தாளம் போட்டுக் கொண்டே ஓவியம் வரையலாம்!

நன்றி குங்குமம் தோழி

தாளம் வைத்து சித்திரத்திற்கான வடிவத்தை உருவாக்குகிறார்கள் என்றால் நம்புவீர்களா..? அதெப்படி முடியும் என்று கேள்விகள் தோன்றும். ஆனால் இது உண்மையே. மேற்குவங்கப் பகுதியில் உள்ள ஓவியர்கள் பாடல் எழுதி, அதற்கு தாளம் இசைத்து அதன் இசைக்கேற்ப சித்திரங்களை வரைகின்றனர். இந்தப் பாடலையும், கலையையும் ‘பதர்கான்’ மற்றும் ‘படாசித்ரா’ என்று அழைக்கிறார்கள். அங்குள்ள ஓவியர்கள் அதிகபட்சமாக சதுப்பு நிலங்களின் செழுமையை வர்ணிக்கும் பாடலையும் அதன் உயிர் வடிவமாக ஓவியங்களையும் வர்ணிக்கின்றனர். அப்படி அவர்கள் வரைந்த படாசித்ராவில் விளை நிலங்கள், மீன் படங்கள், விவசாய படங்கள் போன்றவைகளே இடம்பெற்றிருக்கும்.

பஷ்சம் மேதினிபூர் பிங்கலா தாலுகாவை சார்ந்த நயா கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளின் சுவர்களிலும் வண்ணப்படங்கள் வரையப்பட்டுள்ளன. மொத்தத்தில் அந்த கிராமமே வண்ணமயமாக காட்சியளிக்கிறது அங்கு உள்ள ஓவியர்களின் கை வண்ணத்தால். இந்த ஓவியங்களின் காரணமாக நயா கிராமம் அந்த மாநிலத்தின் சுற்றுலாத்தளங்களில் ஒன்றாக திகழ்கிறது. அதுவும் மட்டுமில்லாமல் ‘‘படாசித்ரா’’ குகை ஓவியங்கள் மற்றும் குஹ சித்திர கலையிலிருந்து தோன்றியது எனவும் அந்த கிராமத்தில் உள்ள மக்கள் சொல்கின்றனர்.

அங்குள்ள ஓவியர்கள் தங்கள் ஓவியங்களுக்கு இயற்கை பொருட்களை கொண்டே நிறமிகளை தயார் செய்கின்றனர். உதாரணமாக, அடர் கருப்பு நிறத்திற்கு அரிசியை வறுத்து பயன்படுத்துகிறார்கள். சங்கு பூவிலிருந்து நீல நிறமும், சாமந்தி பூ, களிமண் இவற்றிலிருந்தும் நிறங்களை உருவாக்குகின்றனர். மேலும் இதன் மூலபொருட்கள் அனைத்து காலங்களிலும் கிடைப்பதில்லை. எனவே கிடைக்கும் போதெல்லாம் நிறங்களை உருவாக்குவதிலே அதிகம் கவனம் செலுத்தும் இவர்கள் அவ்வாறு சேகரித்த நிறங்களை கொட்டாங்குச்சியில் சேமித்து, அதன் பசை தன்மைக்காக விளாம் பழத்திலிருந்து எடுக்கப்படும் கோந்தினை பயன்படுத்துகிறார்கள்.

பெரும்பாலும் இவர்கள் ஆடைகளிலே சித்திரம் வரைகின்றனர். ஒரே துணியில் பல்வேறு படச்சுரூளை பயன்படுத்தி ஒரு கதையை முழுமையாக கூறிவிடுகின்றனர். மேலும் இவர்களின் கைவண்ணத்தில் வீட்டு அலங்கார பொருட்களும் மிகவும் வரவேற்கப்படுகின்றன. நயா கிராமத்தில் உள்ள மக்கள் அனைவருமே இந்த ஓவியக்கலையில் கைதேர்ந்தவர்களாக இருந்து வருகின்றனர். தற்போது உள்ள மக்கள், சதுப்பு நிலங்களின் இயற்கையையும், மக்களின் வாழ்வியலையும், சமூக இன்னல்களையும் இயற்கை பேரிடரையும் தங்களின் ஓவியங்கள் மூலம் வெளிப்படுத்துகின்றனர். இவர்களின் முன்னோர்கள் ராமாயணம், மகாபாரதம் போன்ற புராணக் கதைகளை சித்திரமாக்கி அதை மக்களிடம் ஒலி மற்றும் ஒளி வடிவில் கொண்டு சேர்த்தனர்.

அவர்கள் சித்திரங்களை பொதுவாக விற்பனைக்கு எடுத்து செல்லவில்லை. இருப்பினும் அவற்றை பயன்படுத்தி உணவு பெறுவதும், பணம் சம்பாதிப்பதுமாக இருந்தனர். ஆனால் காலப்போக்கில் இந்த ஓவியங்கள் விற்பனைக்கு வந்து, சந்தைகளில் பெரும் வரவேற்பை பெற்றது. ஆண்டு தோறும் நவம்பர் மாதம் நயா கிராமத்தில் ‘படா மயா’ திருவிழா நடைபெறும். அதில் பிங்கலாவை சுற்றி உள்ள மக்கள் அனைவரும் கலந்து கொண்டு டீ சர்ட்டுகள், மண்பானைகள், ஆடைகள், அலங்கார பொருட்கள், ஓவியங்கள் என தங்கள் கைவண்ணத்தால் உருவான பொருட்களை விற்பனை செய்கின்றனர். இவர்களின் பொருட்கள் உள்ளூர்களில் மட்டுமில்லாது அமெரிக்கா, இத்தாலி என அயல் நாடுகளிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

2020 வரை நல்ல முறையில் செயல்பட்டு வந்த இவர்களின் வியாபாரம், கொரோனா காலகட்டத்தில் மிகவும் கவலைக்கிடமானது. ஏற்கனவே வாழ்வின் அடிமட்டத்திலிருந்த இவர்களுக்கு அவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது. இருப்பினும் சமூக ஊடகங்களின் வாயிலாகவும், அவர்களின் விடா முயற்சியாலும் மீண்டும் சமநிலையினை அடைந்துள்ளனர். தலைமுறை தலைமுறையாக கடந்து மொத்த கிராமமும் படா சித்ரா எனும் ஓவியம் வரைதலையே முக்கிய வேலையாக கொண்டுள்ளது. தங்கள் பிள்ளைகளை படிக்கவும் வைத்து, தங்களின் பாரம்பரியமான ஓவியக் கலையையும் கற்றுக்கொடுத்து வருகின்றனர். மேலும் அவர்களின் கலைகளை கற்க வரும் மாணவர்களை ஆதரித்து, படாசித்ராவின் தொன்மையையும், பாரம்பரியத்தையும் கலையின் முக்கியத்துவத்தையும் விளக்கி அவர்களுக்கு ஓவியம் வரையவும் கற்றுக்கொடுக்கின்றனர்.

தொகுப்பு : காயத்ரி காமராஜ்

Related posts

சருமத்தைப் பாதுகாக்கும் வால்நட் எண்ணெய்!

பாராலிம்பிக்ஸில் பதக்கங்களை வென்று குவித்த இந்திய வீராங்கனைகள்!

ஸ்ட்ரீட் ஃபுட்ஸ்!