அரிசி, கோதுமை விற்பனை நிறுத்தம்; எங்களை கேட்டா திட்டங்களை அறிவித்தார்கள்?: மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு கேள்வி

புதுடெல்லி: திறந்த சந்தை விற்பனை திட்டத்தில் அரிசி, கோதுமை மாநிலங்களுக்கு விற்பனை செய்ய இந்திய உணவுக்கழகம் மறுத்து விட்டது குறித்து ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது. உணவு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் சுபோத்குமார் சிங் இதுபற்றி நேற்று கூறியிருப்பதாவது: விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. திடீரென எடுக்கப்பட்ட முடிவு அல்ல. வேண்டுமென்றே எடுக்கப்பட்டதும் அல்ல. இது ஒரு குறிப்பிட்ட மாநிலத்துக்கான திடீர் முடிவு அல்ல. முழு நாட்டிற்கும் உரியது. அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட்டது.

3-4 மாநிலங்கள் தங்கள் திட்டங்களுக்கு அதிக தானியங்களை கோரினால், மொத்த பங்கும் இந்த 3-4 மாநிலங்களுக்கு திருப்பி விடப்படும். நாடு முழுவதும் விலையை எப்படி கட்டுப்படுத்துவது? அது ஒரு பிரச்னையாக இருக்கும். எந்த மாநிலமும் எந்த திட்டத்தை அறிவித்தாலும், அவர்களும் எங்களிடம் கருத்து கேட்பதில்லை. எந்த மாநிலமும் இந்த திட்டத்திற்கு உணவு தானியங்களை வழங்குவீர்களா இல்லையா என்று கேட்கவில்லை. மாநிலங்கள் தாங்களாகவே அறிவிக்கின்றன. அதே சமயம் இந்திய உணவுக்கழகத்தின் தானிய கையிருப்பை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை ஒன்றிய அரசு தீர்மானிக்கிறது.

தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் (என்எப்எஸ்ஏ) கீழ் பதிவுசெய்யப்பட்ட சுமார் 80 கோடி ஏழைகளுக்கு ஒன்றிய அரசு ஏற்கனவே ரேஷன் கடைகள் மூலம் இலவச உணவு தானியங்களை வழங்கி வருகிறது. நடுத்தர, உயர் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த சுமார் 40-50 கோடி மக்களுக்கு சந்தையில் மலிவு விலையில் உணவு தானியங்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, மாநில அரசுகளுக்கு அரிசி மற்றும் கோதுமை விற்பனை செய்வதை ஒன்றிய அரசு நிறுத்தியுள்ளது. இந்த தானியங்களை தனியார் வியாபாரிகளுக்கு மாத இறுதி முதல் பொது நுகர்வுக்காகவிற்பனை செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

* ​​ஜூன் 1ம் தேதி நிலவரப்படி, 411 லட்சம் டன் தேவைக்கு பதில் இந்திய உணவு கழகத்திடம் 573.92 லட்சம் டன் உணவு தானியம் கையிருப்பில் உள்ளது.
* ஒன்றிய அரசு முடிவால் கர்நாடகா, தமிழ்நாடு, ஒடிசா, மேற்கு வங்கம், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இலவச ரேஷன் பொருள் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

Related posts

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை : 8 பேர் கைது

ஜூலை-06: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

முதல் டி20ல் தென் ஆப்ரிக்கா வெற்றி