ஊரக பகுதிகளில் 2,000 கி.மீ.க்கு சாலைகள் கட்டமைக்கப்படும்: அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

தமிழக சட்டப்பேரவையில் நேற்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் ஐ.பெரியசாமி பேசியதாவது: கலைஞருடைய கனவு இல்லம் திட்டத்தில் எல்லா மாவட்டங்களிலும் மாதிரி வீட்டை கட்டி வைத்திருக்கிறார்கள். ஏற்கெனவே கட்டப்பட்டு பழுதடைந்த ஓட்டு வீடுகள், கான்கிரீட் வீடுகள் ரூ. 2000 கோடி மதிப்பீட்டில் இரண்டரை லட்சம் வீடுகள் பழுது பார்க்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவித்தார்கள். இந்த ஆண்டே, ஒன்றரை லட்சம் வீடுகள் பழுதுபார்க்கும் திட்டத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் 5 ஆண்டுகளில் 12,525 பஞ்சாயத்துகளில், இதுவரை 69 ஆயிரம் பணிகள் எடுக்கப்பட்டன. 69 ஆயிரம் பணிகளில், 10,187 பஞ்சாயத்துகளில் 55 ஆயிரம் பணிகள் இதுவரை முடிக்கப்பட்டன. இந்த ஆண்டில் 2,000 கி.மீ. தூரம் சாலை அமைக்க ரூ.1000 கோடி நிதி ஒதுக்கப்படும். தமிழ்நாட்டில் இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு, 1,48,000 கி.மீ. சாலைகளில் 10,000 கி.மீ. சாலைப் பணிகள் நிறைவு பெற்றன. இந்த ஆண்டு 2,000 கி.மீ. சாலை நிறைவு பெறும். மொத்தம் 12,000 கி.மீ. இதுபோக பிரதம மந்திரி சாலைத் திட்டத்தில் 1,945 கோடி ரூபாயில், கிட்டத்தட்ட 2,700 கி.மீ.க்கு ஒப்பந்தம் கோரப்பட்டு, அந்தப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிக் கட்டிடங்கள் இந்த ஆண்டே கட்டி முடிக்கப்படும்.

அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றுப்புறச் சுவர் கட்டப்படும். கிராமப்புறங்களில் வீதி வீதிக்கு நீர்த் தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 1.25 கோடி வீடுகளில் 1.04 கோடி வீடுகளுக்கு ஜல் ஜீவன் திட்டத்தில் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஊரகப் பகுதிகளில் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 2 ஆயிரம் கி.மீ. சாலைகள் கட்டமைக்கப்படும். சமத்துவபுரம் இன்னும் 20-25 ஆண்டுகளுக்கு இருக்கும். கடலூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, விருதுநகர், ராமநாதபுரம், திருச்சி, திருவண்ணாமலை, திண்டுக்கல் ஆகிய 8 மாவட்டங்களில் சமத்துவபுரங்கள் இந்த ஆண்டு அமைக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Related posts

வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில் தலைமறைவு குற்றவாளி விஜய் மல்லையாவிற்கு ஜாமீனில் வெளிவர முடியாத சிபிஐ பிடிவாரண்ட்!!

சாதி மறுப்பு திருமணம் செய்த தம்பதிக்கு தேவைப்படும் பட்சத்தில் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்: காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

தமிழ்நாடு மாநிலச் சட்ட ஆட்சிமொழி ஆணையத்தின் மூலமாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 100 சட்டப் புத்தகங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்