ஆடி கிருத்திகையை முன்னிட்டு குன்றத்தூர் முருகன் கோயிலில் பாதுகாப்பு ஆலோசனை

குன்றத்தூர்: ஆடி கிருத்திகையை முன்னிட்டு, குன்றத்தூர் முருகன் கோயிலில் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் கோயில் அறங்காவலர் குழு தலைவர் செந்தாமரைக்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. குன்றத்தூரில் மிகவும் பிரசித்தி பெற்ற தெய்வப்புலவர் சேக்கிழார் பெருமானால் பாடல்பெற்ற தலமான முருகன் கோயில் அமைந்துள்ளது. இங்கு, ஒவ்வொரு ஆண்டும் ஆடி கிருத்திகையின்போது விஷேச பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதனை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகளவில் வரும் என்பதால், முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம், கோயில் அறங்காவலர் குழு தலைவர் செந்தாமரைக்கண்ணன் தலைமையில் கோயில் வளாகத்தில் உள்ள அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் தீயணைப்பு துறை, மின்வாரியம், காவல் துறை, மருத்துவதுறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஆடி கிருத்திகையின்போது, குன்றத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் மட்டுமின்றி சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் அதிகமாக வருவார்கள் என்பதால், கோயிலில் பக்தர்கள் வசதிக்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது இலவச தரிசனம், சிறப்பு தரிசனம் மற்றும் கட்டண தரிசனங்கள் செய்வதற்கான சிறப்பு வழிகள் அமைப்பது மலை குன்றின் மீதும், கீழ் பகுதியிலும் பக்தர்கள் வாகனங்கள் நிறுத்துவதற்கு போதிய இடம் அமைப்பது, கோயிலுக்கு வரும் பக்தர்கள் போக்குவரத்து நெரிசல் இன்றி சாமி தரிசனம் செய்வது உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் கோயில் அறங்காவலர் குணசேகர், சரவணன், ஜெயக்குமார், குன்றத்தூர் நகர மன்ற தலைவர் சத்தியமூர்த்தி, கோயில் செயல் அலுவலர் ஸ்ரீகன்னியா, நகர மன்ற உறுப்பினர் கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

கேளம்பாக்கத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு: வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை

கல்லூரி விடுதியில் மதிய உணவு சாப்பிட்ட 43 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்: போலீசார் விசாரணை

திருப்போரூர், வல்லக்கோட்டை முருகன் கோயில்களில் ஆனி மாத கிருத்திகை சிறப்பு அபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு