கலவரத்தால் வீடுகள், உடைமைகள் நாசம்; மணிப்பூர் முகாம்களில் 50,000 மக்கள் தவிப்பு: ஒருமாதம் கடந்தும் வீடு திரும்ப முடியாமல் வேதனை

இம்பால: மணிப்பூர் மாநிலத்தில் கலவரம் நீடிப்பதால் வீடு, உடைமைகளை இழந்த 50 ஆயிரம் மக்கள் முகாம்களில் ஒருமாதத்திற்கும் மேல் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே 3ம் தேதி இடஒதுக்கீடு பிரச்னையில் நாகா குக்கி மற்றும் மெய்டீஸ் இன மக்கள் மோதிக்கொண்டது ெபரிய கலவரமாக வெடித்தது. இதில் 90க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். கலவரத்தை கட்டுப்படுத்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா 4 நாட்கள் தங்கினார். ஆனாலும் கலவரம் முடிவுக்கு வரவில்லை. மணிப்பூரில் இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட 50,000 க்கும் மேற்பட்டோர் தற்போது மாநிலம் முழுவதும் உள்ள 349 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஒருமாதம் கடந்தும் அவர்கள் வீடு திரும்ப முடியாமல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை மணிப்பூர் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு அமைச்சர் டாக்டர் ஆர்.கே.ரஞ்சன் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,’ மணிப்பூர் மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும், குறிப்பாக பாதிப்புக்குள்ளான பகுதிகளில், மீட்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கலவரத்தின் போது காவல்நிலையங்களை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட 990 ஆயுதங்களும், 13,526 வெடிமருந்துகளும் அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த புதிய நடைமுறை உருவாக்கப்பட்டுள்ளது.

வெளிமாநிலங்களில் இருந்து 35,000 மெட்ரிக் டன் கட்டுமானப் பொருட்கள், எரிபொருள்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் 2,376 சரக்கு லாரிகளில் மணிப்பூருக்கு கொண்டு வரப்பட்டுள்ளன’ என்று தெரிவித்தார். இதற்கிடையே மணிப்பூரில் 15ம் தேதி வரை இணைய வசதிமுடக்கப்பட்டு உள்ளது.

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு