தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது; பொதுமக்கள் ரூ50 ஆயிரத்துக்கு மேல் எடுத்துச்செல்ல அனுமதி இல்லை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி எச்சரிக்கை


சென்னை: தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று மாலை முதல் அமலுக்கு வந்துவிட்டது. பொதுமக்கள் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்துச்செல்ல அனுமதி இல்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார். இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று மாலை சென்னை, தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: நாடாளுமன்ற தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நேற்று அறிவித்துள்ளார். அதன்படி, தமிழகத்தில் மொத்தமுள்ள 39 நாடாளுமன்ற தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டமன்றத்துக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது.

தமிழகத்தில் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வருகிற 20ம் தேதி (புதன்) தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27ம் தேதி, வேட்புமனு பரிசீலனை 28ம் தேதியும், வேட்புமனு வாபஸ் வாங்க மார்ச் 30ம் தேதி மாலை வரை அனுமதிக்கப்பட்டு, அன்றைய தினமே இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி (செவ்வாய்) நடைபெறும். தேர்தல் தேதி (நேற்று பிற்பகல் 3 மணிக்கு) அறிவிக்கப்பட்ட உடனேயே தேர்தல் நடத்தை விதிமுறைகள் தமிழகத்தில் உடனடியாக அமலுக்கு வந்துவிட்டது. அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் பறக்கும் படையினர் வாகன பரிசோதனையில் நேற்று முதலே ஈடுபட தொடங்கி விட்டார்கள். தேர்தல் ஆணையம் என்ன உத்தரவு கொடுக்கிறதோ அது அப்படியே தமிழகத்தில் பின்பற்றப்படும். இன்னும் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையென்றால் கூட இப்போதும் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.

வருகிற 20ம் தேதிக்கு முன் கொடுத்தால் அவர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும். மற்ற விண்ணப்பங்கள் தேர்தலுக்கு பிறகே வாக்காளர் பட்டியலில் சேர்க்க முடியும். 85 வயதுக்கு மேல் வயதுள்ளவர்கள், ஊனமுற்றோர்களிடம் வீட்டிற்கே வந்தே தபால் வாக்கு அளிக்க ஏற்பாடு செய்யப்படும். அதற்கு 12டி விண்ணப்பத்தை அங்குள்ள வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாக கொடுப்பார்கள். அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்தால், வாக்குச்சாவடி அலுவலர்கள் வீட்டுக்கே வந்து வாங்கிக் கொள்வார்கள். ஊனமுற்றோர்கள் வேட்புமனு தாக்கல் (20ம் தேதி) தேதியில் இருந்து 5 நாட்களுக்குள் 12டி விண்ணப்பம் அளிக்க வேண்டும். தமிழகத்தில் இவ்வளவு அவசரமாக முதல்கட்ட தேர்தல் நடத்த அவசியம் என்ன? என்று கேட்கிறீர்கள். இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அனைத்து மாநிலங்களில் இருந்தும் தகவல்களை வாங்கி உள்ளது.

அதை கருத்தில் கொண்டுதான் முதல்கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2019 நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும்போது, தமிழகத்தில் 2வது கட்டமாக தேர்தல் நடந்தது. விளவங்கோடு சட்டமன்றத்துக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடக்கிறது. திருக்ேகாவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று தவறான தகவல் வெளியாகிறது. திருக்கோவிலூர் தொகுதிக்கு இனி இடைத்தேர்தல் கிடையாது. தற்ேபாது போட்டியிட்டு வெற்றிபெற்ற பொன்முடியே திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினராக தொடர்கிறார். தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்புக்காக 25 கம்பெனி துணை ராணுவ படையினர் வந்துள்ளனர். மற்றவர்கள் இனி படிப்படியாக வருவார்கள். தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு இனி பொதுமக்கள் 50 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே எடுத்துச் செல்ல முடியும்.

மேலும், வங்கிகள் மூலம் அதிக தொகை பரிவர்த்தனை நடத்தியவர்களை துறை சார்ந்த அதிகாரிகள் கண்காணிப்பார்கள். தேர்தல் நடைபெறும் 7 நாட்களுக்கு முன் வாக்காளர் சிலீப் வீடு வீடாக வழங்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். வாக்குச்சாவடி மையங்கள் இனி கூடுதலாக்க வாய்ப்பு இல்லை. அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கொடுத்தால் பரிசீலிப்போம். தமிழக அரசு சார்பில் புதிய அறிவிப்புகள், அரசாணைகள் இனி வெளியிடக்கூடாது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தவர்கள் அனைவருக்கும் மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் இருந்து விரைவு தபால் மூலம் வாக்காளர் அடையாள அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 9.12.2023ம் தேதிக்கு பிறகு கூட 5 லட்சம் விண்ணப்பம் வந்துள்ளது.

அந்த விண்ணப்பங்கள் மீதும் பரிசீலனை செய்து வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் இருந்தால்கூட, வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் டிரைவிங் லைசென்ஸ், ஆதார் அட்டை உள்ளிட்ட 11 அடையாள அட்டைகள் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும். அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் (கலெக்டர்கள்) கூட்டம் நாளை மாலை 3 மணிக்கு நடைபெறும். வாக்காளர்கள் வாக்களிக்க, மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வாக்குச்சாவடி மையங்களில் அனைத்து ஏற்பாடுகளும் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பொது நிகழ்ச்சியில் பங்கேற்கலாம்
வாக்காளர்களிடம் மதம், ஜாதி சம்பந்தமாக பேசி ஓட்டு கேட்கக்கூடாது என்று அனைத்துக்கட்சி தலைவர்களுக்கும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. அதை அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். பொது நிகழ்ச்சிகள் நடத்த எந்த தடையும் இல்லை. அதேநேரம், அதை வைத்துக்கொண்டு பிரசாரம் செய்யக்கூடாது என்று தடை உள்ளது. அந்த விழாவில் அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளலாம். இப்தார் நிகழ்ச்சியில் அரசியல் தலைவர்கள் பங்கேற்கலாம், ஆனால் வாக்கு சேகரிக்க கூடாது என்று தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.

Related posts

கேரளாவில் நகரசபை அலுவலகத்தில் ஊழியர்களின் ரீல்ஸ் வீடியோ: விளக்கம் கேட்டு நோட்டீஸ்

ஆர்எஸ்எஸ் எப்போதும் அரசியலமைப்புக்கு எதிரானது: வெளிநடப்புக்கு பின் கார்கே விமர்சனம்

ஆன்லைனில் ஊழல் புகார் விசாரணை அறிக்கை: அரசு துறைகள், வங்கிகளுக்கு சிவிசி அறிவுறுத்தல்