கிராமப்புறங்களில் ரூ.500 கோடியில் 5,000 சிறு பாசன ஏரிகள் புனரமைப்பு: அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள கிராமப்புறங்களில் ரூ.500 கோடி செலவில் 5,000 சிறு பாசன ஏரிகளை புனரமைக்க நிதி ஒப்புதல் வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கட்டுப்பாட்டில் 22,051 சிறுபாசன ஏரிகள், 69,777 குளங்கள் மற்றும் ஊரணிகள் உள்ளன. சிறுபாசன ஏரிகள் இயந்திரங்களைப் பயன்படுத்தி தூர்வாருதல் மற்றும் ஆழப்படுத்துதல் உபரி நீர்போக்கி, மதகு போன்ற அனைத்து கட்டமைப்புகளையும் புனரமைத்தல், இணைப்பு வரத்து வாய்க்கால்களை தூர்வாருதல் ஆகியவை பொதுமக்கள் பங்கேற்புடன் செயல்படுத்தப்படுகின்றன. 2024-25ம் நிதியாண்டின் நிதி நிலை அறிக்கையின் போது ஊரகப்பகுதிகளில் உள்ள 5000 நீர்நிலைகளை ரூ.500 கோடியில் புனரமைக்கப்படும் என நிதியமைச்சரால் அறிவிக்கப்பட்டது.

அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள கிராமப்புறங்களில் ரூ.500 கோடி செலவில் 5,000 சிறு பாசன ஏரிகள் புனரமைக்க தமிழக அரசு நிர்வாக மற்றும் நிதி அனுமதி வழங்கியுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அரசு குறிப்பில், ‘‘தமிழகம் முழுவதும் உள்ள கிராமப்புறங்களில் ரூ.500 கோடி செலவில் 5,000 சிறு பாசன ஏரிகளை புனரமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாநில பட்ஜெட்டில் இருந்து ரூ.250 கோடி கிடைக்கும். அதே வேளையில், மாநில நிதி ஆணையத்தின் மானியமாக இதே தொகை வரும்\\” என செப்டம்பர் 5ம் தேதி ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை வெளியிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனம், சமூக அமைப்புகள், விவசாயிகள் சங்கம், கல்வி நிறுவனங்கள் போன்றவற்றின் சொந்த நிதி ஆதாரம் மற்றும் மக்கள் பங்களிப்புடன் கூடிய நமக்கு நாமே திட்டம் மூலமாகவும், மீதமுள்ள சிறுபாசன ஏரிகளுக்கு அரசு நிதி மற்றம் ஊராட்சி அமைப்புகளின் நிதியின் மூலமாகவும் நிறைவேற்றப்படும். ஆயக்கட்டுதாரர்கள் பணிகள் மற்றும் பயன்பாட்டாளர் அமைப்புகளுடன் சேர்த்து சிறுபாசன ஏரிகளின் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். ஆயக்கட்டுதாரர்கள் மற்றும் பயன்பாட்டாளர் அமைப்பு இல்லாத பட்சத்தில் புதியதாக பயன்பாட்டாளர்கள் குழுக்கள் அமைத்து புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். இத்திட்டத்தின் மூலம் ஊரக பகுதி விவசாயிகள் பெருமளவில் பயன்பெறுவதோடு நிலத்தடி நீர்மட்டமும் கணிசமாக உயரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

கதர் தொழிலுக்கு கை கொடுக்கும் வகையில் கதர், கிராம பொருட்களை அதிகளவில் வாங்கி நாட்டிற்கு வலிமை சேர்த்திட வேண்டும்: காந்தியடிகளின் பிறந்தநாளில் முதல்வர் வேண்டுகோள்

ராகுல்காந்திக்கு எதிராக பேசினால் நாடு தழுவிய போராட்டத்தை நடத்துவோம்: செல்வப்பெருந்தகை பேட்டி

ஈஷா யோகா மையத்தில் 2வது நாளாக விசாரணை