சகட யோகம் / தோஷம்

ஜோதிட ஆய்வாளர் சிவகணேசன்

சகடம் அல்லது சகடை என்ற வடமொழி சொல்லுக்கு `சக்கரம்’ என்று பொருள்படும். சக்கரத்தில் இருக்கின்ற ஒரு புள்ளி மேல் நோக்கியும், கீழ் நோக்கியும் எப்படி சுழல்கிறதோ அதே போன்று வாழ்வும் ஏற்றம் இறக்கத்துடன் ஓடிக்கொண்டே இருக்குமாறு வாழ்க்கை அமைந்திருக்கும். பொருள் ஈட்டுவதற்கு அலைந்து திரிந்து கொண்டே இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். வாழ்க்கை முழுவதும் ஒருவனால் ஓடிக் கொண்டே இருக்க முடியாது. முதுமையில் ஒரு இளைப்பாறுதல் தேவைப்படுகிறது.

அந்த இளைப்பாறும் தருணத்திலும் ஒருவன் வாழ்வின் பொருளிற்காக உழைப்பது என்பது சகட யோகம் செயல்படுவதை குறிக்கும். சில நேரங்களில் இந்த சகட தோஷம் சிலருக்கு சகட யோகமாக வேலை செய்யும்.

சகட யோகத்தின் அமைப்புகள்

நவக்கிரகங்களில் தனத்தை குறிக்கும் கிரகம் குருவாகும். சந்திரன் என்பவர் குபேர சம்பத்தை குறிப்பவர் ஆவார். இவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் மாறுபட்டு இருந்தால், குபேர சம்பத்து என்பது பொருள். ஒருவரிடம் தங்கும் ஏற்றம் இறக்கம் என்ற மாற்றத்தை குறிக்கிறது. குருவிற்கு ஆறாம் இடம் (6ம்), எட்டாம் இடம் (8ம்), பன்னிரெண்டாம் இடம் (12ம்) ஆகியவற்றில் சந்திரன் இருப்பதுவே சகட யோகம் / தோஷ அமைப்பாகும்.

சகட யோகத்தில் விதிவிலக்குகள் உண்டா?

1ஜாதகனின் திரிகோணத்தில் குரு மற்றும் சந்திரன் இணைவிருந்தால் ரத்தாகிவிடும்.

2சந்திரன் குருவின் நட்சத்திர சாரத்தில் அமர்ந்திருந்தால் சகட யோகம் தடைபடும் அமைப்பு உண்டாகும்.

3ஓருவர் உச்சம் பெற்று ஒருவர் ஆட்சி பெற்றிருந்தாலும் சகட தோஷம் தடைபடும் அமைப்பாகும்.

4நவாம்ச கட்டத்தில் குருவுடன் சந்திரன் சேர்ந்திருந்தால் சகட தோஷம் இல்லை என்று பொருள்.

5ராசியில் ஒருவர் உச்சமாகவும் நவாம்சத்தில் ஒருவர் உச்சமாகவும் இருந்தால் சகட யோகம் தடைபடும்.

6குரு வர்கோத்தமம் ஆகியிருந்தாலும் சகட தோஷம் தடைபடும்.

7சந்திரன் ரிஷபம், கடகம், தனுசு மற்றும் மீனம் ஆகிய ராசிகளில் இருந்தால் சகட யோகம் வேலை செய்யாது.

8சந்திரன் வளர்பிறை சந்திரனாக இருந்தாலும், அதிக பாதிப்புகள் இருக்காது.

9சந்திரன் வர்கோத்தமம் ஆகியிருந்தாலும் சகட யோகம் வேலை செய்யாது.

10சகட யோகம் தடைபடுபவர்களுக்கு இது யோகமாக வேலை செய்யும்.

11பரிவர்த்தனை ஏற்படும் போது சகட யோகம் தடைபட்டு யோகமாகிறது. உதாரணமாக, சில நேரங்களில் குரு உச்சம் பெற்று கடகத்தில் இருக்கும் போது சந்திரன் தனுசு ராசியில் அமரும்போது பரிவர்த்தனையாக உள்ளது.

சகட தோஷம் / யோகம் என்ன செய்யும்?

சகட தோஷம் உள்ளவர்கள் பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கத்துடன் வாழ்வார்கள். இவர்களின் அருகிலே எதிரிகள் அமர்ந்து இவர்களுடன் நண்பர்கள் போலவே பழகி துரோகம் செய்வார்கள். அந்த துரோகம் செய்வதிலும் கொஞ்சம்கூட தயவு தாட்சண்யம் பார்க்க மாட்டார்கள். இவர்களும் அதை அறியாமலேயே ஏமாந்து போவர். இவர்களின் வாழ்வில் ஏமாற்றம் இருந்து கொண்டே இருக்கும். நல்லவர்கள் போல் வந்து பணத்திற்காகவும் பதவிக்காகவும் இவர்களை கிழே தள்ளுவதில் தயக்கம் காட்டமாட்டார்கள்.

இவர்களுக்கு சுக வாழ்வு என்பது எல்லாம் கடந்துதான் நடக்கும். அந்த சுபகாரியங்கள் நடக்கும் போது இவர்களுக்கும் வயதிற்கும் தொடர்பே இருக்காது. மறைமுக எதிரிகளால் நஷ்டங்களும் கஷ்டங்களும் உண்டு. பண விரயம் இவர்களுக்கு இருந்து கொண்டே இருக்கும். பெரிய தனவரவு ஏற்படும் பின்பு நஷ்டம் ஏற்பட்டு எல்லாவற்றையும் முதலில் இருந்து தொடங்குவர். விதிவிலக்கு இருந்தால் அது யோகமாக மாறும்.

சகட யோகம் / தோஷம் பரிகாரம் என்ன?

* வியாழக்கிழமைகளில் வரும் பௌர்ணமி அன்று கிரிவலம் வந்து தட்சிணாமூர்த்தியை வழிபடுதல் சிறந்த நற்பலன்கள் கிட்டும்.

* யானையின் வாலின் முடியால் செய்யப்பட்ட தங்க மோதிரத்தையோ அல்லது முழுவதும் யானையின் முடியால் செய்யப்பட்ட மோதிரத்தையோ அல்லது அணிகலன்களையோ அணிந்து கொள்ளும் போது சகட யோக பாதிப்புகள் குறையும்.

* வியாழக்கிழமை தோறும் சந்திரமௌலீஸ்வரருக்கு வெல்லத்தால் செய்யப்பட்ட பாயசம் நெய்வேத்தியமாக கொண்டோ அல்லது தட்சிணாமூர்த்தியை கொண்டை கடலை நெய்வேத்தியம் வைத்து வழிபாடு செய்தல் சிறப்பான பலன்கள் தரும்.

* யானைக்கு உங்களால் முடிந்த அளவு உணவு கொடுங்கள். கரும்புகட்டு வாங்கித் தரலாம் அல்லது பச்சரிசி வெல்லம் கலந்து உணவாக கொடுக்கலாம். வாழைப்பழம் போன்றவற்றை உணவாகக் கொடுங்கள் உங்கள் தோஷம் குறையும். மறவாமல் யானையின் துதிக்கையால் ஆசீர்வாதம் பெறுங்கள் உங்கள் வாழ்வு மேம்படும். யானையின் பார்வை பல தோஷங்களை போக்கும் குருவின் பார்வைக்கு நிகரானது.

* கோயில்களில் நடைபெறும் உழவாரப் பணிகளில் பங்கு பெறுங்கள். அது பெரும்பாலும் உங்களின் அனைத்து தோஷங்களையும் குறைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Related posts

சாபங்களும் தோஷங்களும் ஏன்?

நிறம் மாறும் அதிசய லிங்கம்

கவச அத்தியாயங்கள்..!