21ம் தேதி சேலத்தில் இளைஞரணி மாநாடு சென்னையில் சுடர் ஓட்டத்தை தொடங்கி வைத்தார் உதயநிதி ஸ்டாலின்: மதத்திற்கோ, நம்பிக்கைக்கோ திமுக எப்போதும் எதிர்ப்பு இல்லை என பேட்டி

சென்னை: சேலத்தில் நடைபெறும் இளைஞரணி மாநாட்டையொட்டி சென்னையில் சுடர் ஓட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது, ராமர் கோயில் திறப்பிற்கோ அல்லது மத நம்பிக்கைக்கோ திமுக எதிரி அல்ல என்றார். சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன் பாளையத்தில் திமுக இளைஞர் அணி 2வது மாநில மாநாடு வரும் 21ம்தேதி நடைபெற உள்ளது. மாநில அரசுக்கான நிதி பங்கீடு, கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வருதல், மாநிலத்தின் பண்பாட்டு உரிமையை பாதுகாத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்து இந்த மாநாடு நடக்கிறது. மாநாட்டில் சுமார் 5 லட்சம் பேர் பங்கேற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

மாநாட்டையொட்டி, நேற்று சென்னை அண்ணா சாலை சிம்சன் சிக்னல் அருகே பெரியார் சிலையிலிருந்து, சுடர் தொடர் ஓட்டம் தொடங்கியது. இதனை திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அமைச்சர் சேகர்பாபு, மாவட்ட செயலாளர் சிற்றரசு, எம்எல்ஏக்கள் தாயகம் கவி, பரந்தாமன், பிரபாகர ராஜா மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சுடர் ஓட்டம் அண்ணா சாலை, ஸ்பென்சர் சிக்னல், ஆயிரம் விளக்கு, அண்ணா அறிவாலயம், நந்தனம் கலைக் கல்லூரி, கிண்டி கத்திப்பாரா, ஆலந்தூர் மெட்ரோ, மீனம்பாக்கம், பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், செங்கல்பட்டு, மதுராந்தகம், மேல்மருவத்தூர், அச்சிறுப்பாக்கம், திண்டிவனம், மயிலம், விக்கிரவாண்டி, விழுப்புரம், அரசூர், உளுந்தூர்பேட்டை, தியாகதுருகம், கள்ளக்குறிச்சி, சின்ன சேலம், தலைவாசல் ஆத்தூர் வழியாக சேலம் பெத்தநாயக்கன் பாளையத்துக்கு 20ம் தேதி மதியம் 1.30 மணிக்கு சென்றடைகிறது.

இதை தொடர்ந்து, மாநாட்டுச் சுடரை அன்று மாலை திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒப்படைக்கிறார். மொத்தமாக சுடர் 316 கி.மீ தொலைவு பயணிக்கிறது. சுடர் ஓட்டத்தை சென்னையில் தொடங்கி வைத்த பின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அளித்த பேட்டி: நீட் விலக்கு கோரி 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துகளை பெற திட்டமிட்ட நிலையில், தற்போது வரை 85 லட்சம் கையெழுத்துகளை பெற்றுள்ளோம். இதை மாநாட்டின் போது திமுக தலைவரிடம் ஒப்படைப்போம்.

பின்னர் நேரடியாக நானும், இளைஞரணியினரும் டெல்லி சென்று குடியரசுத் தலைவரிடம் வழங்க இருக்கிறோம். ஏற்கனவே கலைஞர் சொன்னது போன்று மதத்திற்கோ, நம்பிக்கைக்கோ திமுக எதிர்ப்பு இல்லை. ராமர் கோயில் திறப்பிற்கோ அல்லது மத நம்பிக்கைக்கோ என்றும் திமுக எதிர்ப்பு இல்லை. அங்குள்ள மசூதியை இடித்து விட்டு கோயில் கட்டியதில் திமுகவிற்கு உடன்பாடு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

* தவழ்ந்து செல்வதால் எடப்பாடிக்கு கால் வலி
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், கால் வலி காரணமாக அயோத்தி ராமர் கோயிலில் பங்கேற்க போவதில்லை என எடப்பாடி பழனிசாமி கூறியது குறித்த கேள்விக்கு, ‘‘தவழ்ந்து தவழ்ந்து செல்வதால் எடப்பாடி பழனிசாமிக்கு அடிக்கடி கால்வலி ஏற்படுகிறது’’ என்று கூறினார்.

Related posts

ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு பாஜக பொருளாளர் ஆஜராக ஆணை

செல்போன் கட்டண உயர்வை ஒரே மாதிரியாக அறிவித்தது எப்படி?.. செல்போன் வாடிக்கையாளர்கள் மீது ரூ.35,000 கோடி சுமை: ஒன்றிய அரசுக்கு காங்கிரஸ் கண்டனம்..!!

வரதட்சணை கொடுமை வழக்கில் 7 ஆண்டு சிறை..!!