், பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் ராம்கணேஷ் ஆகியோர் தலைமறைவாகியுள்ளனர். இவர்களை கைது செய்யவும் தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் தமிழக ஆளுநரும், பெரியார் பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் பகல் 12.30 மணிக்கு சேலம் வந்தார். அவர் பல்கலைக்கழக அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்நிலையில் துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கில் முக்கிய ஆவணங்களை கண்டுபிடிக்கும் வகையில் 6 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் நேற்று காலை 10 மணிக்கு பல்கலைக்கழகத்தில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். பல்கலைக்கழக வளாகத்தில் தமிழ்துறை பேராசிரியர் அலுவலகம், கணினி அறிவியல் மையம், நிதித்துறை அலுவலகம், திட்டமிடல் வளர்ச்சி பிரிவு அலுவலகம், தீன தயாள் உபாத்தியா திட்டம் செயல்படுத்தும் அலுவலகம், உள்கட்டமைப்பு தரம் உறுதி செய்யும் அலுவலகம் ஆகிய இடங்களில் இந்த சோதனை நடந்தது. இந்த சோதனை நேற்றிரவு 9 மணிக்கு முடிந்தது. இதில் ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுக்றது.

* நீதிமன்றத்தில் ஆஜராகாமலேயே துணைவேந்தருக்கு ஜாமீன்: ஐகோர்ட்டில் இன்று விளக்கமளிக்கிறார் நீதிபதி
துணைவேந்தர் ஜெகநாதனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது. இந்த ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என போலீசார் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளனர். இந்த மனு இன்று (12ம்தேதி) விசாரணைக்கு வர இருக்கிறது. ஜாமீனில் வெளியே வர முடியாத வழக்குகள் போட்டும், துணைவேந்தருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதால், ஜாமீன் வழங்கிய மாஜிஸ்திரேட் ஐகோர்ட்டில் இன்று விளக்கம் அளிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் நீதித்துறை நடுவர் ஜாமீன் வழங்கியபோது, இருநபர் ஜாமீன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி 2 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகிய நிலையில், துணைவேந்தர் ஜெகநாதன், நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெற வேண்டும். ஆனால் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அவர் ஆஞ்சியோகிராம் சிகிச்சை பெற்ற பிறகு காவல் நிலையத்தில் கையெழுத்திட்டார். ஆனால் அவர் கோர்ட்டில் ஆஜராகாமல் போலீஸ் ஸ்டேசனில் கையெழுத்திட முடியாது என கருதிய போலீசார் அரசு சட்ட ஆலோசகருடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

* ஆளுநருக்கு கருப்புக்கொடி
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்துக்கு வந்த ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு மாணவர் அமைப்புகள் சார்பில் பல்கலைக்கழகம் முன்பு நேற்று கருப்புக்கொடி ஏந்தி நூற்றுக்கணக்கானோர் போராட்டம் நடந்தினர். அப்போது, ‘திரும்பி போ… திரும்பி போ.. ஆளுநரே திரும்பி போ… ஊழல் வழக்கில் உள்ள துணைவேந்தருக்கு துணைபோகும் ஆளுநரை கண்டிக்கிறோம்… துணை போகாதே துணை போகாதே ஊழல் குற்றவாளிக்கு ஆளுநர் துணை போகாதே…’ என்ற பதாகைகளுடன் கோஷம் எழுப்பினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உட்பட 155 பேரை போலீசார் கைது செய்தனர்.

* ஆஞ்சியோ செய்தவர் கைப்பந்து விளையாடினார்
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் சார்பில், தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான மகளிர் கைப்பந்து போட்டி தனியார் மகளிர் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் வரும் 14ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியை பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். ஜாமீனில் உள்ள துணைவேந்தர் ஜெகநாதனுக்கு, உடல்நலம் பாதிக்கப்பட்டு, இருதய வலி இருப்பதாக கூறி, தனியார் மருத்துவமனையில் ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மகளிர் கைப்பந்து போட்டிகளை தொடங்கி வைத்த அவர், தானும் விளையாடி போட்டியை தொடங்கி வைத்தார். ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டு, ஓய்வில் இருப்பதாக கூறப்பட்ட துணை வேந்தர், எப்படி ஓடியாடி விளையாட முடியும்? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

Related posts

புதிய குற்றவியல் சட்டங்கள்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐக்கு எதிராக கெஜ்ரிவால் மனு

சொந்தக் கட்டிடங்களில் இயங்கும்; கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் புனரமைத்தல் பணிக்கு நிதியுதவிக்கு விண்ணப்பிக்கலாம்: மானிய தொகையையும் உயர்த்தியது தமிழக அரசு