விஷச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்துக்கு எதன் அடிப்படையில் ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது: அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை: கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்துக்கு எதன் அடிப்படையில் ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது என ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த விஷசாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் 10க்கும் மேற்பட்டோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.

மேலும் இந்த சம்பவத்தில் பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கும் கூடுதல் நிவாரணங்களையும் அறிவித்திருந்தது. கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குவதை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த முகமது கோஸ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில்; கள்ளச்சாராயம் குடிப்பது சட்டவிரோதம்; கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களை பாதிக்கப்பட்டவர்களாக கருதக் கூடாது. சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு எந்த அடிப்படையில் அதிக இழப்பீடு தருகிறது என்பதை அரசு தெளிவுப்படுத்தவில்லை.

தீ விபத்து உள்ளிட்ட விபத்துகளில் உயிரிழந்தவர்களுக்கு குறைந்த இழப்பீடே வழங்கப்படுகிறது. விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் சுதந்திர போராட்ட தியாகிகளோ, சமூக சேகவர்களோ அல்ல. விஷச்சாராயம் குடித்து இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு தரும் அரசு உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இந்த வழக்கு இன்று உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன், நீதிபதி முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது; விஷச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்துக்கு எதன் அடிப்படையில் ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது என நீதிபதி கேள்வி எழுப்பினார். இழப்பீடு தொகையை மறுபரிசீலனை செய்வது குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்கும்படி உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

Related posts

பொய்மையின் மொத்த உருவம் எடப்பாடி பழனிசாமி: ஒ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.54,400ஆக விற்பனை

வட கிழக்கு மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்