Friday, September 27, 2024
Home » தோல்விகளைக் கண்டு தளராத சாய்கிரோ ஹோண்டா

தோல்விகளைக் கண்டு தளராத சாய்கிரோ ஹோண்டா

by Nithya

பிழைக்கத் தெரியாத முட்டாள், எதைச் செய்தாலும் தோல்வி அடைவதற்காகவே பிறந்தவன் என்று உறவினர்களும் நண்பர்களும் ஏளனமாக பார்த்து கேலி செய்தார்கள். பல தோல்விகளுக்கு, பல போராட்டங்களுக்குப் பிறகு உலகமே வியக்கும் வகையில் வாகன உற்பத்தியில் முன்னணி நிறுவனத்தை உருவாக்கினார் “சாய்கிரோ ஹோண்டா”. இவர் வேறு யாரும் இல்லை. இன்று இருசக்கர வாகனங்கள் தொடங்கி பல வாகன உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக உள்ள ஹோண்டா மோட்டார்ஸின் நிறுவனர் சாய்கிரோ ஹோண்டா. இவரின் தொழில் வளர்ச்சியையும் வெற்றிப்பாதையையும் இன்றைய இளைய தலைமுறையினர் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்.

வெற்றி என்பது 99 சதவீத தோல்வியே தரும் என்ற கருத்தை அடிக்கடி கூறிவந்தவர் சாய்கிரோ ஹோண்டா. இவருக்கு பிஸ்டன் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்று நீண்ட நாள் கனவு. பல தோல்விகளுக்கு பின்பு, கடின உழைப்பால் ஒரு புதிய பிஸ்டனை தயாரித்து டொயோட்டா நிறுவனத்திற்கு எடுத்துச் சென்றார். அந்த பிஸ்டன் தரமாக இல்லை என்று டொயோட்டா நிறுவனம் நிராகரித்துவிட்டது. மீண்டும் மனம் தளராமல், கடினமான உழைப்பால் ஒரு புதிய பிஸ்டனை தயாரித்து டொயோட்டா நிறுவனத்திற்குக் கொண்டு சென்றார். அந்த பிஸ்டனை பாராட்டி தங்கள் நிறுவனத்தில் தொடர்ந்து விநியோகம் செய்ய ஒப்பந்தமும் கொடுத்தது.

பிஸ்டன் தயாரிக்கும் தொழிற்சாலை உருவாக்க கட்டடம் கட்டும்போது ஜப்பானில் கடுமையான சிமெண்ட் தட்டுப்பாடு ஏற்பட்டது. சிமெண்டுக்கு மாற்றுக் கலவை கண்டுபிடித்து ஒரு தொழில்கூடத்தை அமைத்தார். பிஸ்டன் தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்கியபோது இரண்டாம் உலகப்போர் தொடங்கிவிட்டது. அமெரிக்கா போட்ட குண்டால் ஹோண்டாவின் தொழிற்சாலையின் பெரும்பகுதி நாசமானது.

ஹோண்டா தனது மொத்த தொழிலாளர்களையும் ஒன்றுதிரட்டி தானே களமிறங்கி சேதங்களைச் சீர்செய்து, தொழிற்சாலையை மீண்டும் இயக்கிக் காட்டினார். ஒரு நாள் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஹோண்டாவின் தொழிற்சாலை தரைமட்டமானது. கிடைத்த மூலப்பொருட்களையும், உடைந்த இரும்புக் கருவிகளையும் டொயோட்டா நிறுவனத்திற்கே விற்பனை செய்துவிட்டார். இரண்டாம் உலகப் போர் முடிந்திருந்த நேரம் ஜப்பானின் பொருளாதாரம் கடும் நெருக்கடியில் சரிவை சந்தித்தது. ஜப்பான் முழுதும் பெட்ரோல் தட்டுப்பாடு. கார் பயணம் முற்றிலும் முடங்கியது. பெரும்பாலோர் நடந்தே பல இடங்களுக்குச் சென்றனர். ஒருசிலர் சைக்கிளில் பயணம் செய்தனர். வீட்டில் ஏதோ யோசித்தபடி இருந்த சாய்கிரோ ஹோண்டா அருகில் ஒரு சைக்கிளும், சற்றுத் தொலைவில் புல்வெட்டும் இயந்திரமும் இருந்ததைப் பார்த்தார்.

அந்தப் புல்வெட்டும் இயந்திரத்தில் உள்ள மோட்டாரைக் கழற்றி, இந்த சைக்கிளில் இணைத்தால் என்ன என்று ஹோண்டாவுக்கு ஒரு யோசனை தோன்றியது. அடுத்த நொடியில் காரியத்தில் இறங்கினார் ஹோண்டா. புல்வெட்டும் இயந்திர மோட்டாரைக் கழற்றி எடுத்து, சைக்கிளில் பொருத்தியதால்தான் உலகின் முதல் மோட்டார் சைக்கிள் உருவானது.

அவர் உருவாக்கிய மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு ஆனந்தமாகவும், மகிழ்ச்சியாகவும் சுற்றி வந்தார். அதேபோன்று எங்களுக்கும் செய்துகொடுக்க வேண்டும் என அவரிடம் பலரும் கேட்டனர். ஹோண்டா சளைக்காமல் செய்து கொடுத்தார். அதன் விளைவு? அந்த ஊரில் மோட்டார் தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது. இதையே பெரிய தொழிலாக மாற்றினால் என்ன என்று சிந்தித்தார் ஹோண்டா.

கையில் பணமில்லை, வங்கிகள் கடன் தரத் தயாராக இல்லை. இப்போதும் ஹோண்டா துரதிர்ஷ்டக்காரன் என்று எல்லோரும் கூறினார்கள். சிறிதும் கலங்காமல் தனது தொழில் திட்டத்துக்குப் பணஉதவி செய்யுமாறும், முதலீடு செய்பவர்கள், மோட்டார் சைக்கிள் விநியோகஸ்தர்களாக நியமிக்கப்படுவார்கள் என வேண்டுகோள் விடுத்து, ஜப்பானில் உள்ள 18 ஆயிரம் சைக்கிள் கடைக்காரர்களுக்கு கடிதம் எழுதினார். 5 ஆயிரம் சைக்கிள் கடைக்காரர்கள் முன்வந்து பண உதவி செய்தனர். ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனம் உதயமானது.

முதலில் தயாரான மோட்டார் சைக்கிள் குறித்து விமர்சனங்கள் வந்தபோது, தானே உலோகம் உருக்கும் கூடத்தில் அமர்ந்து, அழகான வடிவமைப்புடன் அற்புதமான மோட்டார் சைக்கிள்களை வடிவமைத்து உருவாக்கினார். பல அவமானம் தொடர்தோல்விகளுக்கு பின்னர் பெரும் வெற்றி பெற்றார் சாய்கிரோ ஹோண்டா. இப்போது ஹோண்டா நிறுவனம் சுமார் 1 லட்சத்து 90 ஆயிரம் தொழிலாளர்களைக் கொண்டு ஆண்டுக்குச் சுமார் 2 கோடி மோட்டார் வாகனங்களை தயாரிக்கிறது.

முயற்சியை மூலதனமாகக் கொண்டு, தன்னம்பிக்கையை மனதில் வைத்து வைராக்கியத்துடன் உழைக்கும் யாராக இருந்தாலும் வெற்றி கைகூடாமல் போகாது என்பதையே ஹோண்டா மோட்டார் நிறுவனத்தை உருவாக்கிய சாய்கிரோ ஹோண்டாவின் வாழ்க்கை எடுத்துக் காட்டுகிறது.

You may also like

Leave a Comment

4 × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi