கலவரத்தை தூண்ட முயற்சி, கலைஞர் குறித்து அவதூறு சாட்டை துரைமுருகன் கைது: உச்சநீதிமன்றம் விதித்த நிபந்தனையை மீறியதால் அதிரடி

திருச்சி: உச்சநீதிமன்ற நிபந்தனையை மீறி தொடர்ந்து முன்னாள் முதல்வர் கலைஞர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சாட்டை துரை முருகனை போலீசார் தென்காசியில் நேற்று கைது செய்தனர். நாம் தமிழர் கட்சியின் துணை பொது செயலாளர், செய்தி தொடர்பாளர், கொள்கை பரப்பு செயலாளரான யூடியூபர் சாட்டை துரைமுருகன், தனது சாட்டை யூடியூப் சேனலில் தமிழக அரசுக்கு எதிராக பல்வேறு அவதூறு கருத்துகளை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில், தென்காசி மாவட்டம் குற்றாலத்துக்கு நேற்றுமுன்தினம் வந்திருந்த சாட்டை துரைமுருகன், தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தார். நேற்று காலை தென்காசி சென்ற திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார், விடுதியில் இருந்த சாட்டை துரைமுருகனை கைது செய்ததோடு, அவரது கார் டிரைவரையும் அழைத்து கொண்டு சாலை மார்க்கமாக நேற்று மதியம் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள மாவட்ட சைபர் கிரைம் அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

பின்னர், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது முன்னாள் முதல்வர் கலைஞரை அவதூறாக பேசிய வழக்கில் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார், அவரை கைது செய்தனர். நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன், ஏற்கனவே தமிழக அரசு மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் குறித்து அவதூறு கருத்துகளை கூறியதாக கைது செய்யப்பட்டார். பின்னர் மாஜிஸ்திரேட் நீதிமன்றங்கள், செசன்ஸ் நீதிமன்றங்கள், உயர்நீதிமன்றங்களில் அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவதூறு கருத்துக்களை கூறக்கூடாது என்று எச்சரித்து நிபந்தனை அடிப்படையில் ஜாமீனில் விடுவித்தது. இதைத் தொடர்ந்தும் பல நேரங்களில் அவதூறாகவும், ஒருமையிலும் கருத்துக்களை தெரிவித்து வந்தார். இதனால் அவரது ஜாமீனை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போதும் சென்னை உயர்நீதிமன்றம் சாட்டை துரைமுருகனை எச்சரித்தது.

இந்நிலையில், என்ஐஏ அதிகாரிகளால் சென்னையில் சாட்டை துரைமுருகனிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும், பல முறை அவர் பொது மேடைகளிலும், யூடியூப் மூலமாகவும் அவதூறு கருத்துக்களை தெரிவித்து வந்தார். சமீபத்தில் நெல்லையில் வாலிபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் ஈடுபட்ட கூலிப்படையினருக்கு ஆதரவான கருத்துக்களை கூறி கலவரத்தை தூண்ட முயன்றதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக கரூர் மாவட்டம் குளித்தலை போலீசில் புகார் செய்யப்பட்டு, மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கலைஞர் குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

* 5 பிரிவில் வழக்கு
சாட்டை துரைமுருகன் மீது திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் 196 (1) தவறான ஆதாரங்களை காட்டுவது, 192 தவறான சாட்சியங்களை உருவாக்குவது, 353 அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுப்பது, 111 (1) (2) குற்றம் செய்ய தூண்டுதல், 3 (1) (ஆர்) (எஸ்) of the எஸ்சி, எஸ்டி (வன்கொடுமை தடுப்பு சட்டம்) 1989 என 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related posts

தென்னிந்தியாவில் கொட்டிய மழை வடமேற்கு, கிழக்கில் இல்லை; 230 மாவட்டத்தில் கன மழை 232ல் சராசரிக்கும் குறைவு: இந்திய வானிலை மையம் தகவல்

ஆண்கள் ஒற்றையர் பேட்மிண்டனில் இந்தியாவின் லக்சயா சென் காலிறுதிக்கு தகுதி!

இரவு பகலாக இந்திய ராணுவ வீரர்கள் அமைத்த பாலத்தில் கனரக வாகனங்கள் செல்ல அனுமதி!