ரூ.6.33 கோடியில் புதிய வடிவில் கட்ட நடவடிக்கை ரயில் நிலைய முகப்பை இடிக்கும் பணி தீவிரம்

பொள்ளாச்சி : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 1915ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், முதன் முதலாக ரயில்வே ஸ்டேஷன் துவங்கப்பட்டது. சில மாதங்களில், ரயில்வே ஸ்டேஷனின் முகப்பு பகுதி அறை ஏற்படுத்தப்பட்டது. அங்கு டிக்கெட் கவுண்டர் மற்றும் பயணிகள் அமர்ந்திருக்கும் அறை உள்ளிட்ட வசதிகளுடன் சுமார் 100 ஆண்டுக்கு முன்பு முகப்பு கட்டிடம் ஏற்படுத்தப்பட்டது.

கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு, திண்டுக்கல்-போத்தனூர் அகல ரயில்பாதை திட்டத்தில், மீட்டர்கேஜ் இருப்பு பாதையை மாற்றி, அகல ரயில்பாதையாக அமைக்கப்பட்டதிலிருந்து, பொள்ளாச்சி வழியாக பாலக்காடு மற்றும் பழனி, கோவை, மதுரை, திருச்செந்தூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு ரயில் சேவை தொடர்ந்துள்ளது.

இந்த நிலையில், பழமையான பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷன் முகப்பு கட்டிடத்தை அப்புறப்படுத்தி, புதிய வடிவமைப்பில் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், கேரள மாடலில் அந்த வடிவமைப்பு அமைக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதற்கான வடிவமைப்பும் சமூக தளங்களில் பரவலாகி வருகிறது. பழைய நுழைவுவாயில் கட்டிடத்துக்கு பதில் புதிதாக நுழைவுவாயில் அறை கட்டிடம் பல்வேறு வசதிகளுடன் அமைக்கும்போது, தமிழ்நாட்டின் வழக்கமான மாடல்போன்று இருக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ரயில்வே ஸ்டேஷன் முகப்பை புதிய வடிவமைப்பில் ஏற்படுத்துவதற்காக, தற்போதைய முகப்பு பகுதியை ராட்சத இயந்திரம் கொண்டு, கட்டிடத்தை இடிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. இன்னும் சிலநாட்களில் அப்பணி முழுமையாக நிறைவடையும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷன் முகப்பு பகுதி புதிய வடிவில் அமைப்பதற்கான பணி துவங்கப்படும் எனவும், இதற்காக ரூ.6.33 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

9 மணி நிலவரம்: ஹரியானாவில் 9.53% வாக்குப்பதிவு

வெயில் தாக்கம் அதிகரிப்பால் உப்பு உற்பத்தி தீவிரம்

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 10,000 கன அடியாக அதிகரிப்பு