ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை தொடங்கி வைத்ததால் கட்சி பொறுப்புகளில் இருந்து தளவாய்சுந்தரம் எம்எல்ஏ நீக்கம்: எடப்பாடி பழனிசாமி திடீர் நடவடிக்கை

நாகர்கோவில்: குமரியில் நடந்த ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை தொடங்கி வைத்த தளவாய்சுந்தரத்தை மாவட்ட செயலாளர், அமைப்பு செயலாளர் பொறுப்புகளில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம், கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமானவர். தற்போது கன்னியாகுமரி எம்எல்ஏவாக உள்ள தளவாய்சுந்தரம், குமரி கிழக்கு மாவட்ட செயலாளராகவும், அதிமுக மாநில அமைப்பு செயலாளராகவும் இருந்தார். குமரி மாவட்ட அதிமுக தளவாய்சுந்தரத்தை மையப்படுத்தி இருந்தது. கட்சி நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில், திடீரென கட்சியின் அமைப்பு செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. நீக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அதிமுகவின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணாக, மாறுபட்ட வகையில் செயல்பட்டதாகவும், அதிமுகவின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு நடந்து கொண்டதாகவும் கிடைத்த தகவலின் அடிப்படையில், இது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. ஆகவே கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த தளவாய்சுந்தரம் எம்எல்ஏ, தான் வகித்து வரும் அமைப்பு செயலாளர், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்படுகிறார்’ என கூறி உள்ளார்.

சமீபத்தில் நாகர்கோவில் அருகே ஈசாந்திமங்கலத்தில் ஆர்.எஸ்.எஸ். சார்பில், ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தை தளவாய்சுந்தரம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதிமுக, பாஜ இடையே கூட்டணி உடைந்து, தற்போது இரு கட்சிகளை சேர்ந்தவர்களும் மாறி, மாறி விமர்சித்து வரும் நிலையில், ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பா.ஜ.வுடன் இனி கூட்டணி இல்லை என எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் பேசி வரும் நிலையில், ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை அவர் தொடங்கி வைத்தது பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகியது.

இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலரே வருத்தத்தை வெளிப்படுத்தி உள்ளனர். தளவாய்சுந்தரத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வலியுறுத்தி இருக்கிறார்கள். இதையடுத்து வேறு வழியின்றி தளவாய்சுந்தரத்துக்கு நோட்டீஸ் அனுப்ப எடப்பாடி உத்தரவிட்டதாகவும், விசாரணை முடியும் வரை கட்சி பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக நீக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது தளவாய்சுந்தரத்துக்கு எதிராக குமரி மாவட்ட அதிமுகவில் எதிர் கோஷ்டிகள் உருவாகி இருந்தனர். குறிப்பாக முன்னாள் அமைச்சர் பச்சைமால், முன்னாள் மாவட்ட செயலாளர் அசோகன் உள்ளிட்ட நிர்வாகிகள், தளவாய்சுந்தரத்துக்கு எதிராக செயல்பட்டு வந்த நிலையில் அவரது கட்சி பதவி பறிக்கப்பட்டு இருப்பது, தளவாய்சுந்தரத்தின் ஆதரவாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

* ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்றவர்
தளவாய்சுந்தரத்தை பொறுத்தவரை ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிகளில் இதற்கு முன்பும் கலந்து கொண்டிருக்கிறார். குறிப்பாக கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் நடந்த ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசி உள்ளார். ஆர்.எஸ்.எஸ். அகில இந்திய தலைவர் வருகையின் போது கூட அவர் சென்று சந்தித்து இருக்கிறார். அந்த அடிப்படையில் தான் இந்த ஊர்வல நிகழ்ச்சியிலும் பங்கேற்று இருக்கிறார் என அவரது ஆதரவாளர்கள் கூறினர்.

* நடப்பதை ஏற்க வேண்டியது தான்..
பதவி பறிப்பு குறித்து தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. கூறுகையில், ‘எது நடந்தாலும் ஓ.கே. ரைட் என செல்ல வேண்டியது தான். ஆர்.எஸ்.எஸ். பேரணியை தொடங்கி வைத்தால், அதிமுகவின் பலம் குறையும் என்று நினைத்திருக்கலாம். நடப்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்’ என்றார்.

* சேலத்துக்கு படையெடுத்த நிர்வாகிகள்
தளவாய்சுந்தரத்தின் மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டதை தொடர்ந்து அடுத்த மாவட்ட செயலாளர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னாள் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பச்சைமால், முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் உள்ளிட்டோர் பெயர்கள் அடிபடுகின்றன. இது தொடர்பாக கட்சியின் மாநில அவைத்தலைவர் தமிழ் மகன் உசேனுடன், அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இருப்பதை தொடர்ந்து பச்சைமால், நாஞ்சில் முருகேசன் உள்ளிட்டோர் நேற்று மதியம் சேலம் விரைந்தனர். மேலும் சில நிர்வாகிகளும் சென்றுள்ளனர்.

Related posts

தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளில் வசூலிக்கும் கட்டணத்தை சரிபார்க்க நிர்ணயக்குழுவுக்கு தடையில்லை: ஐகோர்ட் உத்தரவு

தலைமைச் செயலகத்திற்கு வரக்கூடிய தபால்கள் மின்னணு மயமாக்கல் திட்டம்: தமிழ்நாடு அரசு தகவல்

வளி மண்டல சுழற்சி 11 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு