சாலை பணிகள் நிறைவடைந்ததால் ஊட்டி பைக்காரா படகு இல்லம் சுற்றுலா பயன்பாட்டிற்காக திறப்பு

*வாட்டர் ஸ்கூட்டர் அறிமுகம்

ஊட்டி : ஊட்டி அருகே பைக்காரா படகு இல்ல சாலை பணி நிறைவடைந்த நிலையில் சுற்றுலா பயன்பாட்டிற்காக நேற்று முதல் படகு இல்லம் திறக்கப்பட்டது. உல்லாச படகு மற்றும் வாட்டர் ஸ்கூட்டர் ஆகியவை புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டி-கூடலூர் சாலையில் சுமார் 22 கி.மீ. தொலைவில் பைக்காரா அணை அமைந்துள்ளது.

வனப்பகுதிக்கு மத்தியில் அமைந்துள்ள இந்த அணையில் உள்ள நீரைக் கொண்டு சிங்காராவில் நீர்மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகின்றன. இயற்கை எழில் கொஞ்சும் மலைகள் மற்றும் வனத்திற்கு நடுவே உள்ள இந்த அணையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள படகு இல்லம் உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகள் வந்து ைபக்காரா அணையில் படகு சவாரி செய்வது வழக்கம்.

ஊட்டி-கூடலூர் பிரதான சாலையில் இருந்து சுமார் 1.3 கிலோ மீட்டர் தூரம் வனப்பகுதி வழியாக பைக்காரா படகு இல்லத்துக்கு செல்லவேண்டும். படகு இல்லத்திற்கு செல்லக்கூடிய சாலையானது வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் 15ம் தேதி சாலை சீரமைப்பு பணிகள் துவங்கின. இதன் காரணமாக பைக்காரா படகு இல்லம் மூடப்பட்டு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

கான்கீரிட் சாலையாகவும், மழைநீர் தேங்கக்கூடிய இடங்களில் இன்டர்லாக் கற்கள் கொண்டும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் மூன்றரை மாதங்களுக்கு பின் பைக்காரா படகு இல்லம் சுற்றுலா பயணிகள் பயன்பாட்டிற்காக நேற்று திறக்கப்பட்டது. சுற்றுலாத்துறை அமைச்சர் ராமசந்திரன் இதனை திறந்து வைத்தார். அவர் கூறியதாவது:பைக்காரா படகு இல்லத்திற்கு கடந்த 3 ஆண்டுகளில் 5 லட்சத்து 1 ஆயிரத்து 177 உள்நாடு மற்றும் வெளிநாடு சுற்றுலா பயணிகள் வந்து சென்றுள்ளனர்.

இப்படகு இல்லத்திற்கு செல்லக்கூடிய சாலையானது தற்போது தரமான முறையில் சீரமைக்கப்பட்டுள்ளது. பைக்காரா படகு இல்லத்தில் தற்போது 8 இருக்கை மோட்டார் படகுகள் 17, 10 இருக்கைகள் கொண்ட மோட்டார் படகு ஒன்று, 15 இருக்கைகள் கொண்டமோட்டார் படகு தலா ஒன்று, 3 இருக்கைகள் கொண்ட அதிவேக (ஸ்பீடு) படகுகள் 7 என மொத்தம் 29 படகுகள் உள்ளன. தற்போது சுற்றுலா பயணிகளின் வசதிக்காக 5 இருக்கைகள் கொண்ட உல்லாச படகு மற்றும் இரண்டு வாட்டர் ஸ்கூட்டர் ஆகியவை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தால் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும். இவ்வாறு அமைச்சர் கூறினார். நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் கௌசிக், மாவட்ட வன அலுவலர் (நீலகிரி கோட்டம்) கௌதம், ஊட்டி ஆர்டிஓ மகராஜ், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மண்டல மேலாளர் குணேஷ்வரன், மாவட்ட சுற்றுலா அலுவலர் துர்காதேவி, பைக்காரா படகு இல்ல முதுநிலை மேலாளர் யுவராஜ், ஊட்டி படகு இல்ல மேலாளர் உதயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

கும்பகோணத்தில் ஓடும் பேருந்தில் நடத்துநர் மீது தாக்குதல் நடத்திய 3 இளைஞர்கள் கைது: சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் நடவடிக்கை

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்கிறது இந்திய அணி

ஜப்பானில் முதியோர்கள் எண்ணிக்கை புதிய உச்சம்