பிரபல ரவுடி ஸ்ரீபெரும்புதூர் சங்கர் கொலை வழக்கில் கைதான 3 பேரிடம் போலீஸ் விசாரணை..!!

காஞ்சிபுரம்: பாஜக பிரமுகரும் பிரபல ரவுடியுமான ஸ்ரீபெரும்புதூர் சங்கர் கொலை வழக்கில் கைதான 3 பேரிடம் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புரம் பகுதியை சேர்ந்தவர் பிபிஜி சங்கர் (42). இவர் வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவராகவும், பாஜகவில் எஸ்சி எஸ்டி பிரிவு மாநில பொருளாளராகவும் இருந்து வந்தார்.

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை நசரத்பேட்டை சிக்னல் அருகே சென்று கொண்டிருந்தபோது, காரை வழிமறித்த மர்ம கும்பல் காரின் மீது சரமாரியாக நாட்டு வெடிகுண்டு வீசியதையடுத்து, காரின் முன் பகுதி முழுவதும் சேதம் அடைந்தது. தன்னை கொலை செய்ய வந்துள்ளார்கள் என்பதை அறிந்து உயிரை கையில் பிடித்து கொண்டு உயிர் பிழைக்க காரில் இருந்து இறங்கி சாலையில் ஓடினார்.

அங்கும் மறைந்திருந்த மர்ம கும்பல் விடாமல் விரட்டி சென்று பிபிஜி சங்கரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இதில் பிபிஜி சங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இவ்வழக்கு தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி கவுன்சிலர் சாந்தகுமார், ஜெகன், குணா, சரத்குமார், ஆனந்த், சாந்தகுமார், சஞ்சு, உதயகுமார், தினேஷ் ஆகிய 9 பேர் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

9 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக, பூந்தமல்லி நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 1ல் நசரத்பேட்டை போலீசார் மனுத்தாக்கல் செய்தனர். இதையடுத்து, 9 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர். இந்நிலையில் முக்கிய குற்றவாளிகள் 3 பேரையும் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாந்தகுமார், ராஜ்குமார், முனுசாமி ஆகியோரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் நசரத்பேட்டை காவல் நிலைய எல்லையில் காரில் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி, சங்கர் கொலைக்கு முன் 3 குற்றவாளிகளிடம் இருந்ததாக விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது. பிடிபட்ட துப்பாக்கி சங்கரை கொலை செய்ய வாங்கப்பட்டதா அல்லது வேறு யாரையாவது கொலை செய்ய திட்டமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு – இன்று உத்தரவு

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி