பாம்ரோஸில் பக்கா வருமானம்!

சேலத்தில் இருந்து தருமபுரி செல்லும் சாலையில் இருக்கிறது மூக்கனூர் கிராமம். காடையாம்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட இந்த கிராமத்தில் பெரும்பாலும் மானாவாரி விவசாயம்தான் நடக்கும். செம்மண்ணும் சரளையுமான நிலத்தில் எங்கு திரும்பினாலும் சோளமும் வேர்க்கடலையுமான விவசாயம்தான் தெரியும். அந்தளவிற்கு மானாவாரி பயிரை மட்டும் நம்பி இருக்கும் கிராமம் இது. இந்த கிராமத்தில்தான் மானாவாரி பயிருக்கு அடுத்தபடியாக மாற்றுப்பயிர் விவசாயத்தை கையில் எடுத்து அதில் சாதித்து வருகிறார் விவசாயி மோகனசுந்தரம். அது என்ன மாற்று பயிர்? உங்களைப் போலவே ஆர்வத்தோடுதான் அவரை சந்திப்பதற்காக மூக்கனூர் நோக்கி விரைந்தோம். நாங்கள் வருவதை ஏற்கனவே தெரிந்திருந்தமோகனசுந்தரம், நாங்கள் வந்ததும் எங்களை அவரது விவசாய பூமிக்கு அழைத்துச் சென்றார். மூக்கனூரில் இருந்து சரியாக இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது இவரது விவசாய பூமி. அங்கே சென்றதும் கால் வைக்க முடியாதளவு நிலம் முழுக்க பாம்ரோஸும் லெமன்கிராஸும். ஆமாம், ஊர்முழுக்க கடலை, சோளம் என விதைத்துக் கொண்டிருக்கும்போது கொஞ்சம் மாறுதலாக புல் விவசாயம் பக்கம் திரும்பியதோடு நம்மளையும் அவர் பக்கம் திருப்பிப் பார்க்க வைத்திருக்கிறார் விவசாயி மோகனசுந்தரம்.

பூர்வீகத்தொழில் மட்டுமல்ல எங்களுக்குத் தெரிந்த தொழிலும் விவசாயம் மட்டும்தான். அதனால்தான் இத்தனை ஆண்டு காலம் விடாப்பிடியாக விவசாயம் செய்து வருகிறேன் என பேசத் தொடங்கினார் விவசாயிமோகனசுந்தரம்.தாத்தா காலத்தில் நெல்லில் இருந்து கடலை, சோளம் என எல்லாமும் பயிரிட்டார்கள். அப்போது தண்ணீருக்கு பஞ்சம் இருக்காது. அதற்கடுத்து அப்பா, அப்பாவிற்கு அடுத்து நான் என விவசாயம் செய்ய வரும்போது தண்ணீர் குறைய ஆரம்பித்தது. அதேபோல விவசாயமும் குறைய ஆரம்பித்தது. விவசாயம் குறைவு என்றால் நாங்கள் நினைத்தது மாதிரி நெல் பயிர்கள் பயிரிட முடிவதில்லை. அதனால் நெல்லுக்குப் பதிலாக கடலை, சோளம் பக்கம் திரும்பினோம். நான் விவசாயம் செய்யத் தொடங்கும்போது சாமந்தி, மரிக்கொழுந்து போன்ற பூ விவசாயமும் செய்து வந்தேன். எத்தனை ஆண்டுதான் ஒரே மாதிரியான விவசாயம் செய்வது. ஒரு மாறுதலுக்காக வேறு விவசாயம் செய்யலாமென யோசித்தேன். அப்போதுதான் பாம்ரோஸ், லெமன் கிராஸ், மரிக்கொழுந்து போன்ற புல்வகை செடிகளில் இருந்து எண்ணெய் எடுத்து விற்பனை செய்யலாம் எனத் தெரிய வந்தது. பாம்ரோஸ், லெமன்கிராஸில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் விற்பனையில் எனக்கு ஏற்கனவே அனுபவம் இருக்கிறது. அதனால், நமது நிலத்தில் சொந்தமாக இதை பயிரிட்டு அதிலிருந்து எண்ணெய் எடுத்து வருமானம் பார்க்கலாம் என முடிவுசெய்து இந்தப் புல்களை வளர்த்து வருகிறேன்.

எனக்குச் சொந்தமாக இருக்கிற நிலத்தில் தண்ணீர் வசதி குறைவு என்பதால் நீர் வசதி இருக்கிற 12 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து இந்த விவசாயம் செய்து வருகிறேன். அதில் 6 ஏக்கரில் பாம்ரோஸும், 2 ஏக்கரில் லெமன் கிராஸும் விதைத்திருக்கிறேன். மீதமுள்ள இடத்தை மரிக்கொழுந்து விதைக்க தயார் செய்து வருகிறேன். உத்தரகாண்ட் மாநிலத்தில் இருக்கிற பிஆர்சி1 என்கிற பாம்ரோஸ் விதைகளை வாங்கிவந்து எனது நிலத்தில் விதைத்தேன். ஒன்றரை கிலோ விதைகளை வாங்கிவந்து எனது ஒரு ஏக்கர் நிலத்தில் விதைத்து, அதிலிருந்து வளர்ந்த பாம்ரோஸில் இருந்து விதைகள் எடுத்து 6 ஏக்கரில் விதைத்திருக்கிறேன். இதனை விதைக்கும்போது மண்ணை நன்றாக கட்டி இல்லாமல் உழ வேண்டும். மூன்றில் இருந்து நான்கு உழவு செய்து மண்னை நன்றாக லேசாக ஆக்கி அதன்பின் தண்ணீர் விட்டு இந்த விதைகளை தூவினாலே போதுமானது. இதனை விதைப்பதற்கு மண்ணோ, பருவமோ தேவையில்லை. எல்லா மண்ணிலும் எல்லா பருவத்திலும் இதை வளர்க்க முடியும் என்பதால் விவசாயிகள் எப்போது வேண்டுமானாலும் இதனை வளர்க்கலாம்.

பாம்ரோஸைப் பொருத்தவரை ஒரு முறை விதைத்தாலே போதுமானது. சரியாக பராமரித்து வந்தால் அதில் இருந்து மூன்று முதல் ஐந்து வருடங்கள் வரை பயன்பெறலாம். பாம்ரோஸ் விதைகளை தூவியதில் இருந்து அடுத்த நான்கு மாதத்தில் அந்த பாம்ரோஸை அறுவடை செய்ய ஆரம்பிக்கலாம். அதாவது, நிலத்தில் இருந்து ஒன்று முதல் ஒன்றரை இன்ச் அளவில் பாம்ரோஸை விட்டுவிட்டு அதற்கு மேலே இருக்கிற பாம்ரோஸை வெட்ட ஆரம்பிக்கலாம். அப்படி வெட்டும்போது ஒரு ஏக்கரில் இரண்டு முதல் மூன்று டன் அளவிலான பாம்ரோஸ் நமக்கு கிடைக்கும். அதேபோல, அடுத்தடுத்த மூன்று மாதங்களில் இந்த பாம்ரோஸ் செடிகளில் இருந்து அறுவடை செய்யத் தொடங்கலாம். முதல்முறை மட்டும்தான் நான்கு மாதத்தில் அறுவடை. அதற்கடுத்து மூன்று மாதத்தில் ஒரு முறை அறுவடை செய்யலாம். அதேபோல, முதல் முறை அறுவடை செய்யும்போது மட்டும்தான் ஒரு ஏக்கருக்கு 3 டன் வரை பாம்ரோஸ் கிடைக்கும். அதற்கடுத்த அறுவடைகளில் 4 டன், 5 டன் என கூடிக்கொண்டேபோகும். நல்ல முறையில் பராமரித்து வந்தால் அதிகபட்சமாக ஒரு ஏக்கர் பாம்ரோஸில் இருந்து 10 டன் வரை அறுவடை செய்யலாம். அதேபோல, ஒவ்வொரு அறுவடையின் போதும் கட்டாயம் களை எடுக்க வேண்டும். உரம் கொடுக்க வேண்டும். பத்து நாட்களுக்கு ஒருமுறை நிச்சயமாக தண்ணீர் கொடுக்க வேண்டும். மானாவாரியிலும் பாம்ரோஸை வளர்க்கலாம். ஆனால், இந்தளவு அதிலிருந்து பலன் பெற முடியாது. இப்படி கிடைக்கும் பாம்ரோஸ் புல்லில் இருந்து எண்ணெய் எடுத்து விற்பனை செய்யலாம்.

அதாவது ஒரு டன் பாம்ரோஸில் இருந்து இரண்டு முதல் இரண்டரை கிலோ வரை எண்ணெய் எடுக்கலாம். ஒரு கிலோ எண்ணெய் தற்போதைய விலை நிலவரப்படி ரூ 2150க்கு விற்பனை ஆகிறது. அந்த வகையில் பாம்ரோஸ் மற்றும் லெமன்கிராஸில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயில் நல்ல வருமானம் பார்க்கலாம். இந்த புல்லை எந்த ஆடு, மாடுகளும் மேயாது. எந்த மணற்பரப்பிலும் வளர்க்கலாம். எந்த நோயும் தாக்காது. இதுதான் இதன் கூடுதல் சிறப்பு. இதிலிருந்து கிடைக்கும் எண்ணெயை சோப்பு கம்பெனிகள் வாங்கிச் செல்வதால் விற்பனை செய்வதும் சுலபம்தான். இந்த புல்லில் இருந்து எண்ணெய் எடுக்கும் இயந்திரத்தை நானே எனது நிலத்தில் வைத்திருப்பதால் எனது நிலத்தில் கிடைக்கும் புல்களை வைத்து நானே எண்ணெய் எடுத்து நானே விற்பனை செய்து வருகிறேன். குறைந்த செலவில் நிறைவான வருமானம் பெற வேண்டுமென்றால் இந்த விவசாயம் கட்டாயம் உதவும் என மகிழ்ச்சி பொங்க பேசுகிறார் மோகனசுந்தரம்.
தொடர்புக்கு:
மோகனசுந்தரம் : 99526 80307.

Related posts

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு

புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது