சாலையில் வழிந்தோடும் கழிவுநீரை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் 20வது வார்டு பகுதியில் சாலையில் கழிவுநீர் வழிந்தோடுவதை அகற்றக்கோரி அப்பகுதி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 20வது வார்டில் புதுத்தெரு உள்ளது. இங்கு உள்ள ராஜாஜி மார்க்கெட் பின்புறம் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த, தெருவில் பாதாள சாக்கடை மேனுவல் வழியாக கழிவுநீர் நீண்ட நாட்களாக வெளியேறி வருகிறது.

இதனால், இப்பகுதியில் துர்நாற்றம் வீசி, கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி அங்கு வசிக்கும் பொதுமக்கள், குழந்தைகள் என அனைவரும், காய்ச்சல் டெங்கு போன்ற நோய்களால் பாதிப்படைந்து வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையால் மது பிரியர்கள் அங்கேயே குடித்துவிட்டு அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர், பாட்டில்கள் போட்டு செல்வதால் கழிவுநீருடன் கலந்து அதிகளவில் தொற்று நோய் பரவுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனைக்கண்டித்து, அப்பகுதி மக்கள் பெண்களுடன் புதுப்பாளையம் தெருவில் உள்ள ராஜாஜி மார்க்கெட் நுழைய வாயில் முன்பு 50க்கும் மேற்பட்டோர் நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்திற்கு போலீசார், போராடிய பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பொதுமக்கள் போராட்டத்தை கைவிடாததால் அவர்களை கைது செய்த போலீசார் தனியார் திருமண மண்டபத்தில் அடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து மாலை அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Related posts

தமிழகத்தில் ஜிகா வைரஸ் தீவிர கண்காணிப்பு; மக்கள் அச்சம் கொள்ள தேவை இல்லை: பொது சுகாதாரத்துறை தகவல்

அரசுக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் நட்டாவிடம் சரமாரி புகார் எதிரொலி; பாஜவுடனான கூட்டணியை முறித்துவிட ரங்கசாமி முடிவு: சுயேச்சை எம்எல்ஏக்களுக்கு ரகசிய தூது

அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தாயார் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்