திருப்பூரில் பாதுகாப்பு சூழலுடன் பணி என்பதால் வடமாநில தொழிலாளர் வருகை அதிகரிக்கிறது

*முறையாக பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?

திருப்பூர் : தொழில் வளர்ச்சி காரணமாக வடமாநில தொழிலாளர்களின் வருகை நாளுக்கு நாள் திருப்பூரில் அதிகரித்து வருகிறது. வடமாநில தொழிலாளர்கள் மற்றும் திருப்பூரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வடமாநில தொழிலாளர்கள் வருகையை பதிவு செய்ய வேண்டும் என தொழிற்சங்கத்தினர் வலியுறுத்துகின்றனர்.

வந்தாரை வாழவைக்கும் திருப்பூர், தனது விடா முயற்சி மற்றும் அயராத உழைப்பின் காரணமாக சர்வதேச அளவில் ஆயத்த ஆடை உற்பத்தியில் மிகப்பெரிய தொழில் நகரமாக வளர்ந்துள்ளது. தொழில் வளர்ச்சிக்கேற்றவாறு திருப்பூர் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும் லட்சக்கணக்கானோர் இங்கு வந்து தங்கி பணிபுரிந்து வருகின்றனர். வந்தோருக்கெல்லாம் வேலை வாய்ப்பு அளிக்கக்கூடிய வகையில் மட்டுமல்லாது அவர்களுக்கான பாதுகாப்பையும் உறுதி செய்வதால் வேலைவாய்ப்பு தேடுபவரின் முதல் விருப்பமாக திருப்பூர் அமைந்து விடுகிறது.

இதன் காரணமாக தொழில் நிமித்தமாக திருப்பூருக்கு வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் வடமாநிலங்களில் இருந்து ரயில் மூலமாக திருப்பூர் வந்து இறங்குகின்றனர். திருப்பூரில் ஒடிசா, பீகார், உத்திரப்பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 17க்கும் மேற்பட்ட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். உள் நாட்டிற்குள்ளேயே புலம் பெயரும் தொழிலாளர்களால் சொந்த மாநிலம் மற்றும் பணியாற்றும் மாநிலம் என இரண்டு மாநிலங்களும் பொருளாதார வளர்ச்சி அடைகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட ஒரு அசாதாரண சூழல் காரணமாக வடமாநில தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்ட அச்சம் தமிழ்நாடு அரசின் கடும் நடவடிக்கையால் தவிர்க்கப்பட்டது. கொரோனா தொற்று காலம் முதல் வடமாநில தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு உதவிகளை செய்தது. சொந்த ஊர் செல்ல விரும்பிய தொழிலாளர்களை அரசின் சொந்த செலவில் அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தது. ஆனால் அப்போது முதல் திருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் குறித்த துல்லியமான பதிவுகள் ஏதும் இல்லாமல் இருந்தது.பணிக்கேற்றவாறு இடம் மாறி கொண்டிருக்கும் புலம் பெயர் தொழிலாளர்களின் வருகை பதிவு செய்வதும் மாவட்ட நிர்வாகத்திற்கு பெரும் சவாலாக இருந்தது.

இதன் காரணமாக தொழில்துறை சார்பாக இணையதளம் துவங்கப்பட்டு திருப்பூர் வரும் புலம் பெயர் தொழிலாளர்கள் மற்றும் அவர்களை பணி அமர்த்தும் நிறுவனங்கள் முறையாக பதிவு செய்ய வலியுறுத்தப்பட்டது. இதே வேளையில், சொந்த மாநிலத்தில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு புகாருகுள்ளானவர்கள் தொழிலாளர்களோடு சேர்ந்து திருப்பூர் வந்து பதுங்கி விடுகின்றனர்.
அது போன்று தங்குபவர்களை கண்டறியவும் பதிவு செய்வது அவசியம் என தொழிற்சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். இதன் மூலம் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்போடு சேர்த்து திருப்பூரின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும்.

ஒடிசா மாநிலத்தில் இருந்து கார்மெண்ட்ஸ் தொழிலுக்காக திருப்பூர் வந்தவர் சூரியகாந்த் மொஹன்தி. இவர் தங்கி இருந்த விடுதியில் கடந்த 20ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனால் யாரை தொடர்பு கொள்ள வேண்டும் என்பது குறித்து தெரியாததால் ஒடிசா மாநிலத்தில் உள்ள தொழிற்சங்கத்தின் மூலம் திருப்பூரில் உள்ள ஏஐடியுசி தொழிற்சங்கத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பின்பு தொழிற்சங்கம் சார்பில் இறுதிகட்ட மரியாதை செலுத்தப்பட்டு உறவினர்கள் முன்னிலையில் திருப்பூரிலேயே எரியூட்டப்பட்டது. தொடர்ந்து ஏஐடியுசி தொழிற்சங்கம் சார்பில் உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு நிறுவனத்திடம் 3 லட்சம் நிவாரணம் பெற்று குடும்பத்திடம் வழங்கப்பட்டு வழி அனுப்பி வைக்கப்பட்டது.

இது போன்ற சூழல் ஏற்படும்போது அவர்களின் பதிவு முறையாக இருக்கும் பட்சத்தில் உடனுக்குடன் தகவல்களை பரிமாறிக் கொள்ள வசதியாக இருக்கும் எனவும் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து பனியன் பேக்டரி லேபர் யூனியன் ஏஐடியூசி சங்கத்தின் பொதுச்செயலாளர் சேகர் கூறியதாவது: திருப்பூருக்கு வரும் வடமாநில தொழிலாளர்களுக்கு, எப்போதும் வேலை உறுதி என்பதால் திருப்பூரை அவர்கள் தேர்ந்தெடுக்கின்றனர். வந்தாரை வரவேற்பதோடு அல்லாமல் வாழ்வளிக்கும் நகரமாகவும் திருப்பூர் இருந்து வருகிறது. இதே நேரத்தில் தொழிலாளர்களின் வருகையை பதிவு செய்து தொடர்ந்து அவர்களை கண்காணிக்க வேண்டும்.

திருப்பூரில் பெரும்பாலான நிறுவனங்களில் தொழிற்சாலை சட்டம், தொழிலாளர் நல சட்டம், புலம் பெயர் தொழிலாளர்களுக்கான நல சட்டம் ஆகியவை பின்பற்றப்படுவதில்லை. சில நிறுவனங்களில் கான்ட்ராக்ட் முறையில் வடமாநில தொழிலாளர்கள் பணி அமர்த்தப்படுகின்றனர்.

இதன் காரணமாக அவர்களுக்கு இஎஸ்ஐ, பிஎப் உள்ளிட்ட ஒன்றிய மாநில அரசுகளின் சலுகைகள் கிடைக்க இயலாத சூழல் ஏற்படுகிறது. இவற்றினை மாவட்ட நிர்வாகமும், தொழிலாளர் துறையும் கண்காணிக்க வேண்டும். இதேபோல், பெரும்பாலான தொழிலாளர்கள் ரயில் மூலம் வரும் நிலையில் ரயில் நிலையத்திலேயே முகாம் அமைத்து அங்கேயே அவர்கள் பதிவு செய்யப்படுவதன் மூலம் அவர்கள் எந்த நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர், எங்கு குடியிருக்கின்றனர், அவர்கள் மீது சொந்த மாநிலத்தில் ஏதேனும் வழக்குகள் உள்ளதா என்பது குறித்தும் தொடர்ந்து கண்காணிப்பதற்கு வசதியாக இருக்கும்’’ இவ்வாறு அவர் கூறினார்.

பதிவுகள் கட்டாயம் தேவை

எப்போதும் வேலை என்ற காரணம் இருந்தாலும் கூட திருப்பூர் உள்ளிட்ட தமிழகத்தில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. வடமாநில தொழிலாளர்களை வேறு மாநிலத்து மக்களாக கருதாமல் தமிழ்நாட்டு மக்கள் தங்களோடு சேர்த்து வேற்றுமை பாராது பழகுவது வட மாநில தொழிலாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதன் காரணமாக தொடர்ந்து தமிழ்நாடு, வடமாநில தொழிலாளர்களின் சொர்க்க புரியாகவே இருந்து வருகிறது.

இதன் காரணமாக கூலி வேலை முதல் அலுவலக வேலை வரை தமிழ்நாட்டிற்கு வருபவர்களின் எண்ணிக்கை நாளைக்கு நாள் அதிகரிக்கிறது. அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு அவர்கள் குறித்த பதிவுகளை கட்டாயம் மாவட்டம் மற்றும் தொழில்துறை வைத்திருந்தால் மட்டுமே அவர்களை தொடர்ந்து கண்காணிக்க வசதியாக இருக்கும்.

விழிப்புணர்வு அவசியம்

திருப்பூரில் உள்ள தொழில் நிறுவனங்கள் வடமாநில தொழிலாளர்களை பணியமர்த்தப்படும்போது அவர்களின் விவரங்களை முழுமையாக சேகரிக்க வேண்டும். அவற்றை மாவட்ட நிர்வாகத்தின் தொழிலாளர் துறையிடம் சமர்ப்பிக்கப்படுவதோடு சம்பந்தப்பட்ட எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்திலும் பதிவு செய்திட வேண்டும். அதே நேரத்தில் புலம்பெயர் தொழிலாளர்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டு அறியும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் குறைதீர் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு