ரிச்சா, தீப்தி போராட்டம் வீண் தொடரை வென்றது ஆஸி.

மும்பை: இந்திய மகளிர் அணியுடனான 2வது ஒருநாள் போட்டியில், 3 ரன் வித்தியாசத்தில் போராடி வென்ற ஆஸ்திரேலியா 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது. வாங்கடே மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 258 ரன் குவித்தது. பிட்ச்பீல்டு 63, எல்லிஸ் பெர்ரி 50, தஹ்லியா மெக்ராத் 24, அன்னபெல் சதர்லேண்ட் 23, ஜார்ஜியா வேர்ஹம் 22 ரன் எடுத்தனர். அலனா கிங் 28 ரன், கிம் கார்த் 11 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்திய பந்துவீச்சில் தீப்தி ஷர்மா 5, வஸ்த்ராகர், ஷ்ரேயங்கா, ஸ்நேஹ் ராணா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இந்திய வீராங்கனைகள் 7 கேட்ச் வாய்ப்புகளை கோட்டைவிட்டதும் ஆஸி. ரன் குவிப்புக்கு உதவியது. ஸ்நேஹ் ராணா பீல்டிங் செய்தபோது வஸ்த்ராகருடன் மோதிக்கொண்டதில் தலையில் காயமடைந்தார்.

இதனால் அவருக்கு மாற்று வீராங்கனையாக ஹர்லீன் தியோல் களமிறங்கினார்.அடுத்து 50 ஓவரில் 259 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 255 ரன் எடுத்து, 3 ரன் வித்தியாசத்தில் போராடி தோற்றது. அபாரமாக விளையாடிய ரிச்சா கோஷ் 96 ரன் (117 பந்து, 13 பவுண்டரி), மந்தனா 34, ஜெமிமா 44, யஸ்டிகா 14 ரன் எடுக்க, மற்ற வீராங்கனைகள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர்.

கடைசி வரை போராடிய தீப்தி ஷர்மா 24 ரன், ஷ்ரேயங்கா 5 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸி. பந்துவீச்சில் அன்னபெல் 3, வேர்ஹம் 2, கார்டனர், கிம் கார்த், அலனா கிங் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.ஆஸி. அணி 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றிய நிலையில், 3வது மற்றும் கடைசி போட்டி நாளை மறுநாள் நடக்கிறது.

Related posts

மின்சார கார் உற்பத்தி மையமாக திகழும் தமிழ்நாடு! : சென்னையில் மின்சார கார்கள் தயாரிக்க ஃபோர்டு ஆலோசனை!!

மராட்டிய மாநிலம் புனேவில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து!!

ரஜினிகாந்த் சீராகத் தேறி வருகிறார் என்பது நெஞ்சுக்கு நிம்மதி தருகிறது: கவிஞர் வைரமுத்து பதிவு