ஆர்எல்டி கட்சி விலகாது இந்தியா கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த பாஜ சதி: அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

ராஷ்டிரிய லோக்தள தலைவர் ஜெயந்த் சவுத்ரி கூட்டணியை விட்டு சென்று விடுவார் என்று வரும் செய்தி கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த பாஜ செய்யும் சதி என சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டினார்.
உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாடி தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டணியில் காங்கிரஸ்,ராஷ்டிரிய லோக்தளம்(ஆர்எல்டி) கட்சிகள் உள்ளன. மக்களவை தேர்தலில் காங்கிரசுக்கு 11 தொகுதிகளும், ஆர்எல்டிக்கு 7 தொகுதிகளையும் சமாஜ்வாடி ஒதுக்கியுள்ளது. ஆர்எல்டி கட்சி பாஜ கூட்டணியில் இணைந்து தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் அக்கட்சிக்கு 4 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் வதந்திகள் வந்தன.

இதுபற்றி உ.பி.துணை முதல்வர் பிரிஜேஷ் பதக்கிடம் கேட்டபோது,‘‘அரசியலில் எல்லா வாய்ப்புகளும் உள்ளன. பாரத மாதா என்ற அர்ப்பணிப்புடன் பாஜ பணியாற்றுகிறது.உபியின் வளர்ச்சிக்கு கட்சி பாடுபட்டு வருகிறது. இதில், யார் வந்தாலும் வரவேற்கப்படுவார்கள்’’ என்றார். இந்நிலையில், நேற்று வாரணாசியில் பேட்டியளித்த சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ்,‘‘ கட்சிகளை எப்படி உடைப்பது என்று பாஜவுக்கு தெரியும். அதே போல் எப்போது யாரை வாங்க வேண்டும் என்பதும் தெரியும். அமலாக்கத்துறை, வருமான வரித்துறையை எங்கு, எப்போது அனுப்ப வேண்டும் என்பதும் பாஜவுக்கு தெரியும். ஜெயந்த் சவுத்ரி கூட்டணியை விட்டு செல்ல மாட்டார். அவர் இந்தியா கூட்டணியில் இருந்தபடி பாஜவை வீழ்த்துவதற்கான திட்டங்களை செயல்படுத்துவார். கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக இது போன்ற வதந்திகளை பாஜ பரப்புகிறது’’ என்றார்.

Related posts

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு சிறுவன் மீது போக்சோ வழக்கு

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்