தமிழகத்தின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு இன்ஜினாக இருக்கும் வாய்ப்பு நெல்லைக்கு உள்ளது

*கலெக்டர் கார்த்திகேயன் பெருமிதம்

நெல்லை : தமிழ்நாட்டின் அடுத்த வளர்ச்சியில் ஒருங்கிணைந்த நெல்லை மண்டலம் முக்கிய பங்களிப்போடு திகழ்ந்து கொண்டிருக்கிறது. மாநிலத்தின் விரைவான வளர்ச்சி சேவைகளை செயல்படுத்தக் கூடிய இன்ஜின் ஆக செயல்படும் வாய்ப்புள்ள பகுதியாக நெல்லை மாவட்டம் உள்ளது என நான் முதல்வன் திட்ட கருத்தரங்கில் கலெக்டர் கார்த்திகேயன் பேசினார்.

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்ட கல்லூரி, நிறுவன தலைவர்களுக்கான மாநில அளவிலான கருத்தரங்கம் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடந்தது. கருத்தரங்கிற்கு தலைமை வகித்து நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் பேசியதாவது:

இந்தியாவில் தொழிற்சாலைகளில் அதிகம் பணிபுரிபவர்கள் கொண்ட முதன்மை மாநிலம் தமிழ்நாடு. மேலும் இந்தியாவில் இரண்டாவது பெரிய பொருளாதாரம், ஆட்டோமொபைல் தலைநகரம், மெடிக்கல் டூரிசம், சார்ஸ் கேப்பிட்டல் ஆப் இந்தியா என ஒவ்வொன்றாக அடுக்கிக் கொண்டு போகக்கூடிய அளவிற்கு தொழிற்துறை மற்றும் நவீன தொழில்நுட்பத் துறைகளில் தமிழ்நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் சென்னை மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகள் முதற்கட்ட வளர்ச்சியாகவும், கோவை, திருச்சி மண்டலம், ஓசூர், கிருஷ்ணகிரி மண்டலத்திற்கு அடுத்து விரைவான வளர்ச்சி சேவைகளை செயல்படுத்தக் கூடிய இன்ஜின் ஆக செயல்படும் வாய்ப்பு இருக்கும் பகுதியாக நெல்லை மாவட்டம் திகழ்கிறது.

தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெடுப்புகள் மூலம் பெரிய அளவிலான முதலீடுகளை ஈர்த்து வருகிறது. தூத்துக்குடியில் பெரிய கார் நிறுவனங்கள் உள்ளிட்ட பல நிறுவனங்கள் வருகின்றன. இந்தியாவில் முதல் முறையாக நெல்லையில் உலகளாவிய தொழில்நுட்பத்தில் சோலார் பேனல் தயாரிக்கப்பட உள்ளது. சந்திரனுக்கு விண்கலம் போனாலும் அதற்கான எரிபொருள் மற்றும் என்ஜின் நெல்லை மகேந்திரகிரியில் இருந்து செல்கிறது. தமிழ்நாட்டின் அடுத்த வளர்ச்சியில் ஒருங்கிணைந்த நெல்லை மண்டலம் முக்கிய பங்களிப்போடு திகழ்ந்து கொண்டிருக்கிறது.

நவீன துறைகளுக்கு ஏற்றவாறு மாணவர்களின் திறன்களை ேமம்படுத்தி, அவர்களை தயார்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தில் தமிழ்நாடு அரசால் நான் முதல்வன் திட்டம் கொண்டு வரப்பட்டது. உயர்ந்த நாடுகளின் வளர்ச்சிக்கு இணையாக இன்னும் 10 ஆண்டுகளில் தமிழ்நாடும் மிகப் பெரிய அறிவு சார் பொருளாதாரமாக மாற வேண்டுமெனில் நவீன தொழில்நுட்பங்களை கற்றத் தர வேண்டும்.

இதற்கு தொழில்நுட்ப, தொழில் சார்ந்த அறிவோடு மாணவர்கள் இருக்க வேண்டும். அந்த மாணவர்கள் வாயிலாகவே அடுத்தகட்ட வளர்ச்சிக்கு செல்ல முடியும். இதற்கான பயணத்தில் நல்ல முன்னெடுப்பாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கருத்தரங்கம் நடக்கிறது. இவ்வாறு கலெக்டர் பேசினார்.

Related posts

ஹெலிகாப்டரில் எரிபொருள் இல்லாமல் ராஜ்நாத்சிங் தவிப்பு

போட்டி தேர்வுகளுக்காக ஜார்க்கண்டில் இன்டர்நெட் தடை: பாஜ கடும் விமர்சனம்

அரசு உருவாக்கி உள்ள வேலை வாய்ப்புகளில் முஸ்லிம் சமுதாயத்திற்கு உரிய பிரதிநிதித்துவம்: முதல்வருக்கு ஜவாஹிருல்லா கோரிக்கை