மகனின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தியதால் சிறையில் இருந்தபடியே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய ரவுடி நாகேந்திரன்: பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று சேர்ந்தது எப்படி? குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்

பெரம்பூர்: மகனின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தியதால் சிறையில் இருந்தபடியே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய சதி திட்டத்தை ரவுடி நாகேந்திரன் வகுத்துள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று சேர்ந்தது எப்படி என்பது உள்ளிட்ட நிகழ்வுகள் குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை 5ம் தேதி கொலை செய்யப்பட்டார். இது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. விசாரணையில், மறைந்த ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிக்கு பழியாக நடந்ததாகவும், பின்னர் ஆருத்ரா கோல்ட் மோசடி விவகாரம் தொடர்பாக நடந்ததாகவும் என பல்வேறு தகவல்கள் வெளியானது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி முக்கிய ரவுடிகளான நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன், பெண் தாதா அஞ்சலை, ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்ளிட்ட 28 பேரை கைது செய்தனர். இந்நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக 90 நாட்களில் அனைத்து விதமான கோணங்களிலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி 5 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கையை நேற்று எழும்பூர் நீதிமன்றத்தில் சென்னை போலீசார் தாக்கல் செய்தனர். 300க்கும் மேற்பட்ட சாட்சியங்கள் மற்றும் 750 வகையான ஆவணங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

ஆம்ஸ்ட்ராங் கொலையை அரங்கேற்றியது எப்படி என்ற முழு விவரத்தையும் குற்றப்பத்திரிக்கையில் போலீசார் சேர்த்துள்ளனர். இதில், பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்களை போலீசார் பதிவு செய்துள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் சென்னையில் ஆட்களின் பலத்தோடு வளர்ச்சி அடைந்திருந்தார். அந்த வளர்ச்சியை தடுக்க வேண்டும். குறிப்பாக ரவுடிசத்தில் சென்னையை ஆள்வது யார் என்ற விவகாரத்தில் பல ரவுடிகளுக்கு ஆர்ம்ஸ்ட்ராங் தடையாக இருந்துள்ளார். அதன் காரணமாகவே கூட்டு சேர்ந்து இந்த கொலையை செய்துள்ளனர். மேலும் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய முக்கியமாக 4 காரணங்கள் சொல்லப்படுகிறது. அதாவது, ரவுடி நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமனுடன் ஏற்பட்ட நில விவகாரம், ரவுடி சம்பவ செந்திலுடன் தலைமை செயலக காலனியில் வீடு விவகாரத்தில் ரூ.12 லட்சம் மிரட்டி வாங்கிய விவகாரம், ஆற்காடு சுரேஷின் கொலை வழக்கு மற்றும் தென்னரசு கொலை வழக்கு ஆகியவை என்று சொல்லப்படுகிறது.

ஆருத்ரா கோல்ட் டிரேடிங் விவகார மோசடி தொடர்பாக எந்தவித முன்விரோதமும் இருப்பது தெரியவில்லை. ஆனால் ஆற்காடு சுரேஷ் மரணத்தின்போது அவரது மனைவியின் சபதத்தால் ஒரு வருடத்திற்குள் கொலையை அரங்கேற்ற வேண்டும் என வேகப்படுத்தி இருப்பதாக தெரிகிறது. இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ரவுடி நாகேந்திரன்தான் அனைவரையும் ஒருங்கிணைத்து இந்த கொலையை அரங்கேற்றியுள்ளார். குறிப்பாக சிறையில் உள்ள நாகேந்திரன், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்லும்போது மற்றும் பல்வேறு நட்சத்திர விடுதிகளில் சிலர் ஒன்று திரண்டு திட்டம் வகுத்துள்ளனர். இப்படியாக 6 மாதமாக நடந்துள்ளது. குறிப்பாக ரெக்கி ஆபரேஷன் மூலம் கொலையை அரங்கேற்றி உள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான பண உதவியை ரவுடி சம்பவ செந்தில் செய்திருப்பதாகவும், 3வது குற்றவாளியான அஸ்வத்தாமன், நாகேந்திரன் போடும் திட்டத்தை வெளியில் இருந்து செயல்படுத்தி வந்துள்ளார்.

மொத்தமாக ரூ.10 லட்சம் செலவிட்டுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் வழக்கில் முதலில் கைதான 11 குற்றவாளிகள் மூலம் தொழில்நுட்ப ரீதியான விசாரணையை நடத்தப்பட்டது. அதன் காரணமாகவே முக்கிய குற்றவாளிகளான நாகேந்திரன், சம்பவசெந்தில், அஸ்வத்தாமன் சிக்கியுள்ளனர். மேலும் இந்த கொலை வழக்கில் கைதானவர்கள் மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்தவர்கள் என 140 வங்கி கணக்குகளை சோதனை செய்து 73 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. அந்த வங்கி கணக்குகளில் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் இருக்கலாம் என கூறப்படுகிறது. அவற்றில் 80 லட்சம் ரூபாய் வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தலைமறைவான ரவுடி சம்பவசெந்தில் மற்றும் அவரது கூட்டாளி மொட்டை கிருஷ்ணனை பிடிக்க விரைவில் வெளிநாட்டிற்கு சென்னை போலீசார் செல்ல உள்ளனர்.

 

Related posts

செட்டிகுளத்தில் மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு!

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

ஒரே நேரத்தில் காசா, மேற்குகரை, லெபனான் மீது இஸ்ரேல் மும்முனை தாக்குதல்; ஈரான் எண்ணெய் கிணறு, அணு உலைக்கு குறி: மத்திய கிழக்கு பகுதியில் தொடரும் போர் பதற்றம்