சென்னையில் இருந்து இலங்கைக்கு ரூ70 கோடி மெத்தபெட்டமைன் கடத்த முயன்ற 3 பேர் கைது: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மடக்கி பிடித்தனர்


சென்னை: சென்னையிலிருந்து ராமநாதபுரம் வழியாக கடல் மார்கமாக இலங்கைக்கு, பல லட்சம் மதிப்புள்ள போதைப் பொருள் கடத்தப்படுவதாக, தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்தில் நேற்று அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில், கையில் பையுடன் ஒருவர் நின்று இருந்தார். அவரை, போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால், அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் 5 கிலோ 970 கிராம் கொண்ட உயர்ரக போதைப்பொருளான மெத்தபெட்டமைன் இருந்தது.

விசாரணையில், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பைசூல் ரஹ்மத் என்றும், இவர் ராமநாதபுரத்தில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு போதைப்பொருள் கடத்த முயன்றது தெரியவந்தது. அவர் அளித்த தகவலின் படி, செங்குன்றம் பகுதியை சேர்ந்த மன்சூர் மற்றும் இப்ராஹிம் ஆகிய 2 நபர்களை அதிகாரிகள் கைது செய்தனர். 3 பேரிடம் இருந்து ₹70 கோடி மதிப்புள்ள 6 கிலோ 920 கிராம் மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது.
இதில் தொடர்புடைய போதைப்பொருள் கடத்தல் கும்பலை, தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

Related posts

காங்கயத்தில் வெறிநாய்கள் கடித்து 34 ஆடுகள் பலி : நிவாரணம் கேட்டு விவசாயிகள் போராட்டத்தால் பரபரப்பு

மணவாளக்குறிச்சி ஐஆர்இஎல் நிறுவனத்திற்காக 1144 ஹெக்டேரில் 59.88 மில்லியன் டன் மண் எடுக்க திட்டம்…

ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வு தொடங்கியது