பஞ்சராகி சாலையில் நின்ற கார் மீது மற்றொரு கார் மோதி 2 பேர் பலி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு பழவேலி அருகே பஞ்சராகி நின்றிருந்த கார் மீது மற்றொரு கார் மோதியதில் டிரைவர் உள்பட 2 பேர் பரிதாபமாக பலியாகினர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. மயிலாடுதுறை மாவட்டம், மல்லியம் ஆணைமலநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஜாபர்அலி. இவரது மகன் இய்யாதீன் (38).துபாயில் பணியாற்றி வந்த இவர், பக்ரீத் பண்டிகை கொண்டாடுவதற்காக துபாயில் இருந்து 15 நாட்கள் விடுமுறையில் வந்துள்ளார்.

நேற்று முன்தினம் சொந்த ஊரில் குடும்பதாதோடு பக்ரீத் பண்டிகை கொண்டாடிவிட்டு, மீண்டும் துபாய் செல்வதற்காக இரவு மயிலாடுதுறை அடுத்த குத்தாலம் மாதிரிமங்களம் பகுதியை சேர்ந்த காசிநாதன் என்பவரின் மகன் சந்துரு என்பவரின் வாடகை காரில், இய்யாதீன் தனது நண்பர்கள் அன்வர்சாதிக் (43), ஐய்யப்பன் (38) டிரைவர் சந்துரு ஆகிய 4 பேர் சென்னை விமான நிலையம் நோக்கி சென்றுக்கொண்டிருந்தனர். செங்கல்பட்டு பழவேலி பைபாஸ் சாலையில் சென்றபோது, கார் பஞ்சரானது. இதனால், காரை ஓரம் கட்டிவிட்டு டிரைவர் சந்துருவும் துபாய் செல்லவிருந்த இய்யாயுதீனும் கார் டிக்கியில் இருந்த ஸ்டெப்னி டயரையும், ஜாக்கியையும் எடுத்து கொண்டிருந்தபோது, சற்றும் எதிர்பாராத நேரத்தில் அதே திசையில் அதிவேகமாக ஒரு கார், பஞ்சராகி நின்ற கார் மீது பயங்கரமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

இதில் சந்துரு, இய்யாதீன் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார், 2 சடலங்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விபத்திற்கு காரணமான கார் மற்றும் டிரைவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தின்போது, பலியான இய்யாதீனுடன் வந்த நண்பர்கள் ஐய்யப்பன் மற்றும் அன்வர்சாதிக் ஆகியோர் மரக்கிளை உடைப்பதற்காக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

பாலாற்றின் குறுக்கே புதிய அணை கட்டும் முயற்சியை கைவிட வேண்டும்: ஆந்திர அரசுக்கு டிடிவி.தினகரன் வலியுறுத்தல்

ஆணவ குற்றங்களை தடுக்க சட்டம் இயற்றும்வரை உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துங்கள்: திருமாவளவன் வலியுறுத்தல்

பாமக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு