பள்ளி கல்வித்துறை சார்பில் ரூ.264 கோடியில் புதிய கட்டிடங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: பள்ளிக்கல்வி துறை சார்பில், ரூ.264 கோடியே 15 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் நலன் கருதி, பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு போன்ற சிறப்பு திட்டங்களை செயல்படுத்துதல், வகுப்பறைக் கட்டிடங்கள், குடிநீர் வசதி, கழிவறைகள், மின்சாதன வசதிகள் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை அரசு சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தை வேலூரில் நடந்த விழாவில் கடந்த பிப்ரவரி 1ம் தேதி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தில் 2022-23 மற்றும் 2023-24ம் ஆண்டுகளில் ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு ரூ.1,887.75 கோடியும், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக ரூ.316 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், பள்ளிக்கல்வி துறையில் ரூ.114 கோடியே 29 லட்சம் செலவில் 26 மாவட்டங்களில் உள்ள 106 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள 515 வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் 12 ஆய்வக கட்டிடங்கள், தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்பட்டு வரும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஊரக வளர்ச்சித்துறை மூலம் குழந்தை நேய வகுப்பறை கட்டும் திட்டத்தின் கீழ், ரூ.68 கோடியே 66 லட்சம் செலவில் 25 மாவட்டங்களில் உள்ள 176 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள 441 வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் தமிழ்நாட்டின் 28 மாவட்டங்களில் இயங்கி வரும் 28 தகைசால் பள்ளிகளில் ரூ.61 கோடியே 70 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்ட பள்ளி கட்டிடங்கள், திருவண்ணாமலையில் ரூ.19 கோடியே 50 லட்சம் செலவில் கூட்ட அரங்குகள், அலுவலக அறைகள், காணொலிக் கூடங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய இரண்டு தளங்களுடன் கட்டப்பட்டுள்ள முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்துடன் கூடிய ஒருங்கிணைந்த கல்வி வளாகம் என மொத்தம் ரூ.264 கோடியே 15 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள பள்ளிக்கல்வி துறை கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, பள்ளிக்கல்வி துறை செயலாளர் மதுமதி, ஒருங்கிணைந்த கல்வி மாநில திட்ட இயக்குநர் ஆர்த்தி, பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநர் நரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு