நாட்றம்பள்ளியில் தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்படும் கனரக வாகனங்களால் விபத்து ஆபத்து: நடவடிக்கை எடுக்க கோரிக்கை


நாட்றம்பள்ளி: நாட்றம்பள்ளியில் தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான நிலையில் லாரிகளை நிறுத்தும் டிரைவர்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. சென்னை பெங்களூர் இடையே சாலை வழியாக போக்குவரத்து இடையூறு இல்லாமல் இருக்க தேசிய நெடுஞ்சாலை 6 வழிச்சாலையாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை வழியாக தினசரி கார், பஸ், லாரி, கன்டெய்னர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் அடிக்கடி தொடர் விபத்துக்கள் ஏற்பட்டு பலர் உயிரிழந்து வருகின்றனர். இதனைப் போக்க அதிக போக்குவரத்து நிறைந்த பகுதிகளில் மேம்பாலங்கள் மற்றும் சிறு பாலங்கள் அமைக்கப்பட்டு இதன் மூலம் மக்கள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் லட்சுமிபுரம், பையனப்பள்ளி கூட்ரோடு, ஆத்தூர் குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி தொடர் விபத்து ஏற்பட்டு பொதுமக்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்து வருகின்றன.இந்நிலையில் நாட்றம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி செல்லும் கனரக லாரிகளை தேசிய நெடுஞ்சாலையிலேயே நிறுத்திவிட்டு அதன் டிரைவர்கள் அருகே உள்ள பகுதிகளுக்கு சென்று விடுகின்றனர்.

இதனால் அதிவேகமாக வரும் வாகனங்கள் இதுபோன்று சாலையில் இடையூறாக நிற்கும் லாரிகள் இருப்பதை அறியாமல் அதன் மீது மோதி விபத்துக்குள்ளாகும் அவல நிலை உள்ளது. எனவே, இதுபோன்று தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்படும் கனரக வாகனங்களை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

பயணிகளின் உடைமைகளை தவறவிடுவதில் ஏர் இந்தியா முதலிடம்!

3 புதிய குற்றவியல் சட்டம்.. மருத்துவர்களை சிறையில் அடைக்கும் தண்டனை பிரிவை நீக்குக: அமித்ஷாவுக்கு கலாநிதி வீராசாமி எம்பி கடிதம்..!!

தேவை அதிகரிப்பதால் தோழி விடுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு முடிவு