அரிசி கொம்பன் யானை தொடர்பான மற்றொரு பொதுநல வழக்கு: ரூ.25,000 அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்

டெல்லி: அரிசி கொம்பன் யானை தொடர்பாக தொடரப்பட்ட மற்றொரு பொதுநல வழக்கால் கடும் அதிருப்தி அடைந்த உச்சநீதிமன்றம் மனுதாரருக்கு ரூ.25,000 அபராதம் விதித்து அந்த மனுவையும் தள்ளுபடி செய்துள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மற்றும் தமிழ்நாட்டின் தேனி மாவட்ட மக்களை அச்சுறுத்தி வந்த அரிசி கொம்பன் யானை கடும் போராட்டத்திற்கு பின் பிடிபட்டது. அந்த யானை அண்மையில் நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை வனப்பகுதியில் விடப்பட்டுள்ளது. அரிசி கொம்பன் யானையை மீண்டும் கேரள வனப்பகுதிக்குள் விட உத்தரவு பிறப்பிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

இந்த நிலையில் அரிசி கொம்பன் யானை உயிருடன் உள்ளதா எங்கு, எப்படி உள்ளது என்பதை தெரிவிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி கேரளாவை சேர்ந்த வாக்கிங் ஐ பவுண்டேஷன் என்ற விலங்குகள் உரிமைகள் அமைப்பு பொதுநல வழக்கை தொடர்ந்தது. அது அவசியமற்ற வழக்கு என்று சாடிய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு அரிசி கொம்பன் யானை குறித்து 2 வாரங்களுக்கு ஒரு பொதுநல வழக்கு போடப்படுகிறது என்று தனது அதிருப்தியை தெரிவித்தது.

பொதுநல வழக்குகளால் சோர்வடைந்துவிட்டோம் என்று கூறிய நீதிபதிகள் யானை என்றால் அது இடம்மாறி கொண்டுதான் இருக்கும் என்றும் அந்த யானை எங்கு உள்ளது என்பதை நீங்கள் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் மனுதாரரிடம் கேள்வி எழுப்பினர். உயர்நீதிமன்றத்தை அணுகாமல் உச்சநீதிமன்றத்தை அணுகியது ஏன் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் நீதிமன்ற நடைமுறையை தவறாக பயன்படுத்தியதாக கூறி ரூ.25,000 அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்துள்ளனர்.

Related posts

ஆந்திராவில் இருந்து தேனிக்கு கடத்தி வரப்பட்ட 22 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல்!

கடலூர் ஆலை காலனி பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை!

தமிழ்நாட்டில் 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!