சார்பதிவாளர் வீட்டில் சிக்கிய ரூ.13.75 லட்சம், 80 பவுன் நகைகள் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

வேலூர்: காட்பாடியில் சார்பதிவாளர் வீட்டில் சோதனையில் சிக்கிய ரூ.13.75 லட்சம் மற்றும் 80 பவுன் நகைகளை விஜிலென்ஸ் போலீசார் கோர்ட்டில் ஒப்படைத்தனர். வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளராக (பொறுப்பு) பணியாற்றுபவர் நித்தியானந்தம். இவர் மீது பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக புகார்கள் வந்தது. இதையடுத்து வேலூர் விஜிலென்ஸ் இன்ஸ்பெக்டர் விஜய் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் அலுவலகத்திற்குள் நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர். நள்ளிரவு 12.30 மணி வரை நடந்த இந்த சோதனையில் ரூ.2.14 லட்சம் கணக்கில் வராத பணத்தை கைப்பற்றினர். தொடர்ந்து, வேலூர் தாலுகா கணியம்பாடி அடுத்த கீழ்வல்லம் கிராமத்தில் உள்ள நித்தியானந்தம் வீட்டில் நேற்று காலை முதல் மாலை 6 மணி வரை விஜிலென்ஸ் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரது வீட்டில் இருந்த ஆவணங்கள் ஒவ்வொன்றாக சரிபார்க்கப்பட்டது.

மேலும் வீட்டில் உரிய ஆவணங்கள் இல்லாமல் வைத்திருந்த பணம், அலுவலகத்தில் கைப்பற்றிய பணம் என மொத்தம் ரூ.13 லட்சத்து 75 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் 80 பவுன் நகைகளை வேலூர் கோர்ட்டில் ஒப்படைத்தனர். தொடர்ந்து வீட்டில் கிடைத்த ஆவணங்கள், சார்பதிவாளர் அலுவலகத்தில் கிடைத்த ஆவணங்களை வைத்து அவரது நண்பர்கள், சென்னையில் உள்ள அவரது உறவினர் வீடுகளிலும் சோதனை நடத்த விஜிலென்ஸ் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.அதோடு சார்பதிவாளர் (பொறுப்பு) நித்தியானந்தம் மீது விஜிலென்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை, கைப்பற்றப்பட்ட பணம், நகைகள், ஆவணங்கள் தொடர்பாகவும், முறைகேடுகளில் அவரது தொடர்பு குறித்தும் துறைரீதியான நடவடிக்கைக்காக பதிவுத்துறையிடம் விஜிலென்ஸ் போலீசார் அறிக்கை தாக்கல் செய்யவும் திட்டமிட்டுள்ளனர். நித்தியானந்தம் விரைவில் சஸ்பெண்ட் செய்யப்படலாம் என தெரிகிறது.

 

Related posts

650 தொகுதிகளை கொண்ட பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது

சேலம் மாநகராட்சி முன்னாள் மண்டலக்குழு தலைவர் வெட்டிக்கொலை: தொழில் போட்டியா அல்லது முன்பகை காரணமாக என போலீஸ் விசாரணை

தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவரை ஏன் பணி நீக்கம் செய்யவில்லை? ஐகோர்ட் கேள்வி