சாபங்களும் தோஷங்களும் ஏன்?

பிறவா வரம் தருவாயோ?

மனிதம் பிறப்பு எடுத்துக் கொண்டே இருக்கிறது என மதங்கள் ஆழமாக உணர்த்துகின்றன. பிறப்பை கடப்பதற்கு வழி இல்லையா? உண்மையில், ஒரு விஷயத்தை உணர்ந்தால்தான் கடக்க முடியும். இல்லாவிடில் கடப்பது சுலபம் அல்ல, மிகக் கடினமானதாக தோன்றும். வாழ்வும் அப்படித்தான், மகிழ்ச்சியான தருணங்கள் வேகமாகவும் துன்பமான தருணங்கள், மெதுவாகவும் கடந்து போவதாக மனம் உணர்கிறது. ஆனாலும், இன்பம், துன்பம் இதைக் கடந்த பேரின்பநிலை ஒன்றுண்டு. அதை ஞானிகளும், ரிஷிகளும், சித்தர்களும் நமக்கு உணர வைக்க முயற்சிக்கின்றனர். நாம் அதை உணர முடியாத சக்தியை நமக்குள் நாமே வைத்துள்ளோம். அதுவே கர்மாவாகவும், சாபமாகவும் நம்மை மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கச்செய்கிறது. பிறவா வரம் வேண்டி பிறந்தேன். பிறந்தபின் பிறவா வரம்தருவாயோ? என சித்தர் பாடுகிறார்.

சாபங்களே கர்மங்களாக உருவெடுக்கின்றன

கர்மங்களைப் பற்றியும், சாபங்களைப்பற்றியும் பலவாறாக பிரித்து சொல்லப்படுகிறது. கர்மங்கள், பிறப்போடு தொடர்வது நாம் வாழ்வை அனுபவித்தால் மட்டுமே, கரைத்திட வழி உண்டு. சாபங்கள், நாம் பிறரைத்துன்புறுத்துவதால் பெற்றதாக இருக்கும். அந்த சாபங்கள், இப்பிறப்பில் நாம் எதை பெறவில்லையோ அந்த விஷயத்தை சென்ற பிறப்பில் ஊதாசினப்படுத்தியும், அந்த தொடர்பான மனிதரை இழிவுப்படுத்தியும் சாபங்களை பெற்றிருக்கிறோம் என்பதை காலம் நமக்குள் கட்டாயம் உணர்த்தும். இவை இரண்டையும், சனியும், ராகுவும், கேதுவும் நமக்கு உணர்த்தும். கர்மங்களும் சாபங்களும்இல்லையேல், பிறவி என்பது இல்லை என்றே பொருள். சாபங்களே கர்மங்களாக உருவெடுக்கின்றன என்பதை ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. அவ்வகையில், பதின்மூன்று வகையிலான சாபங்களாலே எல்லோரும் துன்பப்படுகின்றனர். அவ்வாறே…

பெண்ணால் ஏற்பட்ட சாபம் (ஸ்திரீ தோஷம்)

பெண்களை ஏமாற்றுவதாலும், திருமணம் செய்து பெண்ணை கைவிடுவதாலும், உடன்பிறந்த சகோதரிகளை ஆதரிக்காததாலும் இந்த சாபம் உண்டாகிறது. பெண் சாபத்தால், வம்சம் அழியும் என சாஸ்திரம் சொல்கிறது. சந்திரன் மற்றும் சுக்ரன் ஆகியவற்றோடு அசுபகிரகங்கள் இணைந்து தடை ஏற்படுத்தும்.

குரு சாபம் (குரு தோஷம்)

கல்வியை கற்றுக் கொடுத்த குருவை வணங்காமல், மறப்பது. அப்படிக் கற்ற கல்வியை தவறான விஷயங்களுக்கு பயன்படுத்துவது, ஆகியனவாகும். இதனால் கல்வியை கற்க முடியாமல் போகும். வியாழனுடன் சனி மற்றும் ராகு – கேது என்ற சாயா கிரகங்கள் இணைந்து இருக்கும்.

பிரேத தோஷம்

இறந்தவர்களின் உடலை வைத்துக் கொண்டோ அல்லது இறந்தவர்களை பற்றியோ இழிவாக பேசுதல். மேலும், இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யவிடாமல் தடுத்தல் போன்றவை, பிரேதத்தின் சாபத்தை கொடுக்கக் கூடியது. மாந்தியுடன் அல்லது சனி மற்றும் கேது இணைவில் இருப்பதை குறிக்கும். மாந்தியுடன் சந்திரன் இணைவு இருப்பதையும் இந்த தோஷம் குறிக்கும்.

சர்ப்பம் என்ற சாயதோஷம்

சர்ப்பங்களை கொல்வதாலும், சர்பங்கள் இருக்கின்ற இடங்களை அழிப்பதாலும் உண்டாகக்கூடிய சாபம். இதுவே சர்ப்ப தோஷங்களை உருவாக்கும். திருமணத்தடை, புத்திரத் தடைகளை உருவாக்கும். சிலருக்கு கல்வியை தடை செய்யும்.

பித்ரு தோஷம்

முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய திதி மற்றும் தர்பணம் ஆகியவற்றை முறையாக கொடுக்காமல் இருப்பதும். அதனால், முன்னோர்களின் ஆசிர்வாதத்தை பெற முடியாமல் இருப்பார்கள். இவர்களுக்கு ஐந்தாம் பாவகம் மற்றும் ஒன்பதாம் பாவகம் மிகவும் வலிமையின்றி இருப்பதை அறியலாம்.

கோசாபம்

விலங்குகளை வதைப்பது. வீட்டில் வளர்க்கும் பிராணிகளையும் வதைப்பது. குறிப்பாக, பசு மாட்டை அடித்து துன்புறச் செய்வது. மேலும், பசுவையும்கன்றையும் பிரிப்பது. இதனால், விலங்குகளின் சாபத்தை பெறுவர். குடும்பத்தில் லட்சுமி கடாட்சம் குறைந்து, பொருள் ஈட்டுவதற்கு மிகுந்த சிரமப்படுவர்.

ஜலசாபம் எனும் கங்காவின் சாபம்

நதிகள் அனைத்தையும் புனிதமாக கருதுவது நம் பாரம்பரியத்தின் அம்சம். நதிகளில் நீராடுவது, நம் பாவத்தை தொலைக்கும் என சாஸ்திரம் வலியுறுத்துகிறது. அப்படிப்பட்ட நீரை பாழ் செய்வது. நதிகளை அசுத்தம் செய்வதினால் ஜலசாபம் எனும் கங்கையின் சாபத்தை பெறுகின்றனர். வாழ்வில் எப்பொழுதும் நீருக்காக அலையும் சூழ்நிலைகள் அமையும்.

பூமாதேவி சாபம்

பிறரின் இடத்தை தன் அதிகாரத்தால் வசப்படுத்திக் களவாடிக் கொள்வதாலும், இயற்கையான வனங்களை அழிப்பதாலும், பூமியை எட்டி உதைத்து பேசும் காரணத்தாலும், பூமியின் சாபத்தை பெறும் சூழ்நிலை ஏற்படுகிறது. சொந்தமாக நிலம் அமையாது. இருந்த நிலத்துக்கும் பிரச்னைகள் ஏற்படுவது பூமியின் சாபமாகும்.

விருட்ச சாபம்

விருட்சங்கள் எல்லாம் உயிர்களையும் பூமியையும் காக்க படைக்கப்பட்ட தேவதையாகும். அப்படிப்பட்ட விருட்சங்களை வெட்டுவதால், விருட்சசாபம் ஏற்படுகிறது. இதனால். கடன் ஏற்பட்டு, தீராத கடனாக மாறி வதைக்கும். நோய்களை தீர்க்க முடியாத அமைப்பு ஏற்படும்.

குலதெய்வ சாபம் (குல தோஷம்)

நமது முன்னோர்கள் பூஜித்த தேவதைகளை வழிபடாமலும் அல்லது குலதெய்வத்தை அறியமுடியாத தன்மைகள் ஏற்படும். இது ஜோதிடத்தில் ஐந்தாம் பாவகத்தை குறிக்கிறது. இந்த குலதெய்வ சாபத்தால், வம்சம் வளராமலும் விருத்தி அடையாமலும் இருக்கின்ற சூழ்நிலைகளை உருவாக்கும்.

ரிஷிகளின் சாபம் (ரிஷி தோஷம்)

ரிஷிகள், சித்தர்கள், ஞானிகள் போன்றோர்களை அவமதிப்பதும், இழிவாக பேசுவதும் மிகப் பெரிய தோஷமாக மாறும். அப்படிப்பட்ட ேதாஷம் பெற்றால், தலைமுறை தலைமுறையாக ஏதேனும் நோயோ அல்லது பிரச்னைகளோ அவர்கள் சந்ததி முழுவதும் தொடரும் வாய்ப்புகள் அதிகம்.

முனி சாபம் (முனி தோஷம்)

முனி சாபம் எனப்படுவது, ஊரில் எல்லை தெய்வங்கள் மற்றும் காவல் தெய்வங்களை குறிப்பிடுகின்றார்கள். இந்த தெய்வங்களை வணங்காமல் இருப்பதாலும், அல்லது அசட்டை செய்வதாலும், மற்றவர்களின் பொறாமைக்குணத்தால் இவர்கள் செய்வினைக்கோளாறுகள் ஏற்பட்டு, அல்லல்படும் சூழ்நிலைகளை ஏற்படுத்தும்.இதில், அவரவர்களுக்குரிய சாபங்கள் / தோஷங்கள் என்னவென்று நீங்களே அறிவீர்கள். அதற்குரிய நிவர்த்தி செய்து கொள்வதே சிறந்த உபாயம் ஆகும்.

Related posts

சிலர் வீடுகளில் ஸ்டிக்கர் கோலம் ஒட்டி இருப்பது சரிதானா?

துலாம் ராசி குழந்தை

ஜாதகத்தில் விவாகரத்தை கண்டுபிடிக்க முடியுமா?