ரூ.1.55 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆரம்ப, துணை சுகாதார நிலையங்கள் திறப்பு

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் ரூ.1.55 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள தெப்பக்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம்,மசக்கல் துணை சுகாதார நிலையம், இத்தலார் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் குடியிருப்பு ஆகிய கட்டடங்களை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

நீலகிரி மாவட்டத்தில், ரூ.60 லட்சத்தில் கட்டப்பட்ட தெப்பக்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டடம்,ரூ.30 லட்சத்தில் கட்டப்பட்ட மசக்கல் துணை சுகாதார நிலைய புதிய கட்டடம் மற்றும் ரூ.65 லட்சத்தில் கட்டப்பட்ட இத்தலார் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் குடியிருப்பு கட்டடம் என மொத்தம் ரூ.1.55 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்தார்.

தொடர்ந்து அவர் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர், அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் மருத்துவத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து சிறப்பாக மருத்துவத் துறையை செயல்படுத்தி வருகிறார். நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.உதகையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.

அதேபோல ரூ.31 கோடியில் கூடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.இதன் கட்டுமான பணிகள் நிறைவு பெற்றவுடன் தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைப்பார். அதே போல், 700 படுக்கைகள் கொண்ட ஊட்டி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளது. இந்தியாவிலேயே மலை மாவட்டங்களில் சிம்லாவிற்கு அடுத்ததாக நீலகிரியில்தான் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையின் மூலம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் மற்றும் பந்தலூர் உள்ளிட்ட பகுதியிலுள்ள பொதுமக்கள் பயன்பெறுவார்கள்.

பழங்குடியின மக்கள் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், கூடலூர் அரசு தலைமை மருத்துவமனையிலும் பழங்குடியின ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனிப்பிரிவை ஏற்படுத்தி தர வேண்டும் என தெரிவித்து வருகிறார்கள்.நிச்சயமாக இதனை பரிசீலனை செய்து, பழங்குடியின ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக பிரத்யேக வார்டுகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாடு முதலமைச்சர், கடைக்கோடியில் உள்ள பொதுமக்களுக்கும் மருத்துவ வசதி சென்று சேர வேண்டும் என அறிவுறுத்தியதை தொடர்ந்து, நான் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள மலை கிராமங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டபோது, அங்குள்ள 8 கிராமங்களில் உள்ள பொதுமக்களுக்கு மருத்துவ வசதி என்பது எட்டாகனியாக இருந்தது தெரிய வந்தது. அந்த கிராமங்களில் அங்குள்ள மக்களுக்கு சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய் என எந்தவித நோய் இருந்தாலும் தெரிவதில்லை. எனவே அவர்களுக்கு குறும்படங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதனை முதலமைச்சரிடம் தெரிவித்தபோது, அவர்களுக்கும் மருத்துவ வசதி சென்று சேர வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்டதுதான் மக்களைத் தேடி மருத்துவ முகாம் திட்டமாகும். இத்திட்டத்தின் மூலம் பொதுமக்கள் வசிக்கும் அவரவர் இல்லங்களுக்கே செவிலியர்கள் நேரடியாக சென்று மருந்து பெட்டகங்கள் வழங்கப்பட்டு வருகிறது. முதல்வர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து 50 லட்சம் பயனாளிகளுக்கு முதல்வரே மருந்து பெட்டகங்களை வழங்கினார்.
அதேபோல் திருச்சி மாவட்டத்திலும் மருந்து பெட்டகங்களையும் வழங்கினார். தற்போது இத்திட்டத்தின் கீழ், 1 கோடியே 20 ஆயிரம் பயனாளிகள் மருந்து பெட்டகங்களை பெற்று பயனடைந்து வருகிறார்கள்.

மேலும், தமிழ்நாட்டில், இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48 மணி நேரம் மற்றும் இதயம் காப்போம் உள்ளிட்ட திட்டங்கள் மருத்துவத்துறை சார்பில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாரடைப்பு ஏற்படும்போது அவர்களை உடனடியாக காப்பாற்ற 3 வகையான 14 மாத்திரைகளை வழங்கும் திட்டம்தான் இதயம் காப்போம் திட்டமாகும்.இத்திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதல் 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 8,713 துணை சுகாதார நிலையங்களில் இதய நோய்க்கான மாத்திரைகள் உள்ளது.இத்திட்டத்தின்கீழ், ஏறக்குறைய 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.

பாம்பு கடி, நாய்க் கடி மருந்து, மாத்திரைகள் பெரும்பாலும் வட்டார மருத்துவமனைகளில்தான் இருக்கும். அம்மாத்திரைகளை ஆரம்ப சுகாதார நிலையங்களில் வைக்க வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் உத்தரவிட்டதை தொடர்ந்து, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பாம்பு கடி, நாய்க்கடி மருந்து மாத்திரைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
மேலும், பழங்குடியினர்கள் பயன்பெறும் வகையில் சிக்கல் செல் அனிமியா என்ற திட்டத்தின்கீழ், 3287 பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டத்தில் 69 நபர்களுக்கும், 12 ஆயிரத்து 53 பழங்குடியின கர்ப்பிணிகளை பரிசோதனை செய்தததில் அதில் 89 பேருக்கு நோய் தாக்கம் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு தேவையான ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகிறது.

தெப்பக்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையமானது, கூடலூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது. 4217 மக்கள் தொகையை கொண்ட இப்பகுதியில் சிங்காரா மற்றும் தொரப்பள்ளி ஆகிய இரண்டு துணை சுகாதார நிலையங்களுடன் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படவுள்ளது. தெப்பக்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 1 மருத்துவ அலுவலர், 1 மருந்தாளுநர், 3 செவிலியர்கள், 1 ஆய்வக நுட்புநர், 1 பகுதி சுகாதார செவிலியர், 2 கிராம சுகாதார செவிலியர்கள், 1 மருத்துவமனை பணியாளர், 1 துப்புரவு பணியாளர் ஆகியோருடன் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்டடம் செயல்படவுள்ளது.

இங்கு உள்நோயாளிகள், வெளிநோயாளிகளுக்கான பிரிவுகள் செயல்படவுள்ளது. மேலும் மருந்தகம், ஆய்வகம், பிரசவ அறை மற்றும் 3 படுக்கைகளுடன் கூடிய உள்நோயாளிகளுக்கான அறையுடன் இந்த ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படவுள்ளது. இங்கு குழந்தைகள் பிறந்ததிலிருந்து 16 வயது முடிய அனைத்து தடுப்பூசிகளும் போடப்படும்.

மேலும், கர்ப்பகால பரிசோதனை, பிரசவித்த தாய்மார்களுக்கான கவனிப்பு, காய்ச்சல், சுவாச நோய்த்தொற்றுகள், வயிற்றுப்போக்கு, தோல்நோய்த் தொற்றுகள், ஒவ்வாமை, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, மூட்டு மற்றும் தசை எலும்பு பிரச்சனைகள், கண் மற்றும் காது நோய்த் தொற்றுகள், சிறுநீர் பாதை தொற்று, இரத்த சோகை, பாம்புக்கடி மற்றும் நாய்க்கடிக்கான சிகிச்சை, ஊட்டச்சத்து குறைபாடுடைய மற்றும் தாய் மற்றும் குழந்தை மருத்துவ பிரச்னைகள் என அனைத்திற்கும் சிகிச்சை வழங்கப்படும், என்றார்.

முன்னதாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் 20 பயனாளிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் மதிப்பில் ஊட்டச்சத்து பெட்டகங்களையும், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 15 பயனாளிகளுக்கு தலா ரூ.1,000 ம் மதிப்பிலான மருந்து பெட்டகங்களையும் வழங்கினார்.

இந்நிகழ்வில் துணை இயக்குநர் (முதுமலை புலிகள் காப்பகம்) திவ்யா,மாவட்ட ஊராட்சித்தலைவர் பொன்தோஸ், கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் முகமது குதரதுல்லா,இணை இயக்குநர் (மருத்துவ நலப்பணிகள்) பழனிசாமி, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) பாலுசாமி,கூடலூர் நகரமன்றத்தலைவர் பரிமளா, கூடலூர் முன்னாள் எம்எல்ஏ திராவிடமணி,வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன், கூடலூர் ஊராட்சி ஒன்றியத்தலைவர் கீர்த்தனா,ஸ்ரீமதுரை ஊராட்சிமன்ற தலைவர் சுனில் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related posts

புரட்டாசி மாத கிருத்திகை முன்னிட்டு திருத்தணி முருகன் கோயிலில் பல்லாயிரம் பக்தர்கள் குவிந்தனர்: 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

செங்கல்பட்டு அருகே இன்று அதிகாலை பயங்கரம்; நடைபயிற்சி சென்ற வாலிபர் அரிவாளால் வெட்டி கொலை: முன்விரோதமா? போலீசார் விசாரணை

திருப்பதி கோயில் லட்டு விவகாரம்; ஆந்திர துணை முதல்வர் பவன்கல்யாண் 11 நாள் விரதம்