அக்கம் பக்கத்தில் வீடு இல்லாததை பயன்படுத்தி பூட்டிய வீட்டை உடைத்து ஒரு வாரமாக கொள்ளை: மூன்று பேர் கைது

ஆவடி: வீட்டின் பூட்டை உடைத்து ஒரு வாரமாக கொள்ளையடித்து வந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை, வேளச்சேரியைச் சேர்ந்தவர் சுனில் குமார்(45). ஆன்லைன் வர்த்தகம் செய்து வருகிறார். இவருக்கு மனைவி, மூன்று மகள்கள் மற்றும் இரு மகன்கள் உள்ளனர். இவருக்கு ஆவடி அடுத்த பட்டாபிராம், தண்டரை, ஜேம்ஸ் தெருவில் பூர்விக வீடு உள்ளது. சுனில்குமார் பணியின் நிமித்தமாக வேளச்சேரியில் குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். எனவே, பூர்வீக வீடு கடந்த ஓராண்டாக பூட்டி கிடந்துள்ளது.

இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், தினமும் மின்சார ரயிலில் வந்திறங்கி, டிவி, பித்தளை பாத்திரங்கள் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை வீட்டின் பூட்டை உடைத்து கோணியில் சிறுக சிறுக திருடிச் சென்றுள்ளனர். அந்த வழியாக சென்றவர்கள் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு சுனில்குமாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இது குறித்து சுனில்குமார் நேற்றுமுன்தினம் பட்டாபிராம் போலீசாரிடம் புகார் அளித்தார். இந்த சம்பம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் அக்கம் பக்கத்தில் வீடு இல்லாததே கொள்ளைபோனதுக்கு காரணம் என தெரிய வந்தது. மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் ஏற்கெனவே வீடு புகுந்து கொள்ளை அடிக்கும் கும்பல் என தெரிய வந்தது. இதனை அடுத்து, பெரம்பூரைச் சேர்ந்த விக்னேஷ்(37) வியாசர்பாடியைச் சேர்ந்த முரளி கிருஷ்ணன்(25) கடலூரைச் சேர்ந்த சூர்யா பிரகாஷ்(24) ஆகிய மூன்று நபர்களை அன்றே கைது செய்து அவர்களிடமிருந்து கொள்ளைபோன பித்தளை பாத்திரம், டிவி போன்ற பொருட்களை மீட்டனர். பின்னர், இந்த மூன்று நபர்களையும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related posts

விக்கிரவாண்டியில் திமுகவை வெற்றிபெற செய்யுங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

ஜூலை-05: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு