ரூ.2000 மாற்றி தருவதாக ரூ.35 லட்சம் கொள்ளை

மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி அருகே 2000 ரூபாய் நோட்டை கமிஷன் அடிப்படையில் மாற்றுவதற்காக ரூ.35 லட்சத்தை கை மாற்றும்போது அதிகாரிகள் எனக் கூறி வந்த கும்பல் அதை சுருட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே சின்ன ஓஉலாபுரத்தை சேர்ந்தவர் சிவாஜி (67) விவசாயி. இவரிடம் உறவினர் செந்தில், நண்பர் பாண்டி என்பவர் மூலம் ஈரோட்டில் உள்ள மிகப்பெரிய பணக்காரர் 2000 ரூபாய் நோட்டு மாற்றி கொடுத்தால் 20 சதவீதம் கமிஷன் தருவதாக கூறியுள்ளார். 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றி கொடுத்தால் கமிஷன் போக 35 லட்சம் கொடுத்தால் போதும் என கூறியுள்ளார்.

இதனையடுத்து சிவாஜி மற்றும் அவரது உறவினர் செந்தில், மாதேஷ் குமார் மற்றும் டிரைவர் குபேந்திரன் ஆகியோர் 4ம் தேதி, 35 லட்சத்தை எடுத்துக்கொண்டு ஈரோடு வந்துள்ளனர். இவர்களுக்கு பாண்டி என்பவர், அவ்வப்போது தகவல் கூறிக்கொண்டே வந்துள்ளார். மொடக்குறிச்சி அருகே உள்ள லக்காபுரம் பரிசல் துறை அருகே ஒரு காரில் ராஜ்குமார் மற்றும் 5 பேர் வந்தனர். அவர்கள் சிவாஜி வந்த காரில் இருந்த ரூ.35 லட்சத்தை தங்கள் காருக்கு கைமாற்றியுள்ளனர். பின்னர் ராஜ்குமார் வந்த காரிலேயே சிவாஜி, செந்தில் ஆகியோரையும் ஏறிக்கொண்டு திண்டல் ரிங் ரோட்டில் சிறிது தூரம் சென்று காரை நிறுத்தினர்.

அப்போது எதிரே வந்த கார், இவர்கள் சென்ற காரை மறித்துள்ளது. அதிலிருந்து இறங்கிய 4 பேர் கொண்ட கும்பல், நாங்கள் அதிகாரிகள் என்று கூறி சோதனை நடத்தினர். இதனையடுத்து ராஜ்குமார் காரில் இருந்து சிவாஜி, செந்தில் ஆகியோரை அவசர அவசரமாக அங்கேயே இறக்கி விட்டு விட்டு, அதிகாரிகள் என கூறிய கும்பல் திண்டல் நோக்கி காரில் சென்றது. நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் ஏமாந்ததை உணர்ந்த சிவாஜி, செந்தில் ஆகியோர் மொடக்குறிச்சி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

நகையை பறித்துக்கொண்டு மூதாட்டி அடித்து கொலை உறவினர்கள் சாலை மறியல்

காஞ்சிபுரத்தில் ரூ.640 கோடியில் கண்ணாடி தொழிற்சாலை: சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கியது தமிழ்நாடு சுற்றுச்சூழல் ஆணையம்

சிகிச்சைக்கு வருவோர் அதிகரிப்பு அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும்