கொலை வழக்கில் போலீசார் சுற்றிவளைத்தபோது பைக்கில் தப்பிச்சென்ற ரவுடியின் கை, கால் முறிந்தது: கோயம்பேட்டில் பரபரப்பு


அண்ணாநகர்: சென்னை அயப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் காளிதாஸ்(29).இவர் தனியார் நிறுவனத்தில் டெலிவரி ஊழியர். இவரது நண்பர் முகப்பேர் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி மணி(32). இவர்கள் இருவரும் நேற்றுமுன்தினம் இரவு முகப்பேர் பகுதியில் மது அருந்தியபோது இவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சரமாரியாக தாக்கிக்கொண்டனர். கடும் ஆத்திரம் அடைந்த ரவுடி மணி தான் மறைத்துவைத்திருந்த கத்தியால் விரட்டி காளிதாசை ஓட, ஓட சரமாரியாக வெட்டி கொலை செய்து தப்பினார். இதுதொடர்பாக ரவுடியை பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ் கண்ணா, முகமது சபியுல்லா ஆகியோர் தலைமையில் 3 தனிப்படை அமைத்து தேடி வந்தனர். நேற்று மாலை கோயம்பேடு மார்க்கெட் அருகே பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவல்படி, போலீசார் சென்றபோது ரவுடி மணி அங்கிருந்து பைக்கில் தப்பிச் செல்ல முயன்றார்.

அப்போது அங்குள்ள பாலத்தின் மீது பைக் மோதி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். உடனடியாக ரவுடி மணியை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரது வலது கை, வலது கால் முறிவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சிகிச்சை முடிந்து ரவுடி மணியை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். பிரபல ரவுடி மணி(எ) திருட்டு மணி ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியாக உள்ளார். இவர் மீது ஏற்கனவே அண்ணாநகர், அமைந்தகரை, திருமங்கலம், ஜெ.ஜெ.நகர், நொளம்பூர் மற்றும் மயிலாப்பூர் ஆகிய காவல் நிலையங்களில் கொலை முயற்சி, அடிதடி மற்றும் கஞ்சா வழக்கு உட்பட சுமார் 8 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. கடந்த 2017ம் ஆண்டு அமைந்தகரை காவல்நிலைய உதவி ஆய்வாளரை சுத்தியால் வெட்டிய சம்பவத்தில் இவர் மீது கொலை முயற்சி வழக்கு உள்ளது.

கடந்த 2023ம் ஆண்டு கஞ்சா வழக்கில் தலைமறைவாக சுற்றிவந்ததால் ஜெ.ஜெ.நகர் காவல் நிலைய தலைமை காவலர்கள் இருவர் ரவுடி மணியை மடக்கி பிடித்தபோது பீர்பாட்டிலால் அவர்களை தாக்கியபோது படுகாயம் அடைந்தனர். பைக் திருட்டு மற்றும் வீட்டின் பூட்டை உடைப்பதில் கில்லாடியாக இருந்துள்ளார். திருட்டு வழக்கில் நொளம்பூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இவ்வழக்கில் ஜாமீனில் வெளிவந்தது 20 நாட்கள் ஆகிறது. இவ்வாறு தெரியவந்துள்ளது.

Related posts

பாஜகவின் வறட்டு கவுரவம் … ஒரு கட்சியின் பேராசையை நிறைவேற்றுவதற்காக இந்திய ஜனநாயகத்தை வளைக்க முடியாது : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மன்னிப்பு கேட்குமா பாஜக?: விடுதலை ராசேந்திரன் கேள்வி

அனைத்து சாதி அர்ச்சகர்களுக்கு அவமதிப்பு: பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்