அதிநவீன ரோபோ உதவியுடன் ஒரே நாளில் 6 அறுவை சிகிச்சை: காவேரி மருத்துவமனை சாதனை

சென்னை: ரோபோ உதவியுடன் ஒரே நாளில் 6 அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து, காவேரி மருத்துவமனை சாதனை படைத்துள்ளது. காவேரி மருத்துவமனையில் பயன்படுத்தி வரும் அதிநவீன டாவின்சி 4வது தலைமுறை ரோபோ சாதனம், துல்லியமான மற்றும் குறைந்தபட்ச ஊடுருவல் செயல்திறனுடன் சிகிச்சை அளித்து வருகிறது. இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு அதிக துல்லியத்துடன் சிக்கலான மற்றும் நுட்பமான அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக மேற்கொள்ள உதவுகிறது.

அறுவை சிகிச்சைக்கு பிறகு நோயாளி இயல்பு நிலைக்கு வரும் கால அளவை இது குறைக்கிறது. இதனை பயன்படுத்தி ஒரே நாளில் 6 அறுவை சிகிச்சைகளை காவேரி மருத்துவமனை வெற்றிகரமாக செய்துள்ளது. மேலும் இதன் உதவியுடன் 100க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காவேரி மருத்துவமனை மருத்துவர் சுவாமிநாதன் கூறியதாவது:

ரோபோ சாதனத்தின் மணிக்கட்டுகளை 360 டிகிரி நகர்த்த இயலும், இதன் மூலம் சிக்கலான பித்தப்பை அகற்றல், குடலிறக்கத்தை சரிசெய்தல், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, கருப்பை நீக்கம், தானம் அளிப்பவரிடமிருந்து கல்லீரலை வெட்டி எடுத்தல் மற்றும் புற்றுநோயியல் அறுவை சிகிச்சைகள் போன்ற சிக்கலான அறுவை சிகிச்சைகளை இணையற்ற துல்லியத்துடன் செய்ய இந்த சிறப்பம்சம் நிபுணர்களுக்கு உதவுகிறது.

ரோபோடிக் அறுவை சிகிச்சைகள் மருத்துவமனையில் நோயாளிகள் தங்கியிருக்கும் காலத்தை 50 சதவீதம் குறைப்பதாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது, மற்ற அறுவை சிகிச்சை முறைகளுடன் ஒப்பிடும்போது நோயாளிகள் வழக்கமான இயல்பு வாழ்க்கைக்கு விரைவாக திரும்ப முடியும். அறுவை சிகிச்சை நிபுணர்கள், மயக்க மருந்து நிபுணர்கள் மற்றும் செவிலியர் குழுவுடன் ஒருங்கிணைந்து சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை உட்பட ஒரே நாளில் 6 அறுவைசிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து ஒரு புதிய சாதனையைப் படைத்திருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி