சாலையோரம் நின்ற வாகனங்கள் மீது சிமென்ட் லாரி மோதி பெண் உள்பட 5 பக்தர்கள் பலி: புதுக்கோட்டை அருகே பரிதாபம்

திருமயம்: புதுக்கோட்டை அருகே சாலையோரம் நின்ற வாகனங்கள் மீது சிமென்ட் லாரி மோதிய விபத்தில் ஒரு பெண் உட்பட 5 பக்தர்கள் பலியாகினர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகேயுள்ள நமணசமுத்திரம் பகுதியில் திருச்சி- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் நமணசமுத்திரம் காவல் நிலையம் உள்ளது. இந்த காவல் நிலையத்திற்கு எதிரே 2 டீ கடைகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஓம் சக்தி கோயில் பக்தர்கள் 16 பேர் ராமேஸ்வரத்திற்கு ஒரு வேனிலும், சென்னை‌ மற்றும் திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து பிள்ளையார்பட்டி நோக்கி சென்ற ஐயப்ப பக்தர்கள் 22 பேர் மற்றொரு வேனிலும், திருக்கடையூரிலிருந்து ராமேஸ்வரத்திற்கு காரில் சென்ற 6 ஆறு பேர் கொண்ட குடும்பத்தினர் அந்த டீ கடைகள் முன் தங்கள் வாகனங்களை நிறுத்தினர்.

பின்னர் சிலர் வாகனத்தில் இருந்தபடியும் சிலர் டீக்கடையில் அமர்ந்தபடியும் டீ குடித்து கொண்டிருந்தனர். அப்போது அரியலூரிலிருந்து சிவகங்கைக்கு சிமென்ட் ஏற்றிச் சென்ற ஈச்சர் லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற பக்தர்கள் வந்த மினி வேன் மற்றும் கார் மீது அடுத்தடுத்து மோதியது. மேலும் டீ கடையில் டீ குடித்துக் கொண்டிருந்த மற்றும் சாலையோரம் நின்று கொண்டிருந்த பக்தர்கள் மீதும் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சாந்தி (55), ஜெகனாதன்(60), மதுரவாயலைச் சேர்ந்த சுரேஷ்(34), சென்னையைச் சேர்ந்த சதீஷ் (25), திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோகுலகிருஷ்ணன் (26) ஆகிய 5 பேரும் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருமயம் தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் 5 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் 3 வயது சிறுமி உட்பட 19 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கபப்ட்டு வருகிறது. சிமென்ட் லாரி டிரைவர் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு சேர்ந்த மணிகண்டன் (39) காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து நமணசமுத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

* 2 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 இலட்சம் மற்றும் லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். இதனடிப்படையில், புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பலத்த காயமடைந்த 5 பேருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சத்திற்கான காசோலைகளையும், லேசான காயமடைந்த 14 பேருக்கு தலா ரூ.50,000-க்கான காசோலைகளையும், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, புதுக்கோட்டை தொகுதி எம்எல்ஏ முத்துராஜா ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வழங்கினர்.

Related posts

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு: மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி அறிவிப்பு

டெல்லியில் பிரதமர் மோடி உடன் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

மக்கள் பணி, கட்சிப் பணியை தொய்வின்றி தொடர்வோம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவு