ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கில் கைதான எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு மேலும் ஒருநாள் போலீஸ் காவல்

கரூர்: ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கில் கைதான அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை மேலும் ஒருநாள் போலீஸ் காவலில் விசாரிக்க கரூர் நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது. கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த தொழிலதிபர் பிரகாஷிடம் ரூ.100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை அபகரித்த புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது உறவினர் பிரவீன் (28), உடந்தையாக இருந்த வில்லிவாக்கம் இன்ஸ்பெக்டர் பிரித்விராஜ் ஆகியோர் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கரை 2 நாள் காவலில் விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு கடந்த 20ம்தேதி கரூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதன்படி கரூர் திண்ணப்பா நகரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் எஸ்பி தேவி தலைமையிலான போலீசார் கடந்த 2 நாளாக அவரிடம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் விசாரணை முடிந்து நேற்று மதியம் 2 மணிக்கு எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1ல் ஆஜர்படுத்தப்பட்டார்.

தொடர்ந்து, வாங்கல் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கு தொடர்பாக எம்.ஆர்.விஜயபாஸ்கரை ஒரு வாரம் காவலில் விசாரிக்க வாங்கல் போலீசார் மனு அளித்தனர். மாலை 6 மணி வரை இந்த மனு மீதான விசாரணை நடந்தது. ஒரு நாள் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ள அனுமதி வழங்கிய நீதிபதி பரத்குமார், இன்று மாலை 5 மணிக்கு ஆஜர்படுத்த உத்தரவிட்டார். இதனையடுத்து வாங்கல் போலீசார், எம்.ஆர்.விஜயபாஸ்கரை இரவு 7.30 மணியளவில் வாங்கல் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு