ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக காவல்துறை அதிகாரி விளக்கம்!!

சென்னை:5 கொலை, 15 கொலை முயற்சி உட்பட 59 வழக்குகளில் தொடர்புடைய பிரபல வடசென்னை ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை இன்று அதிகாலை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர். ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்ட்டர் தொடர்பாக காவல்துறை அதிகாரி விளக்கம் அளித்தார். வடக்கு மண்டல இணை ஆணையர் பர்வேஷ்குமார் அளித்த பேட்டியில், “ஏ பிளஸ் கேட்டகிரி பட்டியலில் உள்ள வடசென்னை ரவுடியான காக்கா தோப்பு பாலாஜி மீது 5 கொலை மற்றும் 15 கொலை முயற்சி உட்பட 59 வழக்குகள் உள்ளது. இவனை கைது செய்ய கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக முயற்சி செய்து வருகிறோம். ஆனால் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி போலீசாரிடம் சிக்காமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.

இதற்கிடையே ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சொகுசு காரில் வெளிமாநிலத்தில் இருந்து சென்னைக்கு வந்துள்ளதாக புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ரவுடிகள் ஒழிப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி வடசென்னை முழுவதும் போலீசார் நேற்று இரவு உஷார் படுத்தப்பட்டனர். கொடுங்கையூர் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டனர். அதன்படி கொடுங்கையூர் முல்லைநகர் பகுதியில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு கொடுங்கையூர் காவல் நிலைய எஸ்ஐ முரளி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது புதுச்சேரி பதிவு எண் கொண்ட சொகுசு கார் ஒன்று மின்னல் வேகத்தில் வந்தது. இதை பார்த்த சோதனையில் ஈடுபட்ட போலீசார் காரை மறித்தபோது, அந்த கார் நிற்காமல் அதிவேகமாக சென்றது. இதனால் எஸ்ஐ முரளி தலைமையில் போலீசார் ரோந்து வாகனம் மூலம் தப்பி சென்ற சொகுசு காரை பின்தொடர்ந்து சென்றனர். மேலும் தப்பி சென்ற கார் தொடர்பாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அதன்படி இன்ஸ்பெக்டர் உடனடியாக முல்லைநகர் வழியாக வந்த சொகுசு காரை துரத்தி பிடிக்க முயன்ற போது, வியாசர்பாடி ஜீவா வழியாக வந்து வியாசர்பாடி பிஎஸ்என்எல் கோட்ரஸ் அருகே உள்ள காலி இடத்தில் சொகுசு காரை போலீசார் சினிமா பாணியில் சுற்றி வளைத்து மடக்கினர்.உடனே இன்ஸ்பெக்டர் சரவணன் சொகுசு காரில் இருந்த நபரை கீழே வரும்படி எச்சரித்தார். ஆனால் அந்த நபர் காரின் கண்ணாடியை இறக்கிய போது, கடந்த 3 ஆண்டுகளாக தேடப்பட்டு வரும் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என தெரியவந்தது. உடனே போலீசார் உஷாராகினர்.

இதை கவனித்த ரவுடி காக்கா தோப்பு பாலாஜி, காரில் வைத்திருந்த தனது துப்பாக்கியை எடுத்து போலீசாரை நோக்கி சுட்டார். ஆனால் நல் வாய்ப்பாக போலீசார் விலகியதால் 2 துப்பாக்கி குண்டு ரோந்து வாகனத்தின் மீது பாய்ந்தது. அந்த நேரத்தில் சொகுசு காரில் இருந்து ரவுடி காக்கா தோப்பு பாலாஜி தப்பி ஓடினார். அப்போது உஷாரான இன்ஸ்பெக்டர் சரவணன் தற்பாதுகாப்புக்காக திருப்பி சுட்டதில் ரவுடி காக்கா தோப்பு பாலாஜியின் வலது பக்கம் குண்டு பாய்ந்தது. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை, போலீசார் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் ஆய்வு செய்த போது ரவுடி காக்கா தோப்பு பாலாஜி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

காரை சோதனை செய்தபோது 10 கிலோவுக்கு மேற்பட்ட கஞ்சா மற்றும் வீச்சரிவாள் இருந்தது. ரவுடி பாலாஜி துப்பாக்கியால் சுட்டதில் போலீசார் யாருக்கும் காயம் இல்லை. காக்கா தோப்பு பாலாஜி ஓட்டி வந்த கார் யாருடையது என்று இனிமேல்தான் விசாரணை நடத்த வேண்டும். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்குக்கும் ரவுடி பாலாஜிக்கும் எந்த தொடர்பும் இல்லை. ரவுடி பாலாஜி என்கவுன்ட்டர் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தி அறிக்கை அளிப்பார்,”இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

மேகாலயாவில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.4-ஆக பதிவு

திருச்சி ஸ்ரீரங்கத்தில் கழிவறை கட்டும் பணிக்கு இடைக்கால தடை: ஐகோர்ட் கிளை

ரேஷன், ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகளை வழங்குவதற்கு மூன்று மாதங்கள் எதற்கு? : தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி