ரூ.30 ஆயிரம் லஞ்சம்: அதிமுக பெண் ஊராட்சி தலைவர், கணவருடன் கைது

சேத்துப்பட்டு: பயனாளிக்கு வீட்டு வரி ரசீது வழங்க ரூ.30ஆயிரம் லஞ்சம் வாங்கிய அதிமுக ஊராட்சி மன்ற தலைவியும், அவரது கணவரும் கைது செய்யப்பட்டனர். திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியம் கீழ்ப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் எம்ஜிஆர். நெசவு தொழிலாளி. இவரது மனைவி சரஸ்வதி. இவர்கள் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டி 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் குடியேறினர். இந்த வீட்டுக்கு வரி செலுத்த அதிமுகவை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் வேண்டாவை அணுகினர். அப்போது வேண்டாவும், அவரது கணவர் மணியும், ஏற்கனவே பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயனாளியாக தேர்வு செய்தபோது எந்த பணமும் தரவில்லை. எனவே ரூ.30 ஆயிரம் கொடுத்தால்தான் வீட்டு வரி ரசீது கொடுப்போம் என்று கூறினார்களாம்.

இதுகுறித்து திருவண்ணாமலை விஜிலென்ஸ் டிஎஸ்பி வேல்முருகனிடம் எம்ஜிஆர் புகார் அளித்தார். போலீசார் தெரிவித்தபடி நேற்று வயலில் வேலை செய்துகொண்டிருந்த தலைவர் வேண்டா, அவரது கணவர் மணி ஆகியோரிடம் எம்.ஜி.ஆர் பணத்தை கொடுத்துள்ளார். அப்போது அங்கு வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ஊராட்சி மன்ற தலைவி மற்றும் அவரது கணவர் மணி ஆகிய இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.ஏற்கனவே, போளூர் ஒன்றியம் எடப்பிறை ஊராட்சி மன்ற அதிமுக தலைவி ஜீவா கடந்த மாதம் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் அரிவாளால் வெட்டி படுகொலை!

உக்ரைன் போர் விவகாரத்திற்கு மத்தியில்; பிரதமர் மோடி ரஷ்யா பயணம்: ஆஸ்திரியாவும் செல்கிறார்

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது