உனது அறிவே, உனது சக்தி

உங்களிடம் திறமை இருக்கிறது. ஆனாலும் நீங்கள் பெரிதாய் ஒன்றும் சாதித்து விடவில்லை. இருந்த இடத்திலேயே இருக்கிறீர்கள் என்ன காரணம்? உங்கள் திறமையை மேலும் வளர்த்துக் கொள்ளாததும், முழுமையாய்ப் பயன்படுத்தாததும்தான் அதற்கு காரணம். முதலில் உங்களிடம் என்னென்ன திறமைகள் இருக்கின்றன. என்பதைக் கண்டறியுங்கள், அந்த திறமைகளை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.அவற்றைப் பயன்படுத்த ஒரு வலுவான குறிக்கோளை அமைத்துக் கொள்ளுங்கள்.ரேடியம் என்றொரு ஒரு உலோகம் இருப்பதாக மேடம் கியூரியும், அவருடைய கணவரும் மிகவும் நம்பினர். ரேடியத்தை மற்றக் கனிமத்திலிருந்து பிரித்தெடுக்க நான்கு ஆண்டுகள் உழைத்தார்கள். உணவு, உறக்கம் இல்லாமல் இரவு பகல் பாராமல் கடுமையான உழைப்பு, அந்தக் காலகட்டத்தில் மிகவும் சிக்கலான நிலைகளை, மோசமான ஏமாற்றங்களை அவர்கள் எதிர்கொள்ள நேர்ந்தது. ஏராளமான பரிசோதனைகளை செய்து ஏமாற்றம் அடைந்தார்கள். அவருடைய கணவர் நம்பிக்கை இழந்தார். முடியாது, நம்முடைய வாழ்நாளில் நம்மால் அதை கண்டு பிடிக்க முடியாது. இன்னும் எத்தனையோ நூற்றாண்டு காலம் தேவைப் படும் என்று சொல்லி நம்பிக்கை இழந்தார். ஆனால் இறுதி மூச்சு உள்ளவரை நான் அதைக் கண்டறியப் பாடு படுவேன் என்றார் மேடம் கியூரி.ஒரு நாள் மாலை நோயுற்ற தனது குழந்தையை தூங்க வைத்துவிட்டு, தனது ஆராய்ச்சி கூடத்துக்கு கனவுடன் சென்றார் மேடம் கியூரி. விளக்குகளைப் போட வேண்டாம், என்று சொல்லியபடி கணவருடன் சென்றார். இருட்டில் நுழைந்தார்.கதவைத் திறந்தார். உள்ளே அந்த இருட்டில் நீல நிற ஒளியுடன் பிரகாசித்தது ரேடியம்! அவர்கள் பொறுமையோடு அத்தனை காலம் உழைத்ததற்கான வெகுமதி! நீங்கள் எவ்வளவு அறிவு உடையவராயினும்,அந்த அறிவுத்திறனைச் செப்பனிட்டுக் கொண்டே இருக்க வேண்டும். மேடம் கியூரி போல இலக்கை அடைய முயற்சிக்க வேண்டும். அப்படி முயற்சிப்பவர்களுக்கு வயது தடை இல்லை என்பதை உணர்த்திய இந்த இளம் மாணவியின் சாதனையை உதாரணமாய் சொல்லலாம்.

பட்டப் படிப்பு படித்தவர்கள்,ஆராய்ச்சிப் படிப்புகளை முடித்தவர்கள் தான் சாதிக்க முடியும் என்பதில்லை. ஒரு குறிப்பிட்ட துறையில் தனது அறிவை விரிவுபடுத்தினால் யாருமே சாதனையாளர்களாக சரித்திரம் படைக்க முடியும். மேலும் சாதனை படைக்க வயது தடை இல்லை என்பதை பலரும் இந்த உலகில் நிரூபித்துக் கொண்டே இருக்கின்றார்கள். அந்த வரிசையில் கலிபோர்னியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 11 வயதுச் சிறுமி கணினிமென்பொருள் துறையில் சாதனை படைத்து வயது ஒரு தடையல்ல என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார். கலிபோர்னியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் சமைரா மேத்தா. ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுமி Corder Bunnyz என்ற STEM கோடிங் போர்ட்கேம் என்ற விளையாட்டைக் கண்டுபிடித்துள்ளார். இது குழந்தைகளுக்கான சாதாரண விளையாட்டல்ல. நான்கு முதல் வயது வந்தவர்கள் வரை மென்பொருள் கோடிங்கை விளையாட்டாக கற்றுக் கொடுக்க உதவும் பிரத்யேக அறிவு சார்ந்த விளையாட்டை உருவாக்கி சாதித்துள்ளார்.இவரது போர்ட்கேம் பற்றி எடுத்துரைக்கும் வகையில் 40 பயிற்சிப் பட்டறைகளை நடத்தியதோடு, 1400- க்கும் அதிகமான குழந்தைகளுக்கு போர்ட்கேம் பயிற்சியும் அளித்துள்ளார். சிறுவயதிலேயே ஜொலிக்கும் இவரது திறமையை பாராட்டி வெள்ளை மாளிகையில் இருந்து பாராட்டுக் கடிதம் வந்துள்ளது.மேலும் பல நிறுவனங்களுக்கு சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு உரையாற்றி வருகிறார்.

2015- ஆம் ஆண்டு போர்ட் கேம் கோடிங் செய்யக் கற்றுக் கொண்டேன். 2017- ஆம் ஆண்டு அது அறிமுகப்படுத்தப்பட்டது. விரைவிலேயே, தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு மேலும் பல விளையாட்டுக்களை உருவாக்கி வருகிறேன். இதன் மூலம் ஏராளமான குழந்தைகள் கோடிங் குறித்து தெரிந்து வருகின்றனர் என்பது எனக்கு மகிழ்ச்சி. ஒரு பில்லியன் குழந்தைகள் கோடிங் எழுத கற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் எனது லட்சியம்’’ என்கிறார் சமைரா.CoderBunnyz என்ற தனது கோடிங் போர்டு விளையாட்டு, ஸ்டேக், அல்காரிதம் எழுதுதல், பட்டியலிடுதல், வரிசைப்படுத்துதல் போன்ற கம்ப்யூட்டர் புரோக்ராமிங்குகளை எளிதாக்குகிறது.இந்த போர்டு விளையாட்டு தற்போதைய காலகட்டத்தில் உள்ள மிகவும் சக்திவாய்ந்த தொழில்நுட்பத்தை அடிப் படையாகக் கொண்டது. கோடிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உள்ள அனைத்து கோட்பாடுகளையும் இந்த விளையாட்டு வேடிக்கையாகவும், எளிதாக இண்டர்ஆக்ட் செய்யும் வகையிலும் கற்றுக்கொடுக்கின்றார் என கூறும் சமைரா தற்போது, குழந்தைகளுக்கு செயற்கை நுண்ணறிவுக் கோட்பாடுகளை கற்றுக்கொடுக்கும் CoderMindz என்கிற விளையாட்டை அறிமுகப்படுத்தி இளம் வயதிலேயே நிறுவனத்தை நடத்தி சாதித்து வருகிறார்.தாண்டி வலைப்பதிவு எழுத்தாளர், பாடகர் மற்றும் இசையமைப்பாளர் என்ன பன்முகத்திறமையாளராக ஜொலித்து வருகிறார். பள்ளிப்படிப்பை படித்து வரும் சமைரா, பள்ளிப்படிப்பை முடித்த பிறகு உயர்கல்வியைத் தொடர சரியான கல்லூரியைத் தேர்ந்தெடுப்பதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

தனது கனவை நனவாக்கியதற்காக இணையம்தான் மிக முக்கிய காரணம் என்கிறார். அதனால் இணையத்தை பாராட்டுகிறார் சமைரா. இணையம் ஆச்சரியமாக இருக்கிறது. உலகெங்கிலும் உள்ள மக்களுடன் நீங்கள் எளிதாக தொடர்பு கொள்ளலாம். அயோவா, ஓஹியோ மற்றும் நியூசிலாந்தைச் சேர்ந்த பல அற்புதமான கிராஃபிக் வடிவமைப்பாளர்கள் எனது யோசனைகள் மற்றும் கடினமான விஷயங்களுக்கு உயிர் கொடுக்க உதவினார்கள். பின்னர் உலகம் முழுவதும் உள்ள உற்பத்தியாளர்கள் எனது தயாரிப்பை உருவாக்க உதவினார்கள். இன்று தொழில்நுட்பம் சக்தி வாய்ந்தது, அதே நேரத்தில், இன்றைய குழந்தைகள் உயர்ந்த லட்சியத்துடன் மாற்றத்தைக் கொண்டு வர உதவ வேண்டும்.இளம் தலைமுறைகள் உலகத்தின் பிரச்னைகளைத் தீர்க்க கண்டுபிடிப்புகளை உருவாக்க உதவ வேண்டும் என்கிறார் சமைரா. இளம் மாணவர்கள் தங்கள் கல்வியால் பெற்ற அறிவையும் திறமையும் கொண்டு இந்த சமூகத்திற்குத் தேவையான அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும்,அந்த கண்டுபிடிப்புகள் நம் சமூகப் பிரச்னைகளுக்கு தீர்வாக அமைய வேண்டும் என்றார் அப்துல் கலாம் அவர்கள். இதற்கு உதாரணமாகத்தான் சமைரா திகழ்ந்து கொண்டிருக்கின்றார் என்பதில் ஐயமில்லை.

Related posts

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

கடும் வெயில் காரணமாக அசாம் மாநிலம் குவாஹாத்தியில் உள்ள பள்ளிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை அறிவிப்பு

மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் சடலம் வைக்கப்பட்ட ஃப்ரீசர் பாக்ஸில் இருந்து மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு